Skip to main content

ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்ட வச்சுட்டாரே இந்த ஆளு - ராஜூமுருகன் வருத்தம்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

திமுக கூட்டணியில் சி.பி.ஐ.எம் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் பேசுகையில்...

 

rajumurugan speech about s.vengatesan

 

“சு.வெங்கடேசனுக்கு ஓட்டுக் கேட்பது நானும், ஒட்டுமொத்த இந்தியாவும் கம்யூனிச இயக்கங்களுக்கு பட்டிருக்கிற நன்றிக்கடன். பல தொகுதிகளில் இவரெல்லாம் வேட்பாளரா என்று நினைக்கக்கூடிய சூழலில் இவர் நம் வேட்பாளர் என்று பெருமைப் படக்கூடிய ஒருவராக மதுரைத் தொகுதியில் சு.வெங்கடேசன் இருக்கிறார்.  25 ஆண்டுகளுக்கு மேலாக, இலக்கிய பணிகளில், அரசியல் மேடைகளில், களப் போராட்டங்களில் தனது வாழ்வை அர்பணித்த பெரும் போராளி சு.வெங்கடேசன். கீழடி விஷயத்தில் உரக்க குரல் கொடுக்கும் தமிழர், உத்தப்புரம் சுவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று போராடக்கூடிய நாயகன். எனவே, அவருக்கு எதிராக விழக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் செல்லாத ஓட்டுதான். 
 

எனக்கு மோடியின் மேல் என்ன கோபம் என்றால், ஏழை எளியவர்களுக்காகவே கட்டியமைக்கப்பட்ட இயக்கம் இந்த பொதுவுடமை இயக்கம். ஆனால், எல்லா மேடைகளிலும் ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்டி திட்டிப் பேச வச்சுட்டாரே இந்த ஆளு, என்பதுதான்.  இந்த ஏழைத்தாயின் மகன் ஒவ்வொரு முறை அரசியல் என்னும் விளக்கை தேய்க்கும்போது அதானி என்ற பூதமும், அம்பானி என்ற பூதமும், அமித்ஷா என்ற பூதமும் கிளம்பி வந்து மக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.  
 

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது பத்திரிக்கையாளர் சப்னம் ஹாஸ்மிக்கை சந்தித்தேன். அவர் அரசியல்வாதிகளை எதிர்த்து ஹல்லா போல் என்ற வீதி நாடகத்தை நடத்தும்போது பாதியிலேயே அடித்துக் கொல்லப்பட்ட பெரும் போராளி சஃப்தர் ஹாஸ்கிக்கின் தங்கை. அவரும் அண்ணன் வழியில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரிடம் நான் “உங்களுக்கும் கௌரி லங்கேஷ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என்ற அச்சம் இல்லையா”என்றேன்.   “நிச்சயமாக அந்த அச்சம் எங்களைப் போன்ற எல்லோருக்கும் இருக்கு. இன்றுவரை நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால், திரும்பவும் இந்த ஆட்சி வந்தால் நிச்சயமாக படுகொலை செய்யப்படுவோம்”என்று கூறினார்.  இது அவரது அச்சம் மட்டுமல்ல, இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்தமாக கருத்துரிமை நசுக்கப்படும், பல படுகொலைகள் நடக்கும், அதில் நம்முடைய உயிரும் போகும். 
 

மிக மோசமாக நம் இயற்கை வளங்களை சுரண்டிக்கொண்டு, சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் நம்மை பிரித்துக்கொண்டு ஒரு போர் சூழலை இங்கு உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பாசிட்டுகளுக்கு எதிராக பொதுவுடமை கட்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதன் பிரதிநிதியாக இருக்கும் சு.வெங்கடேசனுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் நமது ஒவ்வொரு ஓட்டயும் பதிவு செய்து மதுரையை மீட்போம், இந்தியாவை மீட்போம், ஜனநாயகத்தை மீட்போம்”. என்று பேசி முடித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்