ரஜினிகாந்த் மதவாதியல்ல!
ஆன்மிக அரசியலுக்கு விளக்கம் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
திராவிட நாட்டில், "ஆன்மிக அரசியல் செய்யப் போறேன்" என்று ரஜினி அறிவித்த பிறகு அவருக்கு ஆதரவும், கண்டனமும் அதிகரித்து வருகிறது. ரஜினி காந்தின் ஸ்டைலையும், பக்தியையும் பின் தொடரும் அவரது ரசிகர் மற்றும் நடிகரான லாரன்ஸ், ரஜினி கேட்ட காவலர்களில் ஒருவராக பேசுகிறேன் என்று மதுரை ரஜினி ரசிகர் மன்றத்தில் (தற்போது ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றப்பட்டுவிட்டது) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் அளிக்கும் விழாவில் பேசியுள்ளார். ரஜினி தனது ஆன்மிக அரசியல் பயணத்தை அறிவித்தவுடன் அவரை ஊடகம், சமூக வலைதளம், அரசியல்வாதிகள் என்று பலரால் விமர்சிக்கப்பட்டார். அதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ரஜினியின் ரசிகர் ராகவா லாரன்ஸ் நேற்று (07 ஜனவரி 2018) மதுரை அழகர் கோவிலில் நடைபெற்ற ரஜினிகாந்த் மக்கள் மன்ற விழாவில் பேசினார்.

கடவுள் ரஜினி வாழ்க, சூப்பர் ஸ்டார் வாழ்க என்று 40 வயதை தாண்டிய ரசிகர் குரல் கேட்க, மேடையில் விழாவை அமைத்த ரஜினியின் காவலர்கள் இருக்க, லாரன்ஸ் மைக் பிடித்து பேசஆரம்பித்தார், " ஏதோ ஒரு தேதியில் இந்த விழாவை அமைத்திருந்தார்கள், அதன் பிறகு தலைவர் மீட்டிங் இருந்ததால் இந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. மீட்டிங்கில் ரஜினி சாரின் அறிவிப்பிற்காக என் குடும்பமே எதிர்பார்த்து இருந்தது. தலைவரும் அதிர்ச்சி தரும் வகையில் நான் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார், ரசிகர்கள் எல்லாம் கொண்டாடி மகிழ்ந்தனர். நான் எனது வீட்டில் ரொம்ப நாட்கள் கழித்து குத்தாட்டம் போட்டேன். நடிகனா இல்லை என்றால், பறை மோளத்துடன் ரோட்டில் ஆடியிருப்பேன்". அதன் பிறகு ரஜினி சொன்னதில் மூன்று விஷயங்கள் பிடித்தது என்று ரஜினியை விமர்சித்தவர்களுக்கு பதிலடிக்க கொடுக்க ஆரம்பித்தார், நடுவில் அவ்வப்போது செண்டிமெண்ட், ஹீரோயிசம் கலந்து தனது படம் போலவே பேசினார்.

லாரன்ஸ், "ரஜினி அண்ணன் வெளிப்படையான அரசியல் செய்வேன் என்று சொன்னார், அதற்குப்பின் நான் சொன்னதை நிறைவேற்றவில்லை என்றால் மூன்றே வருடத்தில் போய்விடுவேன் என்றார், அடுத்து எனக்கு தொண்டர்கள் தேவையில்லை காவலர்கள் தேவை என்றார். தலைவர் எது சொன்னாலும் எனக்கு வேதவாக்குதான், யோசிக்கவே மாட்டேன். ஆனால் தொண்டன் வேண்டாம் காவலர் வேண்டும் என்றவுடன் யோசித்தேன். அதன்பிறகுதான் தெரிந்தது, மக்களுக்கு நல்லதுபோய் சேருவதற்கு நல்ல காவலர்களாக இருக்க வேண்டும் என்கிறார் என்று புரிந்தது. பின் அவருக்கு உடனே போன் செய்து அண்ணே நான் உங்கள் காவலனாக இருக்க போகிறேன் என்றவுடன். ஆல் தி பெஸ்ட் கண்ணா" என்றார்.

டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் மீட்டிங்கில் ரஜினி பேசிய விஷயங்களில் புரியாதவைக்கு இவர் ஒரு உரை ஆசிரியர் போன்று விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். ரஜினி பேசியதில் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைப்பான ஆன்மிக அரசியல் பற்றி லாரன்ஸ் ஒன்று சொல்கிறார். 'அதாவது ஒவ்வொருவரது ஆன்மாதான் கடவுள், அது நல்லது செய்தாலும் துணை இருக்கும் கெட்டது செய்தாலும் துணை இருக்கும். அதற்கு அந்த ஜென்மத்தில் பலன் கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
ஆகவே அவர் 'நம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செய்வதைத்தான் ஆன்மிகம்' என்று சொல்கிறார். இதில் எங்கு மதவாதம் இருக்கிறது? மதவாதி என்றால் உனக்குள்ளே இருப்பது குறிப்பிட்ட கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் தான் மதவாதி. ஆனால் இவர் உனக்குள்ளே இருப்பது ஆண்டவன்தான் என்று மட்டும்தானே சொல்கிறார். அதுவுமில்லாமல் அவருக்கு பிடித்த படம் பாட்ஷா என்கிறார். அவர் மதவாதியுமல்ல." என்றார்.

"ரஜினி ஒரு விதையை விதைத்தார் அதனால் தான் இன்று நாங்கள் அவ்வளவு நல்லது செய்கிறோம். இனியும் செய்வோம், நான் இங்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்றால் காரணம் ரஜினி அண்ணன் தான். அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர். அவர் சொல்லிய காவலர்களாக நாம் நடந்தால் போதும். மற்றதையெல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்றார்.
கடைசியாக, நான் எம்.எல்.ஏ. மற்றும் மினிஸ்டர் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்ல... ரஜினியின் காவலாளி மட்டும் தான்... அவர் கூப்பிட்டால் வந்து உதவி செய்வேன் இல்லையென்றால் அமைதியாக சினிமாவில் நடிப்பேன். காஞ்சனா 3 நல்லவிதமாக ஓடவேண்டும் என்று உங்களையெல்லாம் வாழ்த்தி விடைபெறுகிறேன்" என்று விழாவை சிறப்பித்து முடித்துக்கொண்டார்.
சந்தோஷ் குமார்