Skip to main content

என்ன செய்யப் போகிறார் மோடி?

Published on 06/09/2017 | Edited on 06/09/2017


சர்வதேச நாடுகளின் கவனம் மியான்மரை நோக்கித் திரும்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மர் ராணுவத்தின் அதிரடித் தாக்குதலுக்கும், பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் அத்துமீறலுக்கும் பலியாகியுள்ளார்கள். கிட்டத்தட்ட 87,000 ரோஹிங்யாக்கள் புகலிடம் தேடி மியான்மரை விட்டுக் கிளம்பி அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா. கூறியிருக்கிறது.

யார் இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள்? தொடர்ந்து இவர்கள் வேட்டையாடப்படுவது ஏன்?

நேற்றைய பர்மாதான் இன்றைய மியான்மர். பர்மாவின் நகரங்களில் ஒன்று ராக்கினே. இந்நகரத்துக்கு அராக்கன் என்றும் ஒரு பெயர் உண்டு. இங்கு பேசப்படும் மொழி ரூயிங்கா. இந்த மொழியைப் பேசுபவர்கள் ரோஹிங்யாக்கள். இன்றைக்கு நான்கு தேசங்களாகப் பிரிந்துகிடக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா நான்கும் அன்றைக்கு ஒரே தேசமாக ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்தது.



அப்போது பர்மிய நிலங்களில் பண்ணை வேலைகளுக்கு, வேலையாட்கள் தேவையாக இருந்தது. அதற்காக அருகிலிருந்த பங்களாதேஷ் பகுதியிலிருந்து வேலையாட்களைக் கொண்டுவந்து இறக்கியது பிரிட்டிஷ் அரசு. 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து பங்களாதேஷ் உருவாகிவந்தபோது நிறைய வங்காள அகதிகள் மியான்மருக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதனால் பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதான் இன்றைய பிரச்சினையின் துவக்க கட்டம்.

1948-ல் மியான்மர் சுதந்திர தேசமானது. முஸ்லிம்கள் அதிகளவில் காணப்பட்ட அந்தப் பகுதியை கிழக்குப் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டுமென கோரி முஸ்லிம்களிடையே ஒரு கிளர்ச்சி எழுந்தது. ஏற்கெனவே மியான்மர் பெளத்தர்களுக்கு இருந்த முஸ்லிம்கள் மீதான மேலும் திடப்பட்டு இறுகுவதற்கான காரணியாக அமைந்தது இக்கிளர்ச்சி. அது பெருகிவளர்ந்து 1982-ல் பர்மிய தேசிய சட்டமாக உருப்பெற்றது.

பர்மாவில் மட்டும் ஏறத்தாழ 134 இனக்குழுக்கள் இருக்கின்றனர். அவர்களையெல்லாம் பர்மியர்களாக அங்கீகரித்த இந்தச் சட்டம், ரோஹிங்யாக்களை மட்டும் அங்கீகரிக்கவில்லை. இந்தச் சட்டம் ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமையை மறுத்தது. சுதந்திரமாக இடம்பெயரும் உரிமை, கல்விபெறும் உரிமை, சொத்துரிமை அனைத்தையும் மறுத்தது.

ரோஹிங்யாக்கள் மீது ராணுவத்தாலும், அல்ட்ரா நேஷனலிஸ்ட் புத்தர்களாலும் பல்வேறு முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் 2012-ல் நடந்த தாக்குதல் மிகக் கொடூரமானது. அது மியான்மர்மீது சர்வதேச கண்டனங்கள் கிளம்பக் காரணமானது. அன்றுமுதல் கடந்த ஐந்தாண்டுகளாக ரோஹிங்யாக்கள் தொடர்ந்து சீரான இடைவெளிகளில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி மியான்மரில் 13 லட்சம் ரோஹிங்யாக்கள் உள்ளனர். வங்காளத்திலிருந்து குடியேறியவர்கள் என்பதை மறுத்து, பர்மாவிலேயே கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்கள் என்பதற்கு ஆதாரமுள்ளது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். அதுபோல ரோஹிங்யாக்கள் முழுக்க முஸ்லிம்கள் மட்டுமே என்பதும் தவறான கருத்தாகும். இந்துக்களும், பெளத்தர்களும்கூட ரோஹிங்யாக்களில் அடக்கம். இவர்களுக்கும் குடியுரிமை உள்ளிட்ட இதர உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅனன் தலைமையில் ஒரு குழு ராக்கினே நகரைப் பார்வையிட்டுவிட்டு அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ராக்கினே பகுதியில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளே மோசமாக இருப்பதையும் அவற்றைச் சீர்செய்துதரவும், ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமை தரவும் பரிந்துரைத்திருக்கிறது. அரசியல் ரீதியான தீர்வுக்கும், இனரீதியான பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் வலியுறுத்தியிருக்கிறது. 

