"கடந்த நாலு வருசமா அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைச்சேன். கடைசியில் எனக்கு துரோகம்தான் செய்கிறார்கள். நம்மோடு இருப்பவர்களே அவர்களின் துரோக செயல்களுக்கு ஒத்துழைப்பதுதான் வேதனையாக இருக்கிறது'' என்று அ.தி.மு.க. சீனியர்களிடம் புலம்பித் தள்ளியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் என்று எடப்பாடி புலம்பியது, மோடியையும் அமித்ஷாவையும்தான்.
கட்சி சீனியர் ஒருவர் நம்மிடம், "பா.ஜ.க.வை தூரத்தில் வைத்தே மெயிண்டெயின் பண்ணலாம் என எடப்பாடிக்கு பலரும் பல முறை சொன்னபோதும், அதை ஏற்காமல், டெல்லியின் எதிர்பார்ப்புகளுக்கு கூடுதலாகவே கவனித்து வந்தார். கார்டனுக்கு கட்டி வந்த கப்பம் போல டெல்லிக்கும் கட்டி வந்தார். அதனால்தான் 4 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடிந்தது. முதல்வர் வேட்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்துவதில் சாதித்தார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே பா.ஜ.க தரப்பிலிருந்து நெருக்கடிதான். முதல்வர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க.வின் திட்டத்தை அறிந்து மேலும் பதட்டமாகி வருகிறார் எடப்பாடி'' என்கிறார் நம்மிடம் மனம் திறந்த அ.தி.மு.க. சீனியர்.
முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. தலைமைதான் அறிவிக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனும், "அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்தான் எடப்பாடி பினிசாமி; தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் தலைமை தெரிவிக்கும்'' என பா.ஜ.க. மகளிர் மோர்ச்சாவின் தேசிய தலைவர் வானதி சீனிவாசனும் சொல்லியிருப்பது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் உத்தரவுப்படிதானாம். சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முன்வரவில்லை. டெல்லியிலிருந்து சென்னைக்கு அவர் கிளம்புபோதே, அ.தி.மு.க. கூட்டணியையும் அதை மையப்படுத்தும் கேள்விகளுக்கும் எந்த உத்தரவாதத்தையும் தர வேண்டாம் என்றே கட்சி தலைமையால் அவருக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க.வின் வியூகம்தான் என்ன என்பது பற்றி டெல்லியுடன் தொடர்புடைய அதன் அறிவுசார் குழுவினரிடமும் நாம் விசாரித்தபோது, ""நாடாளுமன்ற தேர்தலின்போது வெறும் 5 சீட்டுகளைக் கொடுத்து பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் காயப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. மீண்டும் மோடி பிரதமராக மாட்டார் என்கிற நினைப்பில்தான் இப்படி நடந்துகொண்டார். அதற்குத்தான் பா.ஜ.க. இப்போது பதில் மொய் செய்கிறது. முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கு முன்பு டெல்லியோடு எடப்பாடி கலந்துபேசத் தவறிவிட்டார்.
அ.தி.மு.க.வில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க பலத்த எதிர்ப்புகள் இப்போதும் இருக்கும் நிலையில், கட்சியின் ஆகப் பெரிய தலைவராக அவர் இல்லாதபோது அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்து, அதையே அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குமான முதல்வர் வேட்பாளராக ஏற்க வைக்க நினைப்பதை பா.ஜ.க.வின் தேசிய தலைமைகள் ரசிக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை 50 சதவீதம் வெற்றிபெற வைத்திருந்தாலாவது, எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இருக்கிறது என நினைத்து சட்டமன்ற தேர்தலில் அவரது தலைமையில் தேர்தலைச் சந்திக்க டெல்லி யோசித்திருக்கும். ஆனால், அத்தகைய செல்வாக்கு இல்லாதபோது, கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை எப்படி டெல்லி ஏற்கும்?
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமை வகிப்பதால், தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அதே நிலையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. அதனால், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தமிழகத்தில் பா.ஜ.க.தான் தலைமை வகிக்கும்; அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அமித்ஷா அறிவிப்பார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நியமிக்க ஆலோசனைகள் நடந்திருக்கிறது. இது எடப்பாடிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்கின்றனர் மிக அழுத்தமாக.
