நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் 18.11.19 திங்கட்கிழமை அன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வரை 20 நாட்கள் நடைபெறுகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால் ஜே.என்.யு மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டிருந்தனர். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறியும் ஜெ.என். பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்த போது, சஃப்தார்ஜன் கல்லறை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. போலீஸார் மாணவர்களை தடுத்து நிறுத்த தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியில் பார்வையற்ற ஒரு மாணவரை போலீஸ் தாக்கியுள்ளது. தக்கப்பட்டபோது அவர் நான் பார்வையற்றவன் என்று போலீஸிடம் தெரிவித்துள்ளார். அப்போது அந்த போலீஸ், ‘கண் தெரியலைனா எதுக்கு போராட்டத்துக்கு வர’ என்று தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தெரிவித்தார்.
இந்த விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டிக்கும் விதத்தில் இன்று டெல்லி காவல்துறை தலைமையகத்தின் முன்பு போராட்டம் நடத்த ஜெ.என்.யு மாணவர்கள் புறப்பட்டுள்ளனர்.