ஆனால், பர்மாவோ சமீபத்திய மோதல்களில் என்ன நடந்தது, பாதிப்பு எவ்வளவு என கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேச உண்மையறியும் குழுவையே இதுவரை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

ஐ.நா.வின் அறிக்கை மியான்மரின் தற்போதைய வெளியுறவு அமைச்சரும் அமைதிக்கான நோபல்பரிசு பெற்றவருமான ஆங்சூன் சாயியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கணக்கில் ராணுவத்தால் சிறைவைக்கப்பட்டிருந்த ஆங்சூன்சாயி, கட்சித் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஆனபிறகு உள்ளதை உள்ளபடி பேசுவதற்குத் தயங்குகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசுபெற்றவரும், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு இங்கிலாந்தில் குடியேறியவருமான மலாலா யூசுப்சாய் விமர்சித்துள்ளார். ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நடைபெறும் கொடுமைகளையும் ராணுவத்தின் அத்துமீறல்களையும் பற்றி ஆங்சூன் சாயி வாய்திறக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.



மியான்மரில் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையால் அங்கிருக்கும் முஸ்லிம்களே எந்த தேசத்துக்குள் அடைக்கலம் புகமுடியும் என தவித்துவருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில், “இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை கண்டறிந்து நாடுகடத்த சிறப்புப்படை அமைக்கப்படும்” என்று அதிர்ச்சியைக் கிளப்பினார். அப்போது தொடங்கிய பிரச்சினை மெதுமெதுவாக சூடுபிடித்துவருகிறது. இந்தியாவிலிருக்கும் ரோஹிங்யாக்களை திருப்பியனுப்புவது குறித்து பங்களாதேஷ் மற்றும் மியான்மருடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மத்திய அரசு சில வாரங்களுக்குமுன் அறிவித்தது.

இது ஒருபுறமிருக்க, மியான்மரின் அசாதாரண சூழ்நிலையால் மேலுமதிக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பங்களாதேஷ் இடமளிக்கவேண்டுமென சர்வதேச நாடுகள் எதிர்பார்த்தன. இதற்கு பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டிபுமோனி, “ஏற்கெனவே 4 லட்சம் ரோஹிங்யாக்கள் அகதிகளாக உள்ளனர். இன்னும் அதிக அகதிகளை எங்கள் தலையில் கட்ட நினைக்காதீர்கள். ஏற்கெனவே ஜனநெருக்கடி அதிகமுள்ள ஏழைநாடு நாங்கள். ஐ.நா.வோ இதர நாடுகளோ ரோஹிங்யாக்களை வெளியேறும்படியான சூழலை உருவாக்கக்கூடாதென மியான்மரை ஏன் வலியுறுத்தக்கூடாது?” என நியாயமான கேள்வியொன்றை எழுப்புகிறார்.
அண்டை நாடான மியான்மரின் உறவையே பெரிதும் இந்தியா விரும்புகிறது. அதனால்தான், இந்த விவகாரத்தில் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைக் கண்டித்த இந்தியா, மியான்மர் ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றி வாய்கூட திறக்காமல் நியாயத்தை நிலைநாட்டியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும் பிரதமர் மோடி, திரும்பும் வழியில் மியான்மர் செல்வார் எனத் தெரிகிறது. எனினும் ரோஹிங்யா விவகாரத்தில் மோடியின் வாயிலிருந்து, அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளிவருமென எதிர்பார்ப்பதெல்லாம் அதிகபட்சம்தான்.

