அ.தி.மு.க-தி.மு.க. இருதரப்பும் பதட்டத்துடன் கவனிக்கக்கூடியவராக இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அவரது அ.ம.மு.க.வுடன் எஸ்.டி.பி. கட்சி கைகோர்த்துள்ளது. பெரியளவில் கூட்டணி அமைக்காததற்கு பா.ஜ.க. போட்டுத் தந்த வியூகம்தான் காரணம் என திடீர் அதிர்ச்சி தருகிறது டெல்லி தரப்பு.
டெல்லி தலைமையுடன் தொடர்பில் உள்ள அறிவுஜீவிகள் குழுவின் தமிழக வி.ஐ.பி. ஒருவர் நம்மிடம், ""தேர்தல் களம் பற்றி தெரிந்துகொள்ள மத்திய உளவுத்துறையைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஒரு உளவுத்துறையை 3 மாதங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டார் மோடி. இதில் அரசு அதிகாரிகள் யாரும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் 16 ஸ்பெஷலிஸ்ட்டுகள் கொண்ட டீம் செயல்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியைத் தாண்டி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைப்பதில் இந்தக்குழு தந்த ஆலோசனைகள் முக்கியமானவை. அத்துடன், தினகரனைப் பற்றி மத்திய உளவுத்துறை சில விபரங்களை சுட்டிக்காட்டியிருந்தது. அதனை ஆராய்ந்தபோது எடுக்கப்பட்ட முடிவுதான் பலே வியூகம்'' என்றார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ""பா.ஜ.க.வுக்கும் பா.ஜ.க. கூட்டணி வைக்கும் அ.தி.மு.க.வுக்கும் எதிரான வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்குத்தான் செல்கிறது என தமிழகத்திலிருந்து, தங்களது குழுவினர் சொன்ன தகவல்களை டெல்லியில் இருக்கும் தலைமைக் குழு சீரியசாக எடுத்துக்கொண்டது. பா.ஜ.க.வை கடுமையாக தி.மு.க. விமர்சிப்பதாலும், பா.ஜ.க.வுக்கு எதிராக வேறு ஒரு கட்சியோ அல்லது புதிய முகமோ இல்லாததாலும்தான் இந்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை சுவீகரித்துக்கொள்ளும் வலிமையான ஒரு அரசியல் முகம் தேவை என மோடியின் உளவுத்துறை தேர்வு செய்த முகம்தான் தினகரன்.
மோடியையும் அமித்சஷாவையும் சந்தித்த இந்த டீம், "பா.ஜ.க.வையும் அ.தி.மு.க.வையும் தினகரன் இன்னும் கூடுதலாக விமர்சித்தால் தமிழகம் முழுவதுமுள்ள சிறுபான்மையினர் உள்ளிட்ட எதிர்ப்பு வாக்குகள் அவரது கட்சிக்குப் போக அதிக வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு போவதை தடுத்தாலே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும்' என தெரிவித்தது.
"ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து 1991-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. வாங்கிய 21 சதவீத வாக்குகள்தான் அக்கட்சியின் உண்மையான பலம். அ.தி.மு.க.வின் வலிமை ஜெ. மரணத்தின்போது 45 சதவீதமாக இருந்தது. இதில், தினகரனால் 7 சதவீதமும், எதிர்ப்புகளால் 8 சதவீதமும் என 15 சதவீத வாக்குகள் பிரிந்தாலும் 30 சதவீத வாக்குகள் அ.தி.மு.க.வில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளுக்குள்ள வாக்குகளை கணக்கிட்டால் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகி அ.தி.மு.க.வின் பலம் 37 சதவீதமாக இருக்கும்.
அதுவே, தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சதவீதத்தை கணக்கிட்டால் 30 சதவீதமாக (21+9) மாறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளான 8 சதவீதத்தையும் சேர்த்தால் 38 சதவீதமாக தி.மு.க. கூட்டணி வலிமைபெறும். அதனால்தான் எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க.வுக்கு போகாமல் தடுத்து வேறு திசையில் மாற்றிவிட்டால் தி.மு.க. கூட்டணியின் வலிமை குறையும்' என தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மோடி. அவர் தந்த அசைன்மென்ட்படி, தினகரனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் அமித்ஷா. அவரது மகன் இருமுறை சென்னைக்கு வந்து தினகரனை சந்தித்து விவாதித்து சென்றார்.
"உங்கள் தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கக்கூடாது. நீங்கள் சிறுபான்மையினருடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்; பா.ஜ.க.-அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கலாம்' என வலியுறுத்தப்பட்டதை ஒருகட்டத்தில் ஒப்புக்கொண்டார் தினகரன். இதுதான் பா.ஜ.க உருவாக்கியுள்ள ரகசிய கூட்டணி'' என்று சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அ.ம.மு.க. சீனியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘""பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, த.மா.கா., த.வா.க., முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்பட பல கட்சிகள் தினகரனிடம் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தின. காங்கிரஸ் தலைமையும் கூட எங்களிடம் பேசியது. பா.ஜ.க. பிடியில் இருந்ததால் எல்லா கட்சிகளையும் உதறினார் தினகரன். வலிமையான கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க. கூட்டணிக்குள் செல்லாத இந்திய தவுஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ.போன்ற முஸ்லீம் கட்சிகளை மட்டும் தனது கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டார் தினகரன். தி.மு.க. கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை தடுப்பதுதான் இதன் நோக்கம்''’ என்கின்றனர்.
பா.ஜ.க.-தினகரன் ரகசிய கூட்டணி பற்றி தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "எங்களின் தேசிய தலைமை வகுத்த வியூகங்களில் இதுவும் ஒன்று. கமல் தனித்து நிற்பதன் பின்னணியிலும் இந்த வியூகம் உண்டு. தி.மு.க. ஆதரவு ஓட்டுகள் சிதறவேண்டும். அதேசமயம், தினகரனுக்கும் குக்கர் சின்னம் கிடைத்து வலிமையாகிவிடக்கூடாது. புது சின்னம் கிடைத்தால் பரவாயில்லை என தீர்மானித்தோம். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தினகரனும் கமலும் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள்'' என்கிறார்கள்.