Skip to main content

"அதிகாரம் கொண்ட பதவி தருவார்கள் என்று பார்த்தால் புல் கூட முளைக்காத தமிழக பாஜகவுக்கு தலைவராக.." - அண்ணாமலைக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

d


பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் சேகர் பாபு தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருவதும், அதற்கு அமைச்சர்கள் தரப்பு ஆதாரத்தைக் கேட்டால் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை கூறுவதுமான சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இவர்கள் இருவரையும், அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜியை அண்ணாமலை அதிகம் தாக்குவது ஏன்? அதன் பின்னணி என்ன, தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறதா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளைத் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,


பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் தொடர்பாக விமர்சனம் செய்துவருகிறார். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியும் பதில் சவால் விடுகிறார். குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று கூறுகிறார். இருவருக்குமான வாக்குவாதத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

ஒரு ஜனநாயக நாட்டில் அரசைக் கேள்வி கேட்க ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சி தலைவருக்கு உள்ள உரிமையைப் பிறர் கேள்வி கேட்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அதற்கான உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், இவர் ஏன் எதிர்க்கிறார் என்றால் அவரால் தாங்க முடியவில்லை. ஏனென்றால், தமிழிசை அவர்கள் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கிறார். இங்கே மாநில தலைவராக இருந்த முருகன் மத்திய அமைச்சராக இருக்கிறார். அந்திம காலத்தில் இருந்த இல. கணேசன் தற்போது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த நமக்கு ஏதாவது அரசியல் அதிகாரம் கொண்ட பதவி தருவார்கள் என்று பார்த்தால், புல் கூட முளைக்காத தமிழக பாஜகவுக்குத் தலைவராக போட்டுள்ளார்களே, என்ற கோவத்தில் அரசியல் அதிகார பதவியை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுகிறார் என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.   

 

தமிழ்நாட்டில் இவ்வளவு அமைச்சர்கள் இருக்கின்றபோது அண்ணாமலை செந்தில் பாலாஜியை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்?

அதற்கு வலுவான காரணம் இருக்கிறது. திமுகவில் செந்தில் பாலாஜி ஒரு ஆளுமையாக இருக்கிறார். அது அண்ணாமலையை உறுத்துகிறது. அதையும் தாண்டி, கடந்த தேர்தலில் திமுக கோவையில் அடிவாங்கியது, ஈரோட்டில் கூட எதிர்பார்த்த இடங்களில் வெற்றிபெறவில்லை, ஆனால் கரூரில் நூறு சதவீத வெற்றிபெற்றது. இதற்கு காரணம் செந்தில் பாலாஜி. இன்னும் சொல்கிறேன், அண்ணாமலை அரவக்குறிச்சியில் மண்ணைக் கவ்வ வைத்தற்கு மிக முக்கிய காரணம் செந்தில் பாலாஜிதான். அந்தக் கோவத்தில்தான் அவர் இவ்வாறு பேசுகிறார். அவரால் பேச மட்டும்தான் முடியும், எனவே அண்ணாமலை பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. 

 

அமைச்சர் சேகர்பாபு கூறியதாக ஒரு கருத்தை அண்ணாமலை கூறியதோடு, இந்தியாவில் 17 மாநிலங்களில் நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம், டெல்லியில் மோடி இருக்கிறார், பாஜக மீது கைவைத்து பாருங்கள், நாங்கள் யார் என்று தெரியும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்தக் கருத்தை எப்படி புரிந்துகொள்வது? 

அண்ணாமலையின் கருத்து பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, அவர் என்ன வட்டியும் முதலுமாக தர இருக்கிறது. இந்த நாட்டில் பாஜகவுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் நினைக்கிறாரா? இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. விமான நிலையம் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது, அடுத்து ரயில்வே தனியார் மயத்தை நோக்கிச் செல்ல இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து சவால் விடுகிறார்கள். நாட்டு மக்கள் பாஜகவை பழிவாங்க காத்துக்கிடக்கிறார்கள், அதற்கான நேரத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 

 

சேகர் பாபுவை பார்த்து இவர் சவால் விடுகிறார். அவர் செய்த சாதனைகளுக்கு அவரை பாராட்டியிருக்க வேண்டாமா? இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறாரே, அதற்காக அவரை பாராட்ட வேண்டாமா, தனியார்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்த நிலையில், இவை அனைத்தையும் மீட்டு, இன்றைக்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளாரே, இதெல்லாம் அவருக்குத் தெரியுமா? சேகர்பாபுவை பற்றிப் பேச இவர் யார், இவருக்கு என்ன தகுதி இருக்கிறது, சேகர்பாபுவை பற்றி வாய்திறக்க கூட இவருக்கு உரிமை இல்லை. எனவே தேவையில்லாத கருத்துக்களை அண்ணைமலை குறைத்துக்கொள்வது அவருக்கு நல்லது.