Skip to main content

"மீண்டும் கஜம் கட்டி அடிப்போம்..." -புதிய தலைமுறைக்கு நக்கீரன் ஆசிரியர் பேட்டி

Published on 22/04/2020 | Edited on 23/04/2020


கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் அச்சு ஊடகங்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் குறித்து நக்கீரன் ஆசிரியர் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர்,


நேற்று முன்தினம்தான் நக்கீரனுக்கு 33 ஆவது ஆண்டு, ஏப்ரல் 20ஆம் தேதி நக்கீரனுடைய பிறந்த தினம். 33-வது ஆண்டு ஆரம்பம், பெரிய சோகம்தான். உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும், நக்கீரனை 32 வருடமாக எத்தனையோ போராட்டங்கள், இதைவிட மோசமான பல கரோனாக்கள் தாக்கி இருக்கிறது. இந்த கரோனாவை கூட தாண்டி போகலாம். ஆனால் அதனால் வந்த, இந்த ஊரடங்கு நக்கீரனை வாசகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியாமல் செய்திருப்பதுதான் பெரிய வருத்தம்.
 

 Interview with Nakkeeran Editor


அச்சு ஊடகத்திற்கு முக்கியமே வாசகன்தான். அந்த வாசகனுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டுமெனில் போக்குவரத்து மிகவும் அவசியம். ரயில், பஸ் போன்றவை இருக்க வேண்டும், அப்போதுதான் அந்தந்த இடங்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியும். முகவர்கள் கடைக்காரர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள், கடைக்காரர்கள் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். இப்பொழுது ஊரடங்கு என்பதால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற ஒரு பெரிய கட்டுப்பாட்டில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அச்சு இதழ்களுக்கு மிகப்பெரிய அடி அல்ல இடி என்றே சொல்லலாம்.

நாம் மார்தட்டிக் கொள்ளலாம் இன்றைக்கும் அச்சு இதழ்கள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது என்று, ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை. உலகமே ஒரு மோசமான சூழலை எதிர் கொண்டிருக்கிறது. எல்லாருடைய இயல்பும் முடங்கிவிட்டது. இரண்டு காலும் முடங்கி ஒருவன் வீட்டில் இருப்பதைப் போன்று உலகமே முடங்கிப் போயிருக்கிறது. இந்த நேரத்தில் நம்மை போன்ற பத்திரிகைகளை வாசகனிடம் கொண்டு சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்பதால், நாங்கள் இப்போது நக்கீரன் இதழை ஆன்லைனில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை ஆறு இதழ்கள் வந்துவிட்டது. ஏழாவது இதழ் இன்று (23.04.2020) காலை வந்திருக்கிறது.
 

 nakkheeran app



நக்கீரனை அந்தவகையில் பார்த்தோமென்றால், கொஞ்சம் கூட சூடு குறையாமல் ஆன்லைனில் கொண்டு சேர்க்கிறோம். ஆன்லைனில் பரவலாக கொண்டுபோய் சேர்த்துவிட்டோமா, சேர்க்கவில்லையா  என்பதற்குள் நான் வரவில்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது, நக்கீரனை வாங்கிப் படித்தவர்கள் இன்னமும் அந்த நிலையில், அப்படியே இருக்கிறார்கள் என்று. எப்பொழுது இந்த இயல்பு நிலை, அதாவது ஒரு மூன்று மாதத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ அதுமாதிரி வந்தால், மீண்டும் நக்கீரனை இதே ஓட்டத்தில் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த 32 வருடத்தில் இந்த ஆறு இதழ்களைதான் ஆன்லைனில் கொண்டு போயிருக்கிறோம். தூக்கம் இல்லாமல் உட்கார்ந்து இருக்கிறோம், இதை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கவில்லையே, ஒவ்வொன்றையும் தடவித் தடவி பார்த்து, தொட்டு தொட்டு பார்த்து, தோளில் தூக்கி கொண்டு போய் ஒவ்வொரு இடங்களிலும் கொண்டு போய் சேர்ப்போமே அல்லவா அது முடியாமல் போய்விட்டதே என்று. 

