வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. தற்போது அதிமுக சார்பாக களமிறங்கியுள்ள ஏ.சி சண்முகம் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மேலும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் அதிமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டுயிட்டும் வெற்றிபெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த அவர், எம்.ஜி.ஆர் பெயரில் பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். திமுக சார்பாக களமிறங்கும் கதிர் ஆனந்த் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், முத்தலாக் விவகாரத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை நிலையை எடுத்துள்ளனர். குறிப்பாக துணை முதல்வர் பன்னீரின் மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் முத்தலாக் மசோதாவை ஆதரித்து பேசினார். இந்த மதோசா பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், மாநிலங்களவையில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் நவநீதிகிருஷ்ணன் முத்தலாக் தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசினார். ஆனால், ஓட்டெடுப்பில் அரசுக்கு மறைமுக ஆதரவை தெரிவிக்கும் பொருட்டு அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேறினார்கள். இந்நிலையில், முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை நிலை தன்னுடைய வெற்றியை கேள்விக்குறியாக்கும் என்று ஏசிஎஸ் தரப்பு கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் ஸ்பெஷல் கவனிப்புகளை செய்யலாமா என்று யோசிப்பதாகவும் ஒரு டாக் ஓடுகிறது.