மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர். இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் ஆற்றல் அவருக்கு இருப்பதாக கருதியே நிதி அமைச்சக பொறுப்பில் நிர்மலாவை அமர வைத்தார் பிரதமர் மோடி. ஆனால், நடப்பாண்டின் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பல்வேறு நிலைகளில் இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதார சரிவில் அதிர்ச்சியடைந்துள்ளனர் இந்திய தொழிலதிபர்களும் பொருளாதார வல்லுநர்களும்!
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நடப்பாண்டு பட்ஜெட்டின் மூலம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என எதிர்ப்பார்த்தார் மோடி. அதற்கேற்ப பட்ஜெட்டுக்கு பிறகான நாட்களில் மோடியிடம் ஆரோக்கியமான விவாதத்தையும் முன் வைத்திருக்கிறார் நிர்மலா. ஆனால், அது சாத்தியப்படவில்லை.
முந்தைய ஆட்சி காலங்களில் 8 சதவீத அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த் வளர்ச்சி 5.8. சதவீதமாக குறைந்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் ‘ வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் ‘ என்கிற தகுதியை இழந்துள்ளது மோடி அரசு.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு நிதி ஆயோக் அமைப்பின் அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார் நிர்மலா சீதாராமன். அதில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் ஏற்றுக்கொண்டவர், பட்ஜெட்டில் அதற்கான தீர்வை முன்வைக்கவில்லை என்கிற ஆதங்கம் நிதி ஆயோக் அதிகாரிகளிடம் இருந்துள்ளது. இதனை பிரதமர் மோடியிடம் ஏற்கனவே விவரித்திருக்கிறார்கள்.
அதற்கேற்ப, வெளிநாடுகளின் முதலீடுகள் இந்தியாவுக்குள் வருவதில் தற்போது தேக்கம் அடைந்திருக்கிறது. அந்நிய செலவாணி இருப்பும் குறைந்திருப்பதுடன், பங்கு சந்தைகளும் வேகமான சரிவை சந்தித்து வருகின்றன. (இதனால் தங்கத்தில் முதலீடும், தங்கத்தின் விலை உயர்வும் அதிகரித்து வருகிறது) இந்த சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பும் (ஜி.டி.பி.) முந்தைய நிதி ஆண்டை ஒப்பிடும்போது குறைந்து வருகிறது, தொழில்துறை, விவசாயத்துறை, உள்கட்டமைப்பு துறைகளில் கடந்த இரு மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி இல்லை என பல குற்றச்சாட்டுகளை நிதி ஆலோசகர்களும் அதிகாரிகளும் மோடியிடம் முன்வைத்திருக்கிறார்களாம். அதனால் நிர்மலா சீராதாமனிடம் இருக்கும் நிதித்துறையை பியூஸ் கோயலிடம் ஒப்படைக்க மோடி ஆலோசிப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. அதனால் மத்திய அமைச்சரவையின் விரிவாக்கத்தின் போது இலாகா மாற்றமும் பெரிதளவில் நடக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், சுதந்திரதினத்தை முடித்துவிட்டு நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது நிதியமைச்சக உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார் பிரதமர் மோடி. அந்த ஆலோசனையில் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார் மோடி. குறிப்பாக, வேலைவாய்ப்பு அதிகரிக்காத நிலை, இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் குறைந்து வருவது, பொருளாதாரத்தில் நிலவும் தேக்கம், இதனால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படப் போகும் தாக்குதல் குறித்து பிரதமர் விரிவாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அப்போது அதிகாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட பதில்களில் பிரதமருக்கு திருப்தி இல்லை என்கிறது டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
சர்வதேச கரன்சி மற்றும் அந்நிய முதலீடு சரிவு உள்ளிட்ட வர்த்தக யுத்தத்தால் இந்திய பொருளாதார பிரச்சனையில் சிக்கலை அதிகரித்திருப்பதுடன் நுகர்வோர்களும் நம்பிக்கையை இழந்து வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.