சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனத் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடிந்துகொண்டது, எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கிவிட்டது என்பதை நக்கீரன் விரிவாக எழுதியிருந்தது. இதையடுத்து கடந்த 17ம் தேதி இரவில், 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி அறிவிப்பு, வெளியானது.
அந்தப் பட்டியலில், 50வது பெயராக இருந்தவர், வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரிவுகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் என்ன சம்பந்தம் எனக் காவல்துறையினரிடம் கேட்டபோது, "ஒரு புண்ணாக்கும் இல்லை. நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகள் புண்ணாகிக் கிடப்பதுதான் மிச்சம்'' என்றார் காவல்துறை அதிகாரி ஒருவர்.
கரூர் அன்புநாதன் என்ற பெயரை அத்தனை சீக்கிரமாக தமிழக அரசியல்களம் மறந்திருக்காது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுக்காக அரசாங்க முத்திரையைப் போலியாகப் பதித்திருந்த ஆம்புலன்ஸில் கட்டுக்கட்டாகப் பணம் கடத்தி, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கைதானவர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஆம்புலன்சுடன், 10 லட்சத்து 38 ஆயிரத்து 820 ரூபாயும், பணம் எண்ணும் மெஷின்களும், வாக்காளர் பட்டியலும் கையும் களவுமாகப் பிடிபட்டன. இந்த ரெய்டை முன்னின்று நடத்தியவர்தான் எஸ்.பி. வந்திதா பாண்டே.
தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை, வருமானவரித்துறை எனப் பல தரப்பிலும் கரூர் அன்புநாதன் சோதனைக்குள்ளானார். வ.வ.துறையிடம் 4 கோடியே 77 லட்ச ரூபாய் சிக்கியது. அனைத்தும் அரவக்குறிச்சி தொகுதிக்கான ஆளுங்கட்சியின் பண விநியோகத்திற்கானது எனக் கண்டறியப்பட்டது. அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம். கரூர் அன்புநாதன் மீது வழக்குகள் பதியப்பட்டன.
ஃப்ளாஷ்பேக் முடிந்துவிட்டதா? சமீபத்தில் சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தலைமைச் செயலாளர் முன்னிலையில் டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடுமை காட்டியபோது, 5 ஆண்டுகளாக கரூர் அன்புநாதன் கேஸில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? எனக் கேட்டிருக்கிறார். வருமான வரித்துறை கமிஷனர் அப்போது அங்கு இல்லை. ஜாயிண்ட் கமிஷனர்தான் இருந்திருக்கிறார். கமிஷனர் ஏன் வரவில்லை என்றும் சுனில் அரோராவின் கோபம் வெளிப்பட்டுள்ளது.
அன்புநாதன் வழக்கு என்னதான் ஆனது? அரசு முத்திரையுடன் போலி ஆம்புலன்ஸில் பணம் கடத்தி, வாக்காளர்களுக்கு விநியோகித்தது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் வழக்கில் அன்புநாதன் விடுவிக்கப்பட்டுவிட்டார். வருமான வரித்துறை போட்ட வழக்குக்கு எதிராக நீதிமன்றம் சென்றது அன்புநாதன் தரப்பு. வழக்கு குவாஷ் செய்யப்பட்டுவிட்டது.
இதனை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்தபோது, "ஏன் அப்பீல் போகவில்லை?'’ எனக் கேட்டிருக்கிறார். காவல்துறையும் போகவில்லை. வருமானவரித்துறையும் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர் அன்புநாதன் மூலமாக அ.தி.மு.க. அமைச்சர்கள் நடத்திய பணப்பரிமாற்றம், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வருமானவரித்துறை தோண்டித் துருவியெடுத்தவற்றை நக்கீரன் அப்போதே விரிவாக வெளியிட்டிருந்தது. ஆனாலும், அதிகாரப் பலத்தாலும் செல்வாக்காலும் கரூர் அன்புநாதன் தப்பிவிட்டார். அவர் மீது நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி.வந்திதா பாண்டே?
2015ல் கரூர் எஸ்.பியாக நியமிக்கப்பட்டவர், 2016ல் ஆம்புலன்ஸில் இருந்த பணத்தைப் பிடித்ததும், ராஜபாளையம் பெட்டாலியனுக்குத் தூக்கியடிக்கப்பட்டார். 2017ல் ஆவடி பெட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். அதன்பின் 2018ல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், தற்போது பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்.
அதுபோலவே, கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகள் 570 கோடி ரூபாய் பணக்கட்டுடன் சிக்கின. அப்போது, திருப்பூர் எஸ்.பி.யாக இருந்த சரோஜ் தாக்கூர்தான் அதனை மடக்கினார். ஆளுங்கட்சியின் தலைமையிடமிருந்து நேரடியாக அனுப்பப்பட்ட பணம் என்ற செய்திகள் வெளியான நிலையில், மத்திய அரசே நேரடியாகத் தலையிட்டு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட பணம் எனக் கணக்கை முடித்தது. இதன் உள்விவகாரங்களை ‘கண்டெய்னர் பணம் - மறைக்கப்படும் உண்மைகள் - அம்பலப்படுத்தும் ஆதாரம்’ என 2016 மே 20-23 தேதியிட்ட நக்கீரன் இதழ் வெளியிட்டது.
இந்தியத் தேர்தல் களத்தில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை சிக்கியதில்லை. அதனைப் பிடித்த எஸ்.பி. சரோஜ் தாக்கூர், இப்போது சைபர் க்ரைம் பிரிவில் முடக்கப்பட்டிருக்கிறார்.
இதைச் சுட்டிக்காட்டும் காவல்துறை உயரதிகாரிகள், "ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்போது கேட்கின்ற தேர்தல் ஆணையம், கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்பது பற்றி கவலைப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டவர்களின் 5 ஆண்டுகால சர்வீஸ் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நேர்மையாக செயல்பட்டவர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள் விரக்தியுடன்.
ஆளுந்தரப்பினர் மாவட்டந்தோறும் கரன்சிகளையும் மதுபாட்டில்களையும் கொண்டு சேர்த்துவிட்டனர். அ.தி.மு.க.வுக்காக இந்த முறையும் ஆம்புலன்ஸை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் கரூர் அன்புநாதன்கள்.