sri balaji college pune balasubramanian

புனே பாலாஜி சொசைட்டி பல்கலைக் கழகத்தின் வேந்தரும் கொடைவள்ளலுமான கர்னல் பாலசுப்பிரமணியன் இன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

Advertisment

மன்னார்குடி அருகே கண்டிதம்பேட்டை கிராமத்தில் பிறந்த பாலசுப்பிரமணியன், வறுமையோடு போராடியப்டியே தனது வியர்வைத் துளிகளால் வளர்ந்தவர். இந்திய ராணுவத்தில் சாதாரண வீரராக சேர்ந்து, கடமை உணர்வாலும் பொறுப்புணர்வாலும் உயர்ந்து நின்றதால், இந்தியாவிலேயே முதன் முதலாக, குடியரசுத் தலைவரால் நேரடியாக கர்னலாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர் பாலசுப்பிரமணியன்.

இடையிலேயே விருப்ப ஓய்வுபெற்று, ராணுவத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் நோக்கத்தோடு ஸ்ரீபாலாஜி சொசைட்டி என்னும் கல்வி நிறுவனத்தைப் புனேயில் தொடங்கிய அவர், தனது கடுமையான உழைப்பால் அதைப்பெரும் கல்விக் குழுமமாக வளர்த்தெடுத்தார். விடுமுறையே இல்லாத அவரது கல்விக்குழுமம் அண்மையில் பல்கலைக் கழகமாக மாறியது. உயரங்களில் சஞ்சரித்த போதும் சொந்த ஊரை மறக்காமல் அங்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்தளித்திருக்கிறார்.

Advertisment

நம் நக்கீரன் ஆசிரியர் மீது பேரன்புகொண்ட அவர், நக்கீரன் குடும்பத்தில் ஒருவராகவே மாறி, நக்கீரனின் நலனில் அக்கறையும் ஆர்வம் காட்டிவந்தார். சிறந்த கவிஞர்கள் வளரவேண்டும் என்ற எண்ணத்தில், நக்கீரன் குழும இலக்கிய இதழான ‘இனிய உதயம்’ இதழில் கல்லூரி மாணவர்களுக்காக கவிதைப் போட்டிகளை ஓராண்டு நடத்தி, முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயையும், ஏனைய பரிசாக பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் பரிசாக வழங்கி, இளம் கவிஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து, இலக்கிய உலகின் பெருங்கவனத்தைப் பெற்றவர் பாலசுப்பிரமணியன்.

நக்கீரன் ஆசிரியரின் அன்பான அழைப்பை ஏற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை விழாவில் கவிப்பேரசு வைரமுத்துவோடு கலந்துகொண்டு சிறப்பித்த அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கம்பீரமான உரையை நிகழ்த்தி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டார். அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாலசுப்பிரமணியன், உடல்நலக்குறைவால் இன்று திடீரென இயற்கை எய்தினார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை புனேயில் நடக்க இருக்கிறது.

கர்னல் பாலசுப்பிரமணியனுக்கு திலகவதி என்ற மனைவியும்,n பரந்தாமன், பரமானந்தம் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

மராட்டிய மாநிலம் ஒரு தலைநிமிர் தமிழரை இழந்துவிட்டது.

-நாடன்