சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செஞ்சீனப் படையின் இந்திய தாக்குதலைத் தாண்டி உலகின் ஒரே ஒரு இந்து நாடு நேபாள் என்று அழைக்கப்பட்ட நேபாளின் பிரதமர் சர்மா ஒலி, இந்திய பாரதிய ஜனதா கட்சியின் உயிர் நாடிக் கொள்கையான இந்துத்துவா இராமராஜ்யத்தின் கதாநாயகனான ‘இராமன் ஒரு நேபாளி என்றும், ராமன் பிறந்த அயோத்தி நேபாளில் உள்ளது என்றும் பறைசாற்றி உள்ளார். இதுவே நேபாளம் இந்தியாமீது விட்ட அசுர பாணமாகும்.
இராமாயணம் என்பது ஆரிய-திராவிட போராட்டத்தை சித்திரிக்கும் ஒரு கற்பனைக் கதை என்பதை பண்டித நேரு முதல் பல அறிஞர்களும், தலைவர்களும் ஐயமற பேசியும், எழுதியும் வந்துள்ளனர். இப்படி இருக்கையில், உச்ச நீதிமன்றம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி இராமர் பிறந்த இடம்’ என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்று அதற்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது.
மத நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட தீர்ப்பிற்கு சவாலாக மற்றொரு மத நம்பிக்கை அடிப்படையாகக் கொண்ட, ஆனால் வரலாறு என்ற பேரில், இந்து நாடு எனப்படும் நேபாளத்தின் பிரதமர் சர்மா ஒலி’, இராமன் ஒரு நேபாளி, அவர் பிறந்தது நேபாளத்தில் என்று ஒரு அணுகுண்டை வீசியுள்ளார்.
கே.பி.சர்மா ஒலி கூறுவதாவது, "ஸ்ரீராமன் ஒரு நேபாளி மட்டுமல்ல, அவர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்றும், இன்று பாரதிய ஜனதா அரசு இராமனுக்கு கட்டி வரும் கோவில் உள்ள அயோத்தி ‘போலியானது’. உண்மையான இராமன் பிறந்த அயோத்தி நேபாளில் உள்ளது'' என்றும் ஆணித்தரமாக பேசியுள்ளார். மேலும் நேபாள பிரதம அமைச்சர் கூறுவதாவது, நேபாளத்தின் "பிர்கஞ்ச்' என்ற நிலப்பரப்பிற்கு மேற்கே இராமனின் இராஜ்யம் அமைந்திருந்தது. இன்று இந்தியாவில் இராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இடமான அயோத்தி உண்மையான பிறப்பிடம் இல்லை. உண்மை இப்படி இருக்க, இந்திய பாஜக அரசானது நேபாளத்தின் கலாச்சார எல்லையை ஆக்கிரமித்துள்ளது என்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் நேபாள பிரதமர்.
மேலும், அண்மையில் நேபாளம் ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டு, அதிபரின் ஒப்புதலையும் பெற்று வெளிஉலகிற்கு அறிவித்து விட்டது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை எல்லாம் நேபாளம் தனது வரைபடத்தில் இணைத்துள்ளது என்று இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், கே.பி.சர்மா ஒலி, தன்னைப் பதவியிலிருந்து துரத்த இந்தியா சதிசெய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். சர்மா ஒலியின் ஆட்சியை சீனா பாதுகாத்து வருகிறது என்று இந்தியா கூறியுள்ளது.
இந்திய புராணங்களில் அதாவது தசாவதாரத்தில் அதாவது பத்து அவதாரத்தில் ஒன்பதாவது அவதாரம் புத்தர்’என்று விஷ்ணு புராணம் குறிப்பிட்டுள்ளது. அதைப்போல இராமரும் பத்தில் ஒரு அவதாரம் என்று பகர்கிறது. உண்மையில் புத்தர் கடவுளைப் பற்றி பேச மறுத்தவர் மட்டுமல்ல, வேத இதிகாச புராணக் கதைகளை நம்ப மறுத்தார். அவைகளை வெறுத்து ஒதுக்கினார். மக்களை மனித நேயத்துடனும், பகுத்தறிவுடனும் வாழ வலியுறுத்தினார். இப்படிப் பட்ட புத்தர் வேத வேள்வி களை எதிர்த்து, உயிர்ப்பலிகளை வெறுத்து புத்த சமயத்தை படைத்தார். இப்படிப்பட்ட மனிதனை விஷ்ணு புராணம், பத்து அவதாரங்களில் 9வது அவதாரம் என்று கூறுகிறது.
இந்தப் பின்னணியில் கலைஞர், இராமர் பிறந்தாரா? அவதரித்தாரா? என்று அயோத்தி பிரச்சனையில் கேள்வி கேட்டார். இராமர் பிறந்தார் என்றால் அவர் கடவுள் இல்லை, அவர் மனிதர். அவ்வாறு மனிதர் இல்லையென்றால் அதாவது அவதாரம் என்றால் பிறந்த இடம் என்று ஒன்று இல்லை என்றார், அதற்கு இன்றுவரை பதில் இல்லை. ஆக, அயோத்தியில் பிறந்தார் என்ற மத நம்பிக்கையில் அடிப்படையிலான வாதம். எனவே, நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, இந்து என்ற முறையில் மத நம்பிக்கையின் அடிப்படையில் ‘இராமர் ஒரு நேபாளி’ என்று கூறுகிறார். புத்தர் பிறந்த இடமான ‘கபிலவஸ்து’ லும்பினி என்ற இடத்தில் உள்ளது.
நேபாளத்தில் மாயாதேவிக்கும் சுத்தோதனருக்கும் அரச குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பது வரலாறு. பின்னர், விஷ்ணு புராணத்தில் புத்தர் 9வது அவதாரம் என்று கூறப்பட்டுள்ளதால், புத்தரும், இராமரும் அவதாரங்களே என்பது வரலாறும், புராணமும் கலந்ததாகும். இராமர் நேபாளி என்பதும் குற்றமில்லை என்பதை புத்தர் பிறந்த நேபாளமும், விஷ்ணு புராணமும் நிரூபிக்கின்றன என்றும் நேபாள பிரதமர் கூறுகிறார். நேபாளின் தலைமை அமைச்சர் கே.பி.சர்மாஒலி அவர்கள் பாஜகவைப் போல இராமர் மூலம் தனது நாட்டில் அரசியல் அதிகார சதுராட்டம் செய்து வருகிறார்.
இதுநாள்வரை பாஜக சங்பரிவாரங்கள் ராமர் பெயரால் நடத்திவந்த அரசியலுக்கு ஓர் இந்து நாடு விடுத்த சவாலாக இது அமைந்துள்ளது.