Skip to main content

ஆர். கே. நகர் அலப்பறைகள்!

Published on 12/12/2017 | Edited on 12/12/2017
 



ஆம்பூர் பிரியாணி, ஆட்டம்போடும் எம்.எல்.ஏ... இன்னும் என்ன? 


விஷாலும் வில்லங்கமும்




'என்னங்க இவரு தேர்தல்னு பேர கேட்டாலே வந்து நின்னுறாரு...?' அப்படினு நெனச்சாங்களோ, என்னவோ  அவரை  தேர்தலில்  நிக்கவே விடல. அதுமட்டுமில்ல முதல்ல நீக்குறாங்க, அடுத்து அனுமதிக்குறாங்க, அடுத்து நீக்குறாங்க. இப்படியே மாத்தி, மாத்தி  பண்ணதுல விஷால், அவரு ஆட்டத்துல இருக்காரா, இல்லையானு தெரியாம, பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு. தன் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட பின் பல முயற்சிகள் செய்தார் விஷால். ஆனால், இன்னொருவரோ வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, அது நிராகரிக்கப்படும் என்று அவரே அறிவித்தார். அவர் தான் ஜெ.தீபா. ஆர்.கே.நகரை அவர் மிஸ் பண்ணினாரோ இல்லையோ, ஆர்.கே.நகர் மக்கள் தீபாவின் பிரச்சாரத்தை மிகவும் மிஸ் பண்ணுகிறார்கள் என்பதே உண்மை.    

சிக்கன் ஜனநாயகம்




ஜனநாயகத்தில் சிக்கனுக்கு முக்கிய பங்குண்டு என்பதை ஆர்.கே. நகர் தேர்தல் நிரூபித்துள்ளது. அதிமுக, திமுக, டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் ஆம்பூர் பிரியாணி மாஸ்டர்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக சம்பளத்தை அளித்து கூட்டி வந்துள்ளனர். 132 மாஸ்டர்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு உதவியாக 200 பேரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். தேவையான பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு இடத்திலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப்படுகின்றன.  பேசாமல் பிரியாணி  மாஸ்டர் ஆகிவிடலாம் எனவும் நிறையபேர் நினைக்கும் அளவுக்கு மரியாதை அவர்களுக்கு.  

டி.டி.வி. தினகரனும், பிரஷரும்

டி.டி.வி. தினகரனுக்கு சின்னம் வாங்குறதுலயே நிறைய பிரஷர் இருந்துச்சு, இந்த பிரஷருக்கெல்லாம், பிரஷர் கொடுக்குற மாதிரி  அவருக்கு சின்னமா கெடச்சுருக்கு பிரஷர் குக்கர். "எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கத்தான் எனக்கு பிரஷர் குக்கர் சின்னம் கிடைத்துள்ளது" என்கிறார் தினகரன்.  இந்த பிரஷர் குக்கர எப்படி பிரபலமாக்கலாம்னு பல பன்ச் டயலாக்க ரெடி பண்ணி பேசிக்கிட்டுருக்காரு    டி.டி.வி. அதுக்கேத்த மாதிரி  எதிர் தரப்புலயும் பல பன்ச் ரெடி ஆகி போய்கிட்டிருக்கு. எந்த பன்ச் பிரபலமாகுதுங்குறத நாம பொறுத்திருந்துதான் பாக்கணும். 

அமைச்சர் தொங்குறாரு... எம்.எல்.ஏ ஆடுறாரு  




தான் சேர்ந்த கட்சி வேட்பாளருக்கு நேரம், காலம் பாக்காம வேலை பாத்தவங்கள பாத்திருப்பீங்க. ஆனா பதவி பாக்காம வேல பாத்தவங்கள பாத்துருக்கீங்களா? அதைதான் நம்ம விஜயபாஸ்கரும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகமும் பண்ணிருக்காங்க. தான் ஒரு அமைச்சர்னு கூட பாக்காம வண்டில தொங்கிட்டே போய் வாக்கு கேட்டுருக்காரு ஒருத்தரு. தான் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. அங்க இருக்க பிரச்சனையையும் பாக்கணும் அப்படிங்குறதையே மறந்துட்டு திறந்த ஜீப்ல குத்தாட்டம் போட்டுட்டே வாக்கு கேட்டுருக்காரு இன்னொருத்தரு.

பேர் ஒன்னுதான்... ஆனா ஆள்தான் வேற,வேற... 




மதுசூதனன் என்ற பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் நிற்கிறார். அவருக்கு இரட்டை மின்கம்பம் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். பிரிந்திருந்தபோது ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்தில்தான் நின்றார். ஓ.பி.ஸ், ஈ.பி.எஸ். இருவரும் மனதார இணையவில்லை என கூறிவரும் நிலையில், ஓ.பி.ஸ் அணியின் தீவிர தொண்டர்கள் பழைய நியாபகத்தில் இரட்டை மின்கம்பத்தை எரிய விட்டுவிடுவார்களோ என்ற பயம் அனைவருக்கும் உள்ளது.  இதே போல, கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ரமேஷுக்கு  சென்ற முறை தினகரனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த  தொப்பி சின்னத்தை  ஒதுக்கியுள்ளனர்.

தமிழிசை தனியிசை 




இந்த செவுரு அடுத்து யாரை காவு வாங்கப்போகுதோ என்னும் அளவுக்கு பலரும் ஒதுங்கி ஒதுங்கிப் போக, கடைசியில் எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா என்பது போல பாஜக வேட்பாளரானார் கரு.நாகராஜன். தங்களது வேட்பாளருக்காக களமாடுகிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. பார்க்கும் வாக்காளர்களிடமெல்லாம் புன்னகையுடன் பாசமாக பேசி வாக்கு கேட்கிறார்.  

ஒரு மந்தையிலிருந்த இரு ஆடுகள்...




சில மாதங்களுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்த ஸ்டாலினும் வைகோவும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கிறார்கள். ஸ்டாலின் முதல்வராவார் என்று வைகோ முழக்கமிடுகிறார். ஸ்டாலினின் மேல் கொட்டிய தேநீரை பதறி துடைக்கிறார் வைகோ. இப்படி இவர்கள் பாடும் 'ஒரு கூட்டுக் கிளியாக' பாடல் ஆர்.கே.நகரில் ஓங்கி ஒலிக்கிறது.  


வேற லெவல்   வேட்பாளர்கள்  

"தேர்தல் மன்னன்" என அழைக்கப்படும்,  லிம்கா சாதனை புரிந்த  வேட்பாளர்   கே.பத்மராஜன் தனது வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற சீரிய கொள்கையை கொண்டவர். அதற்கேற்றாற்போல் இடைத்தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எதையும் பார்க்காமல் பாரபட்சமில்லாமல் அனைத்திலும் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகரிலும் போட்டியிடுகிறார்.  

மது குடிப்போர் விழிப்புணர்வு(???) சங்கமும் களத்தில் பாட்டிலோடு இறங்கியுள்ளது. நாட்டில் குடிமகன்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒருவிதம் அதில் இவர்கள் வேறுவிதம். இவர்களின் வாக்குறுதிகளும் வேறுவிதம்தான். பிரச்சாரத்துக்கு  மற்றவர்களெல்லாம் பாட்டில், பிரியாணி என செல்லும்போது இவர்கள் எப்படி செல்வார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
                                              
ஆக இப்படி ஆர்.கே. நகர் ஜேஜே என்று இருக்க 'ஜெ' இல்லாததுதான் காரணம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கமல்குமார் 

சார்ந்த செய்திகள்