Skip to main content

மோடிக்குத் தெரியாதவரா இந்த நீரவ் மோடி? 

Published on 16/02/2018 | Edited on 16/02/2018

 

இந்தியாவின் பிரதமராக 2014ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்ததில் இருந்து ஏகப்பட்ட நாடுகளுக்கு அரசு முறைப்பயணமாக சென்று வந்திருக்கிறார் மோடி. வெறும் அரசுமுறை உறவை மட்டுமே ஏற்படுத்தியிருக்கும் இந்த ஒவ்வொரு பயணத்தையும் திட்டமிட்டதே கார்பரேட்டுகள்தான் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றபடி, மோடியும் கார்ப்பரேட் முதலாளிகளை தன்னுடன் அழைத்துச் செல்வதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த பயணங்களின் மூலம் அதானி, அம்பானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு கிடைத்த லாபமோ ஏராளம். கார்ப்பரேட்டுகளின் பிரதமர் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன என்பதை எல்லோருமே உணர்ந்திருக்கிறார்கள்.

 

மோடியின் நான்காண்டு ஆட்சியின் ட்ராக் ரெக்கார்டுகள் இப்படியிருக்க, இந்தியாவின் சமீபத்திய பரபரப்பின் நாயகனான  நீரவ் மோடியை நம்ம மோடிக்கு தெரியாதா என்ன?

 

இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றிருக்கும் மெகா பணமோசடி. இந்திய வங்கிகள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகக் சொல்லப்படும் சூழலில், இந்த மெகா மோசடி குறித்த புதுப்புது செய்திகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

 

Nirav

 

தெற்கு மும்பை பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில், வைர வியாபாரி நீரவ் மோடி, இதே வங்கிக் கிளையின் ஊழியர்கள் உதவியோடு ரூ.280 கோடி அளவுக்கு பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு முன்கூட்டியே பணப்பரிவர்த்தனை செய்யும் ஸ்விஃப்ட் முறையில் ரூ.11 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு மெகா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

 

வங்கி ஊழியர்களை சுயலாப ஆசைக்காட்டி, இந்தப் பண மோசடியைச் செய்தது மும்பையைச் சேர்ந்த வைரவியாபாரி நீரவ் மோடிதான் என்றும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டிருந்தது. இத்தனை பெரிய மோசடியைச் செய்து ஒரு வங்கியையே திவாலாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வங்கி நீரவ் மோடி அன் கோ மீது சி.பி.ஐ.யிடம் ஜனவரி 29ஆம் தேதி புகார் அளித்தது. அந்த புகார் 31ஆம் தேதி வழக்காகப் பதியப்பட்டது. ஆனால், நீரவ் மோடி குடும்பமோ ஜனவரி முதல் வாரத்திலேயே இந்தியாவில் இருந்து விமானம் ஏறி தப்பியோடி விட்டிருக்கிறது. அதாவது, புகார் கொடுப்பதற்கு முன்னரே, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தை இணைத்துப் பேசவேண்டாம் என்றும், பண மோசடி முந்தைய ஆட்சியில் நடைபெற்றது என்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளிக்கிறார். ஆனால், பிரதமராக மோடி ஆட்சியில் இருந்த 2016ஆம் ஆண்டே இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

 

ModiDavos

 

கடந்த 2012ஆம் ஆண்டு நீரவ் மோடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஹரி பிரசாத் என்பவர், ரூ.10 கோடியை அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். ரூ.25 கோடி காப்பீடாக பதியப்பட்டிருந்தும், தனக்கான எந்த ஆதாயமும் கிடைக்காததால் அவர் காவல்துறையை நாடியுள்ளார். இரண்டு முறை காவல்துறையும், ஒரு முறை சி.பி.ஐ.யும் இவரது வழக்கை நிராகரித்துள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான், அவர், 2016 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தை  நாடியிருக்கிறார். ‘எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில், நீதி கேட்டு உங்களிடம் வந்திருக்கிறேன்’ என அவர் தனது மனுவில் 'பரிதாபமாக' குறிப்பிட்டிருக்கிறார்.

 

'நீரவ் மோடி நிறுவனத்தின் சார்ஜ் சீட்டுகளைப் படித்தபோது, ஒரு மெகா மோசடி நடந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன். கோடிக்கணக்கான பொதுமக்களின் சேமிப்பு, இப்படி சுரண்டப்படுவதைத் தடுக்க எண்ணியே இந்த புகாரை முன்வைக்கிறேன்’ என்றும் தனது மனுவில் ஹரிபிரசாத் கூறியுள்ளார். இந்தக் கடிதத்தை கம்பெனிகளுக்கான பதிவாளருக்கு பிரதமர் அலுவலகம் மாற்றி அனுப்பியது. ஆனால், அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அந்தப் புகார் மனுவே மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

 

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என நீரவ் மோடி தப்பியோடிய பின் வேகமெடுத்திருக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான், ஹரி பிரசாத் அளித்துள்ள புகார் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 

இது ஒருபுறமிருக்க, கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்றம் நடத்திய கூட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பிரதமர் மோடியுடன் நீரவ் மோடியும் இருக்கிறார். இது தற்செயலான சந்திப்பு என்கிறார் சட்டத்துறை அமைச்சர். ஆனால், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஜனவரி 14ஆம் தேதி நீரவ் மோடியும் இருந்ததாக பி.டி.ஐ. செய்திக்குறிப்பு கூறுகிறது.