எத்தனையோ தொழில்கள் முடங்கி போய்விட்டது. எத்தனையோ பேர் நடுத்தெருவிற்கு வந்துவிட்டார்கள். நடுத்தெருவிற்கு வந்தவர்கள் எல்லாருமே இயல்புநிலைக்கு வருவார்களா என்பது எனக்கு தெரியாது. அமெரிக்க அச்சு ஊடகங்கள் எல்லாம் மூடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவில் மட்டும்தான் அச்சு ஊடகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது, எண்ணிக்கையும் கூடியது. அவர்களுடைய விற்பனையும் கூடியது என்று அடிக்கடி என்.ராம் சொல்லிக் கொண்டிருப்பார். அந்த அடிப்படையில் பார்த்தால் அச்சு ஊடகங்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக நக்கீரனை பொருத்தவரை இன்று ஒரு நல்ல  இடத்தை தக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

 

 Interview with Nakkeeran Editor

 

இதையும் மீறி அரசினுடைய அனுமதி எல்லாம் வாங்கி ஒவ்வொரு ஊர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கலாம் என்றாலும், இப்பொழுது நிறைய புரளிகளை கிளப்பி விட்டுவிட்டார்கள். அது புரளியா அல்லது உண்மையா...? ஏனென்றால் இதை புரளி என்றும் சொல்ல முடியாது. ஒரு டாக்டருடைய சடலத்தை புதைக்க கூடாது என்று தடுக்கிற அளவுக்கு போராட்டம் செய்யக்கூடிய அளவுக்கு ஒரு மோசமான தேசமாக நாம் பேசப்படுகிறோம். அதற்கு காரணம் கரோனா என்கின்ற பிசாசு. கரோனா என்கின்ற பிசாசு தொட்டால் வரும் என்கிறார்கள், மூச்சுக் காற்று பட்டால் வந்துவிடும் என்கிறார்கள். இதனால் எல்லாருமே பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதுதான் அந்த மருத்துவருடைய இறுதிச்சடங்கைகூட சரியாக பண்ணாமல் போனதற்கு காரணம்.

இன்னொரு புரளியையும் சொல்லி இருக்கிறார்கள். 9 விழுக்காடு அறிவியல் பூர்வமாக சொல்கிறார்கள்... கரோனா என்பது அறிகுறி இல்லாமலே வரும் என்று. முதலில் சளி, காய்ச்சல், இருமல் எல்லாம் இருந்தால் வரும் என்றார்கள், தும்மினால் வரும் என்றார்கள், இப்பொழுது ஆரோக்கியமாக இருந்தாலே பரிசோதனை செய்து பார்த்தால் கரோனா இருக்கிறது என்கிறார்கள். அப்படியிருக்கையில் நினைத்துப்பாருங்கள் யார் வெளியே வருவார், யார் புத்தகத்தை தொட்டு வாங்குவார்கள், எதையுமே தொட்டு வாங்கக் கூடிய நிலைமையில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதுதான் சூழல்.
 

இந்த சூழலில் இருந்து அச்சு ஊடகங்களுக்கு விதிவிலக்கு இல்லையே... இயல்பு நிலைக்கு என்று இந்த சூழல் மாறுகிறதோ அன்று, அச்சு ஊடகம் கஜம் கட்டி அடிக்கும். இந்த சூழ்நிலையில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பொருளாதாரம். நிச்சயமாக பொருளாதாரம் என்பது மிகப் பெரிய அடியை சந்தித்துள்ளது. நாம கோணியில் கோடிக்கணக்காக வைத்துக்கொண்டு பத்திரிகை ஆரம்பிக்கல, வெறும் நான்காயிரம் சொற்ப முதலீட்டில்தான் நக்கீரனை ஆரம்பித்தோம். எத்தனையோ வழக்குகள், பல ஆயிரக்கணக்கான  நீதிமன்ற வழக்குகள் போயாச்சு, எவ்வளவோ செலவழித்து வழக்குகளை சந்தித்து விட்டோம். இன்று 33 வருடம் கழித்து நிற்பதே ஒரு பெரிய விஷயமாக ஆகிவிட்டது. இதற்கெல்லாம் நமது பொருளாதாரம் கை கொடுத்த நிலையில், தாங்கிப்பிடித்து 32 வருஷமாக, ஒருநாள் கூட தவறாமல், சொல்லப்போனால் வார இதழாக இருந்ததை, வாரம் இருமுறை ஆக்கினோம், அடுத்து வாரம் மும்முறை ஆக்கினோம். இந்திய வரலாற்றில் ஒரு வாரத்தில் மூன்று இதழ்கள் கொண்டுவந்தது நக்கீரன் மட்டும்தான். மறுபடியும் இருமுறை ஆக்கினோம்.