இந்தியாவில் ஜம்மு, அசாம், உ.பி., ஹரியானா, டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், சென்னை போன்ற நகரங்களில் ரோஹிங்யா அகதிகள் வசித்துவருகின்றனர். அவர்களை இந்தியாவிலிருந்து கிளப்புவதற்கான பேச்சுகள் கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்தே மெல்ல வலுப்பெற்றுவருகிறது. அதற்கான முதல் குரல் ஜம்மு மாநில பா.ஜ.க.விலிருந்தே கிளம்பியது. ஜம்முவில் மட்டும் 16,500 ரோஹிங்யா அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசும் தேசிய மாநாட்டுக் கட்சியுமே காரணமென பா.ஜ. குற்றம்சாட்டுகிறது.

இந்தியாவில் பதிவுசெய்தும் செய்யாமலும் 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் வசிப்பதாகவும் அவர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆகஸ்டு 14-ல் மத்திய அரசு கூறியது. அதற்கேற்ப ஐ.நா.வின் அகதிகள் தொடர்பான ஒப்பந்தங்கள் எதிலும் இந்தியா கையெழுத்திடவில்லை என்கிறார் கிரண் ரிஜிஜு. அப்பேச்சுக்கு தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இந்தியா சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அகதிகளை அவர்களுக்கு உயிராபத்து நிலவும் இடத்துக்கு திரும்ப அனுப்பக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனால் எரிச்சலடைந்த கிரண் ரிஜ்ஜு, “நாங்கள் ரோஹிங்யாக்களை சுட்டுத்தள்ளவோ… கடலில்வீசவோ போவதில்லை. இந்தியா லட்சக்கணக்கான அகதிகளுக்கு புகலிடம் தந்திருக்கிறது. என்னசெய்ய வேண்டுமென எங்களுக்கு வகுப்பெடுக்காதீர்கள்” என கடுமையான தொனியில் மனித உரிமைக் குழுக்களை கடிந்துகொண்டிருந்தார். இத்தகைய தொடர்நிகழ்வுகளால் இந்தியாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களிடையே அச்சமெழுந்திருக்கிறது. “நாங்கள் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கெல்லாம் வரவில்லை. நாங்கள் நாடு திரும்பினால் பயங்கர கொடுமைக்கும் கொலைபாதகத்துக்கும் ஆளாவோம்” என்கிறார்கள் நடுக்கத்துடன்.



முகமது சலியுல்லாஹ், முகமது ஷாகிர் எனும் இரு ரோஹிங்யா அகதிகள் ரோஹிங்யாக்களை திரும்ப அனுப்பும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு விசாரணையை செப்டம்பர் 11-க்கு ஒத்திவைத்துள்ளது. இதற்கிடையில் வழக்கு விசாரணை முடியும்வரை, ரோஹிங்யாக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பான முடிவெதனையும் எடுக்கக்கூடாதென மத்திய அரசு உத்தரவாதமளிக்கவேண்டுமென அவர்களின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன் கேட்டார். அதற்கு மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மேத்தா, அப்படி எந்த உத்தரவாதமும் அளிக்கமுடியாதென மறுத்துவிட்டார்.

சுதந்திரத்துக்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில்தான் பர்மா, பங்களாதேஷ், இன்றைய இந்தியா மூன்றும் இருந்தன. அப்படிப் பார்த்தால் ரோஹிங்யாக்கள் நமது தூரத்துச் சொந்தம்தான். அகண்ட பாரதத்தின் புத்திரர்கள்தான். தனது சொந்த மக்களையே புகலிடம் தராமல் விரட்டியடித்த குற்றத்துக்கு இந்தியா ஆளாகக்கூடாது என்பதுதான் மத, நிற, இன பேத சாயத்தை தங்கள் நெஞ்சில் பூசிக்கொள்ளாத இந்தியர்களின் ஆசை.

- க.சுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்