மத்திய உளவுத்துறையினரின் ரிப்போர்ட்டுகளை வைத்தே தமிழக தேர்தல் குறித்த முடிவுகளை பா.ஜ.க. தலைமை தீர்மானிப்பதால், உளவுத்துறை தரப்பில் விசாரித்தபோது, "துணை முதல்வர் ஓ.பி.எஸ். இப்போது பா.ஜ.க.வின் முழுமையான நம்பிக்கை வட்டத்தில் இருக்கிறார். ஓ.பி.எஸ்.சை வைத்துத்தான் தனது ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறார் அமித்ஷா. நடிகர் ரஜினியை நிர்பந்தப்படுத்தி கட்சி துவக்க பா.ஜ.க. தலைமை தயார்படுத்தியிருந்தது. அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு, தேர்தல் அரசியலில் நீங்கள் இருந்தால் போதும்; மற்றபடி அலட்டிக்கொள்ள வேண்டாம்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருந்தனர்.
அதை ரஜினி ஏற்றுக்கொண்ட நிலையில்தான் டிசம்பர் 31-ல் கட்சி பெயரை அறிவிப்பேன் என சொன்னார். ஆனாலும் ரஜினியின் உடல்நிலை, அவரிடம் உள்ள தயக்கம் இவற்றால் பா.ஜ.க. எதிர்பார்க்கும் வேகத்தில் அரசியல் நகர்வுகள் இல்லை.
தி.மு.க.விற்கும் ரஜினிக்குமான தேர்தல் களத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த மோடியும் அமித்ஷாவும், தற்போது தி.மு.க. கூட்டணிக்கும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்குமிடையேதான் போட்டி என்கிற களத்தை உருவாக்கும் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதற்காகத்தான் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுத்து, பா.ஜ.க. தலைமையில் கூட்டணி என்கிற அஸ்திரத்தை எடுக்கிறது. இதற்கு பழனிசாமியை சம்மதிக்க வைக்கத்தான் அவர் உட்பட அவரது அமைச்சரவை சகாக்களின் ஊழல்களை எடுத்து வைத்திருக்கிறது டெல்லி. பா.ஜ.க. தலைமையில் அப்படி கூட்டணி உருவாகும் போது சீட் சேரிங்கையும் முதல்வர் வேட் பாளரையும் பா.ஜ.க.வே முடிவு செய்யும்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்காத பட்சத்தில், ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வை மீண்டும் உடைத்து, ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க., பாமக, தே.மு.தி.க., தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா., சரத்குமாரின் ச.ம.க., மு.க.அழகிரி என பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாக்குவதும் அதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை தனிமைப்படுத்துவதும், இரட்டை இலையை முடக்குவதும்தான் மோடி - அமித்ஷாவின் திட்டம். இதற்கு ‘ஆபரேஷன் தமிழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் உளவுத்துறையினர்.
பா.ஜ.க.வின் ‘ஆபரேஷன் தமிழக’த்தை அறிந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதனை ஜீரணிக்க முடியாமல், டெல்லியின் திட்டத்தை முறியடிக்க பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா.வை தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள தொடர்ச்சியான முயற்சியை எடுத்து வருகிறார். மேலும், தன்னைச் சந்திக்க தேமுதிக பிரேமலதா எடுத்த முயற்சியை உதாசீனப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, தற்போது கூட்டணி குறித்து பேச விஜயகாந்தைச் சந்திக்க விரும்புகிறோம் எனவும், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் தங்கமணியையும் ஜெயக்குமாரையும் அனுப்பி வைப்பதாகவும் பிரேமலதாவுக்கு தகவல் தந்துள்ளார் எடப்பாடி.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அஸ்திரத்தை பா.ஜ.க. தூக்கும் நிலையில் அவருக்கு எதிராக உள்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியிருக்கிறது. குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தின் அதிகார ஆதிக்கத்துக்கு எதிராக அ.தி.மு.க.வில் உள்ள கிளர்ச்சிகளும் எடப்பாடி பழனிசாமியை அப்-செட்டாக்கி வருகிறது. இதுகுறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் உருக்கமாகப் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, "ஓ.பி.எஸ். மூலம் கட்சியை உடைக்க டெல்லி முடிவு செய்துவிட்டது. ஓ.பி.எஸ்.சும் இதற்கு சம்மதித்திருக்கிறார். கட்சி பிளவுபடாமல் இருக்க நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும். கட்சி நிர்வாகிகளிடம் என் சார்பில் நீங்கள் பேசுங்கள்'' என தெரிவித்திருக்கிறார். இதனையடுத்துதான், சமீபத்தில் தனது மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், "இரட்டை இலைங்கிற சின்னம்தான் எம்.ஜி.ஆரின் வாரிசு. அந்த இரட்டை இலையை முடக்க சதி நடக்கிறது. தலைவர்கள் துரோகமிழைத்தாலும் தொண்டர்கள் துரோகமிழைக்க மாட்டார்கள்'' என்று பேசியிருக்கிறார்.