நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், அ.தி.மு.க. கூட்டணியில் பயங்கரமான விரிசலை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க.வே அடுத்து என்ன ஆகும் என கதிகலங்கிப்போய் நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது' என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஒரு காரின் கண்ணாடி உடைந்ததுபோல் இருக்கிறது அ.தி.மு.க. கார் கண்ணாடி என்பது முகம் பார்க்கும் கண்ணாடியைப் போல் உடனே உடைந்துவிடாது. கார் கண்ணாடி உடைந்தாலும் அது உடனடியாகத் தெரியாது. காரில் ஏற்படும் சிறு அசைவுகள் உடைந்த பலமணி நேரம் கழித்து கார் கண்ணாடியை உப்புக் கற்களைப் போல கொட்ட வைத்துவிடும். அ.தி.மு.க. என்கிற கார் கண்ணாடியை உடைத்திருப்பது மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுவது தொடர்பாக நடந்த போராட்டங்கள்தான் என்கிறார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை நடந்துகொண்ட விதம், அமித்ஷாவுக்கும் மோடிக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசியது என்கிற கருத்தை ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் மறுத்திருக்கிறார் அமித்ஷா. "அ.தி.மு.க. எதிர்ப்பலையால் பா.ஜ.க. இங்கே ஜெயிக்க முடியவில்லை' என்கிறார் குரு மூர்த்தி. ஏற்கனவே மாநில ஆட்சியாளர்களை இம்போடென்ட் என்ற குருமூர்த்தியின் கருத்துக்குப் பதில் பேசாதது போலவே அ.தி.மு.க.வினர் மவுனம் சாதித்தாலும் குருமூர்த்தியின் இந்தக் கருத்து பா.ஜ.க.வின் தலைமையில் எதிரொலித்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு மோடி வந்தபோது கூடிய பெருங்கூட்டம் ஏன் வாக்குகளாக மாறவில்லை என மோடி கேட்கும் கேள்விக்கு அமித்ஷாவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. "தமிழகத்தில் எனக்கெதிரான அலை வீசியது என்பது உண்மையென்றால், நான் இந்தியாவில் மற்ற இடங்களில் பேசிய கூட்டங்களை விட அதிகமான மக்கள் திரள் தமிழகத்தில் பேசிய கூட்டத்திற்கு எப்படி வந்தது' என மோடி கேட்ட கேள்விக்கு தமிழக பா.ஜ.க.வினர் பதிலளித்துள்ளனர். அந்தப் பதில், புதிய அமைச்சரவை குறித்து கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தது.
எடப்பாடி பழனிச்சாமி, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு சற்று முன்புவரை தம்பிதுரை அன்வர்ராஜா ஆகியோரை பா.ஜ.க.விற்கு எதிராகப் பேசவைத்தார். அத்துடன் எடப்பாடி, "பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது' என கோரிக்கை வைத்தார். அவரது விருப்பத்திற்கு மாறாக சட்டமன்ற இடைத்தேர்தலை இரண்டுகட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த இடைத்தேர்தலுக் கேற்றவாறு பா.ஜ.க.வை கேட்காமலே பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தார். அத்துடன் எடப்பாடியின் முழுக் கவனமும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே இருந்தது. பா.ஜ.க. எட்டு எம்.பி. தொகுதிகளைக் கேட்டது. அதை தர மறுத்தார். பா.ஜ.க. போட்டி போட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் வேலை செய்யவில்லை. அ.தி.மு.க.வின் வாக்குகளும் பா.ஜ.க.விற்கு விழவில்லை. இவ்வளவு குழிபறிப்பு வேலைகளையும் செய்த எடப்பாடி, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மந்திரிசபையில் இடம் கேட்கிறார். அ.தி.மு.க.வை சேர்க்கவே கூடாது என கடும் கண்டனத்தை தமிழக பா.ஜ.க. அகில இந்திய தலைமையிடம் பதிவு செய்தது.
தமிழக பா.ஜ.க.வின் எதிர்ப்பு அதுவரை மத்திய மந்திரிசபையில் வைத்திலிங்கத்திற்கும், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கும் இடம் என பேசிவந்த பா.ஜ.க. மேலிடத்தின் குரலை மாற்றி விட்டது. "ஒரு இடம்தான், அதுவும் தேர்தலில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ். மகனுக்குத்தான் தரவேண்டும்' என ஆடிட்டர் குருமூர்த்தியின் குரலை பா.ஜ.க. எதிரொலித்தது. உடனே கேரள கவர்னர் சதாசிவம், ஜக்கி வாசுதேவ் ஆகியோர் அமித்ஷாவிடமும் மோடியிடமும் பேசினார்கள். "ஓ.பி.எஸ்.ஸின் மகன் மட்டும் மந்திரியாகக்கூடாது' என்ற சதாசிவம், ஜக்கி ஆகியோரின் குரல் முதலில் எடுபடவில்லை. ஓ.பி.எஸ். மகனுக்கு பா.ஜ.க. மந்திரியாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் அ.தி.மு.க.வில் மோதல் பெரிதானது.
அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் துணையுடன் ஓ.பி.எஸ்.ஸுடன் நேரடியாக மோதினார் எடப்பாடி. இந்த மோதல் மிகக்கடுமையாக நடந்தது. ஒரு கட்டத்தில் தேனியில் வெற்றிபெற்ற ஒரேயொரு எம்.பி.யான ரவீந்திரநாத்குமார் பா.ஜ.க.வில் சேருகிறார். அவருக்கு மந்திரி பதவி கொடுங்கள் என்கிற அளவிற்கு ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார். "பா.ஜ.க.வில் சேர்ந்து ஓ.பி.எஸ். மகன் மந்திரி பதவி வாங்கினால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பி.எஸ். இருக்க மாட்டார். அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவோம்' என எடப்பாடி தரப்பிலிருந்து எதிர் சவால் விடப்பட்டது. தேர்தல் முடிவு வந்தவுடன் தமிழகத்தில் கூட்டணி பிளவு வரவேண்டாம் என நினைத்த பா.ஜ.க., அமைச்சரவையில் அ.தி.மு.க. வைச் சேர்க்கும் எண்ணத்தையே கைவிட்டது'' என அமைச்சரவை உருவாக்கத்தின்போது அ.தி. மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நடந்த மோதலைச் சொல்கிறது டெல்லி வட்டாரம்.