இவ்வளவிற்கும் பொருளாதாரம் கைகொடுத்தது அதனால்தான் நம்மால் முடிந்தது. இப்பொழுது ஆன்லைனில் எந்த வரவும் இல்லாத நிலையில், பத்திரிகையை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று காலை வந்த இதழில்கூட என்ன சொல்லி இருக்கிறோம் என்றால்... இந்த நிலையிலும் நக்கீரன் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கவில்லை என்பதற்காக ஒரு உதாரணம் சொல்கிறேன். அரசாங்கம் சொல்கிறது, மூன்று நாட்களில் கரோனாவில் இருந்து விடுபட்டுவிடலாம், கரோனாவிற்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்துவிடும் என்று. நாங்கள் இந்த இதழில் அட்டைப்படம் செய்திருக்கிறோம். மூன்று நாட்களில் போய்விடும் என்று சொல்கிறீர்களே, அப்புறம் எதற்கு 10,000 பெட் ரெடி பண்ணி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு இருக்கிறோம். சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் பெட் தயார் பண்ணி வைத்திருக்கிறார்கள்.  டிரேட் சென்டர் ஆக இருக்கட்டும், அம்பத்தூரில் இருக்கின்ற ஒரு டென்னிஸ் கோர்ட், அதை எடுத்து 150 பெட் போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மண்டலமாக பிரித்து, பிரித்து பெட் போட்டு வைத்திருக்கிறார்கள். யாரும் அட்மிஷன் போடவில்லை. அப்போ 10 ஆயிரம் பெட்  எதற்கு என்று நாம் ஒரு கேள்வியாகக் கேட்டு இருக்கிறோம். இது அரசாங்கம் கரோனாவுக்கு எதிராக எடுக்கின்ற முயற்சியை நாம் கொச்சைப்படுத்த அல்ல, மக்களுக்கு தவறான புரிதலை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை  நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். நிச்சயமாக எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. நக்கீரன் இதுமாதிரி பல கரோனாக்களை சந்தித்துள்ளது. 
 

http://onelink.to/nknapp


என் வாழ்க்கையில்... நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விட்டு வந்து நிற்கவில்லை, இந்த வாழ்க்கையில் இப்படி ஒரு ஊரடங்கு, ஒரு மோசமான சூழ்நிலையை இப்பொழுதுதான் நாம் பார்த்திருக்கிறோம். இதை எப்படியும் நிச்சயமாக வென்றெடுப்போம். ஆனால் மக்கள்...? உண்மையிலேயே வருத்தமான செய்தி என்னவென்றால், இப்போது இருக்கும் நிலைக்கு கரோனாவே மேல் என்கின்ற அளவுக்கு மக்கள் ஆகிவிட்டார்கள். ஏனென்றால் அதைவிட அவர்களின் வாழ்வாதாரம் முக்கியம் ஆகிவிட்டது. கரோனா பெரிய விஷயம் இல்லை, வாழ்வாதாரம்தான் முக்கியம் என்று வெளியே வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. அரசாங்கம், நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்படி ஜெயிக்க போகிறோம் என தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக ஜெயிப்போம். ஜெயித்து அந்த சூழல் வரும்பொழுது நிச்சயமாக அச்சு இதழ்கள், குறிப்பாக  நக்கீரனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த இயல்புநிலை கட்டாயம் வந்த உடனே, மீண்டும் புத்தகம் மக்கள் கைகளில் சேர்க்கப்படும். நக்கீரனை படிப்பவர்கள் கண்டிப்பாக தொடர்ந்து நக்கீரனை படிப்பார்கள். மற்ற பத்திரிகைகளுக்கும், நக்கீரனிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது நக்கீரனை படித்தவர்களுக்கு தெரியும். நாங்கள் அதை தொடர்ந்து கடைபிடிப்போம். தொடர்ந்து வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை செய்வோம். என்று கூறினார்.