Skip to main content

குஜராத் தேர்தலில் முஸ்லிம்கள் புறக்கணிப்பா?

Published on 08/12/2017 | Edited on 09/12/2017
குஜராத் தேர்தலில் முஸ்லிம்கள் புறக்கணிப்பா? 

இந்தியாவே எதிர்பார்க்கும் குஜராத் தேர்தல் இதோ முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு தயாராகிவிட்டது.

இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப் போகும் ‘குஜராத் மாடல்’ என்ற அடையாளத்தைக் காட்டி மோடியை பிரதமராக்கிய பாஜகவுக்கும், சொந்தத் தலையெழுத்தை மாற்ற ராகுல்காந்தியை தலைமைப் பொறுப்பில் அமர்த்த இருக்கும் காங்கிரஸுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.



மூன்றரை ஆண்டு பாஜக ஆட்சியின் லட்சணத்தை குஜராத் மக்கள் எடைபோடும் வகையில்,  டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

பாஜக சார்பில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியும் குஜராத்தில் முகாமிட்டு அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இரண்டு கட்சிகளின் சார்பில் இருந்தும் யாதொரு தலைவரும் எந்தவொரு இஸ்லாமிய தலைவரையும் சந்தித்துப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

குஜராத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் 2002ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர்களை தொடர்ந்து புறக்கணித்தே வந்திருக்கின்றனர் அரசியல்வாதிகள். தாக்குதல் சமயங்களில் உயிர்பிழைத்து தப்பிய பல குடும்பங்கள், விதவைகளாக்கப்பட்ட பெண்கள், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள், குடும்பத்தைத் தொலைத்தவர்கள் என யாவருக்கும், ஆளும் பாஜக அரசு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளையும் செய்து தந்ததில்லை என்றே சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், அகமதாபாத்தில் உள்ள பால்தி பகுதியில் இஸ்லாமியர்களின் வீட்டுச் சுவர்களில் திடீரென பொறிக்கப்பட்டிருந்த பெரிய சிவப்பு ‘X’ குறிகள், அங்கிருந்த மக்களை வெகுவாக அச்சுறுத்தியிருக்கின்றன. இதுகுறித்து சம்மந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் மாநகராட்சியில் புகாரளித்திருக்கின்றனர்.



ஜிபிஎஸ் உதவியின் மூலம் குப்பை அள்ளும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாகவும், படிப்பறிவில்லாத குப்பை வண்டி ஓட்டுநர்கள் ஜிபிஎஸ்ஸை பயன்படுத்தத் தெரியாததால் அடையாளத்திற்காக இந்தக் குறிகளை வரைந்திருக்கலாம் என்றும் பதிலைத் தந்திருக்கிறது அகமதாபாத் மாநகராட்சி.

2002 கலவர சமயங்களில் காவிக்கொடிகள் இல்லாத, பெரிய ‘X’ குறிகள் பொறிக்கப்பட்ட வீடுகள் என சிலவற்றை அடையாளங்களாகக் கொண்டு இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அந்த கோர தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிலிருந்து மீண்டு வருவதற்கான எந்தவிதமான நம்பிக்கையையும் இதுவரை குஜராத் அரசு ஏற்படுத்தித் தந்திருக்கவில்லை என்பதையே அவர்களின் தற்போதைய அச்சம் உணர்த்தியிருக்கிறது.

இதுவொரு புறம்இருக்க எப்போதும் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்கும் காங்கிரஸ் கட்சியும் அவர்களை சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கிறது. கடந்த 1980-ன் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 17 முஸ்லிம்கள் போட்டியிட்டு 12 பேர் வென்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 1985-ல் 11 - 8, 1990-ல் 11 - 2, 1995-ல் 10 - 0, 1998-ல் 9 - 5, 2002-ல் 5 - 3, 2007-ல் 6 - 5 மற்றும் 2012-ல் 5 - 2 எனவும் குறைந்து வந்துள்ளது.

குஜராத் கலவரத்திற்குப் பிறகு இஸ்லாமிய மக்கள் தம் பகுதிகளில் இருந்து இடம்மாறி சென்றதால், அங்கு இந்துக்களின் எண்ணிக்கை அதிகமானதாகவும், பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்ததாகவும், அதனால் இஸ்லாமியர்களுக்கான வாய்ப்பைக் குறைத்ததாகவும் காங்கிரஸ் தரப்பில் இதற்கு முன் சொல்லப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தலைப் பொருத்தவரை கூடுதல் பலத்துடன் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் ராகுல்காந்தியும் பெரும்பான்மை இந்து வாக்குகளைப் பெற இந்துக் கோவில்களாக ஏறி இறங்கினார். இதைப் பொறுத்துக் கொள்ளாத பாஜக சோம்நாத் கோவில் பதிவேட்டு விவகாரத்தை ஊர்ப் பிரச்சனையாக்கி, பரபரப்பாக்கியது. ஆனால், தான் ஒரு இந்துதான் எனக்கூறி பிரச்சனையை முடித்துவைத்தார் ராகுல்காந்தி.



182 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 9.6% மட்டுமே. அதேசமயம், அவர்களின் வாக்குவங்கி என்பது 3%-க்கும் குறைவாக இருப்பதாலேயே எந்த அரசியல் கட்சிகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என்கிறனர் அரசியல் விமர்சகர்கள்.

குஜராத் இஸ்லாமியர்களைப் பொருத்தவரை, அவர்கள் இந்தப் புறக்கணிப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. 2002 கலவரத்திற்குப் பின்னர் அவர்கள் தங்களை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர் என்பதே உண்மை. கலவரக் காலங்களில் உயிர்தப்பிய பலர் சமூக அந்தஸ்தோடு வாழ முயற்சித்து, அதில் வெற்றியும் கண்டிருப்பதே அதற்கான சான்று. அவர்களின் தற்போதைய மற்றும் நீண்டகால தேவை கல்வியும், தொழிலுமாகவே உள்ளது. அதை தாமே பூர்த்தி செய்து கொள்வதற்கான வேலைகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.

தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகள் தங்களுக்காக உதிர்க்கும் வாக்குறுதிகளை புன்னகைத்தவாறே அவர்கள் கடந்துசெல்கின்றனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்