"இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தங்கள் சொந்தங்களின் கதி என்னவென்று தெரியாத நிலையில், துயரம் கவ்விய கொந்தளிப்பான மனநிலையிலும் குமரிக் கடலோர கிராமங்களில் திரண்டிருந்த ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு சூடான சொற்கள் இருந்தன. தங்கள் துயரத்தை, பரிதவிப்பை அரசு எந்திரம் மட்டுமல்ல; கடற்கரைக்கு அப்பால் நிலப்பரப்பில் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று அவர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம் இன்னும் செவிகளில் எதிரொலிக்கிறது. நடுக்கடலிலும் கடலோரத்திலும் மீனவர் வாழ்வின் துயரை, அவர்களது வாழ்க்கை பற்றிய புரிதலை, பரந்துபட்ட பொதுசமூகத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் முயற்சியாக அது விரிவடைந்தது" - இவை ஊடகத்துறையில் சிறப்பாக இயங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராம்நாத் கோயங்கா விருதை பெற்றிருக்கும் முதல் தமிழ் பத்திரிகையாளரான குணசேகரனின் வார்த்தைகள்.
ஒகி புயல் பாதிப்பில் பேரிழப்பை சந்தித்த கன்னியாகுமாரி மாவட்ட மக்களின் இழப்புகளையும், துயரங்களையும் தனது செயல்பாட்டால் அரசுக்கும் வெளி உலகுக்கும் கொண்டு சேர்த்த பணியை அங்கீகரித்து இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றும் குணசேகரன் 2017ஆம் ஆண்டு இறுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுழற்றிப் போட்டு, ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வை பாதித்த ஒகி புயலின் உண்மை நிலவரத்தை களத்தில் சிறப்பாகச் செயலாற்றி வெளிக்கொண்டுவந்தவர். கடலுக்குள் தொலைந்த மீனவர்களின் எண்ணிக்கை, மத்திய மாநில அரசுகளால் குறைத்தே கூறப்பட்ட போது, உண்மையான இழப்பை அம்மக்கள் வாயிலாகவே வெளிஉலகுக்குத் தெரிவித்தவர். சமூக நீதி பார்வை கொண்ட ஊடகவியலாளரான குணசேகரன், தன்னுடைய கனிவான பேச்சுக்குப் புகழ்பெற்றவர். அனல் பறக்கும் விவாதங்களில், எல்லை மீறும் சத்தங்களை சரியான இடத்தில் நிறுத்தி நிதானப்படுத்துபவர். தன் கருத்துகளை அழுத்தமாக அமைதியாகப் பதிவுசெய்பவர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், அதன் நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் நூற்றாண்டை முன்னிட்டு 2005ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ராம்நாத் கோயங்கா விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு, அச்சு ஊடகங்களுக்கான புலனாய்வு செய்திப்பிரிவில் 'தி இந்து' இதழின் விஜயகுமார் இந்த விருதைப் பெற்றுள்ளார். காட்சி ஊடகப்பிரிவில் புலனாய்வு செய்திக்காக இந்த விருது 'இந்தியா டுடே டிவி'யின் ஆனந்த் குமார் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது. காட்சி ஊடகப் பிரிவில் பிராந்திய மொழிகளுக்கான சிறந்த ஊடகவியலாளருக்கான விருது குணசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே விருது அச்சு ஊடகப் பிரிவில் 'லோக்சத்தா' நிறுவனத்தின் நிஷாந்த் மற்றும் அசோக் ஆச்சார்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செய்திப்பிரிவில் NDTVயின் சுஷில் சந்திராவுக்கும் 'தி வயர்' சந்தியா ரவிஷங்கருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 29 ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் நடந்த விழாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.