தமிழக அரசியலில் சர்ச்சைகளை உருவாக்க அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி வருகிறது பாஜக தலைமை. அதற்கேற்ப, அதிமுக மற்றும் திமுகவுக்கு எதிரான அஸ்திரங்களை அவ்வப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்து புகார் கொடுப்பதன் மூலம் ஏவி வருகிறார் சசிகலா புஷ்பா.
இந்த நிலையில், சில முக்கியப் பிரச்சனைகளை மையப்படுத்தி புகார் மனு கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சாவை சந்திக்க சசிகலா புஷ்பா நேரம் கேட்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் நேரம் ஒதுக்கப்படும் என உள்துறை அமைச்சக அதிகாரி மூலம் புஷ்பாவுக்கு தகவலும் தரப்பட்டிருக்கிறது.
இந்த சந்திப்பின் போது, தமிழக அரசுக்கு முட்டை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் சப்ளை செய்த கிருஸ்டி ஃபுட் நிறுவனம் நடத்திய ஊழல்களில் அதிமுக-திமுக கட்சிகளின் தலைமைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடிகளையும், கனிம வளத்துறையில் மணல் மாஃபியாக்கள் அடிக்கும் கொள்ளையில் முதல்வர் எடப்பாடிக்கு மாதம் தோறும் கொடுக்கப்பட்டு வரும் கோடிகளையும், ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த பல கோடி மதிப்பிலான நிலம் கிருஸ்டி ஃபுட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதில் புழங்கிய கருப்பு பண விவகாரத்தையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என புகார் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.