 

கல்விக்கடன், விவசாயக் கடன் என சில ஆயிரங்களை திரும்பச் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பொதுத்துறை வங்கிகள் கடுமையான நெருக்கடியைக் கொடுக்கின்றன. இதன்விளைவாக, அவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் அடிக்கடி செய்திகளாகின்றன. அதேசமயம், பெருநிறுவனங்கள் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றிய இழப்புகளை அரசாங்கமே ஈடுகட்ட முன்வருகிறது. அதாவது, மக்களின் வரிப்பணமும், சேமிப்புப்பணமும் எல்லாவிதத்திலும் நாசப்படுத்தப்படுகிறது.

 

Modii

 

லலித் மோடி, மல்லையா என நீளும் வரிசையில் இப்போது நீரவ் மோடியும் இணைந்திருக்கிறார். ஒவ்வொருவராக வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு திருடன் போலிஸ் ஆட்டம் காட்டுகிறது மத்திய அரசு. கார்ப்பரேட்டுகளிடம் இருந்து அதிக நிதி பெறும் ஒரு கட்சியின் பிரதிநிதியான மோடிக்கு தெரியாதவராக இருந்திருப்பாரா நீரவ் மோடி? என்று மக்கள் எழுப்பும் வினா விரைவில் விசுவரூபம் எடுக்கும் என்பது மட்டும் நிஜம்.

Next Story

நீரவ்மோடி வழக்கறிஞர் லண்டனில் பரபரப்பு வாதம்..! இந்தியா அதிர்ச்சி..!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Neerav Modi's lawyer sensational argument in London

 

மும்பையைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்றார். அதனைக் கட்டத் தவறியதால் அவர் மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இவர் மீது தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள லண்டனுக்குத் தப்பிச் சென்றார் நீரவ் மோடி. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவரும் நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டனில் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார் நீரவ் மோடி.

 

அவரை அங்கிருந்து விடுவித்து இந்தியாவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக, லண்டன் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது இந்திய அரசு. இதனையடுத்து ஒரு கட்டத்தில், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த,  பிரிட்டனின் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதனை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது பிரிட்டன் அரசு.

 

அதனை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நீரவ் மோடி. அது தள்ளுபடியான நிலையில் மீண்டும் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று (21.07.2021) லண்டன் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீரவ் மோடி சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், “நீரவ் மோடி தற்போது மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். தன்னுடைய நிலையை உணராதவராகவும் இருக்கிறார். அதனால் அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மனநீதியாக பெரிய பாதிப்புகள் அவருக்கு ஏற்படலாம். அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இந்தியாவுக்கு நாடு கடத்துவதிலிருந்து அவருக்கு விலக்கு வேண்டும்’’ என்று வாதிட்டுள்ளார்.

 

நீரவ் மோடி வழக்கறிஞரின் இத்தகைய வாதத்தை ஏற்க மறுத்து இந்திய அரசின் சி.பி.ஐ. தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நீரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் என சொல்லப்பட்ட வாதத்தில் அதிர்ச்சியடைந்துள்ளது இந்திய அரசு.

 

 

Next Story

வங்கிகளின் பெயருக்கு மாற்றப்பட்ட சொத்துக்கள்; சுருட்டியது ரூ. 22,500 கோடி... மீட்கப்பட்டது எவ்வளவு..?

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

mallaya modi choksi

 

இந்திய வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த பணக்காரர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.  இவர்களைப் போன்றே பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி, டொமினிக்கா தீவில் சிறையில் உள்ளார்.

 

இந்த மூன்று பணக்காரர்களுக்கும் எதிராக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்களை இந்தியாவிற்கு கொண்டு  வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மூவரும் மொத்தமாக 22,586 கோடி வங்கிகளில் மோசடி செய்துள்ளனர்.

 

இந்நிலையில், அமலாக்கத்துறை விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் 18,170.02 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளதோடு, 9371.17 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் கடன் வழங்கிய வங்கிகளின் பெயர்களுக்கு மாற்றியுள்ளது. அமலாக்கத்துறை மொத்தமாக முடக்கியுள்ள சொத்துக்களின் மதிப்பான  18,170.02 கோடி ரூபாய் என்பது வங்கிகள் இழந்த தொகையில் 80.45 சதவீதமாகும். தற்போது வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ள 9371.17 கோடி ரூபாய்  என்பது வங்கிகள் இழந்த தொகையில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.