தினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் அமோக வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தவிர்த்து மற்ற 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது. டெபாசிட் இழக்காவிட்டாலும் ஆளும் அதிமுக அரசுக்கு இந்த தோல்வி பேரிடியாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், வெற்றிபெறுவதற்காக டிடிவி தினகரன் தரப்பு மேற்கொண்ட தேர்தல் தந்திரங்கள் பற்றி தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தினகரன் அணியில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தினகரன் உள்ளிட்ட அந்த அணியில் இருக்கும் அனைவருக்கும் இந்த வெற்றி முக்கியமானதாக கருதப்பட்டது.
இந்த வெற்றியை எளிதாக்குவதற்காக, 2.28 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ஆர்.கே.நகர் தொகுதியை 14 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, பழனியப்பன் என ஒரு தலைவரை நியமித்துள்ளனர்.
மூத்த உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள அதிமுகவைக் கணக்கில் கொண்டு, தேர்தல் பணிகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது தினகரன் அணி. அவர்களின் தலையாய பங்கு தொகுதியில் இருக்கும் சிறுபாண்மையின மக்களிடம் பாஜகவின் பிடியில் எடப்பாடி, ஒபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசு சிக்கியிருக்கிறது என்பதைப் புரிய வைப்பதாக இருந்தது.
வடசென்னை அதிமுக மாவட்டச் செயலாளரான எம்.எல்.ஏ வெற்றிவேல் தினகரன் அணியைச் சேர்ந்தவர். இதன்மூலம், வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் 90% கட்சி உறுப்பினர்களை தினகரனுக்காக தேர்தல் வேலைகளில் ஈடுபடச் செய்ததில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே, இரட்டை இலை சின்னத்துக்கு முதல்வர், துணை முதல்வர் என யார் ஓட்டு கேட்டு சென்றாலும், வட சென்னைப் பகுதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை எனச் சொல்லலாம்..
ஒரு வார்டுக்கு 800 வாக்காளர்கள் என்றால் அதில் 300 பேரை தினகரனுக்காக வாக்கு சேகரிக்கச் செய்ததுதான் இன்னொரு முக்கியமான தந்திரம். ஒரு வார்டின் பாதிக்கும் நெருக்கமான வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அவர் வெற்றிபெறுவதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
தினகரன் வேட்புமனுத்தாக்கல் செய்தபோதும், பிரச்சாரங்களில் ஈடுபட்ட போதும் அவருக்காக கூடிய கூட்டம் மற்ற கட்சியினரைக் காட்டிலும் மிகப்பெரியது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, அந்த வழியில் 300 பேர் குக்கரோடு நின்றுகொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்.
தினகரன் அணியைப் பொருத்தவரை இந்தத் தேர்தல் வெற்றி என்பது வாழ்வா? சாவா? போராட்டம் போன்றது. அதற்காக அவர்கள் இறங்கிய ஆழமும் ரொம்பப் பெரியது. தேர்தல் தந்திரங்கள் என அலங்கார வார்த்தைகளின் மூலம் வெற்றியைப் பெரிதாக பேசவைத்தாலும், அவரது வெற்றியில் பணப்பட்டுவாடாவும் முக்கியப் பங்கு வகிப்பதாகவே சொல்லப்படுகிறது.

தேர்தல் நடைபெற்ற 21ஆம் தேதி வரை இந்த பணப்பட்டுவாடா நடந்ததாகவும், ரூ.20 டோக்கன் வழங்கி அதன் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கியதாகவும், மேலும் பலர் பணம் கிடைக்காமல் ரூ.20 டோக்கன்களுடன் தினகரன் ஆட்களுக்காக விரக்தியுடன் இன்னமும் காத்துக் கிடப்பதாகவும் ஆர்.கே.நகர் தொகுதிவாசிகள் சொல்கின்றனர்.
தினகரனின் பிரச்சாரத்துக்கு மட்டுமல்ல, அதிமுகவின் பிரச்சாரத்துக்கும் ஏராளமான பணம் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில், சுமுகமான தேர்தல் என்றோ, சுதந்திரமான தேர்தல் என்றோ இதை எப்படி சொல்ல முடியும்? ஒரு வகையில் இந்தத் தேர்தலில் தினகரன் ஜெயித்தாலும், தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்.
- ச.ப.மதிவாணன்
படம் - அசோக்குமார்