மே பதினேழு இயக்கம் சார்பாக ''வெல்லும் தமிழ் ஈழம்'' மாநாடு 18-02-2018 அன்று சேப்பாக்கம் அண்ணா கலை அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் ஈர்ப்பாளர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர், இதை தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் வைகோ சிறப்புரை ஆற்றினார். அவரது பேச்சிலிருந்து...
"இந்த தமிழ்நாட்டிலே, இந்த மேடையில் உள்ள நானும் பழ.நெடுமாறன் அவர்களும் 43 ஆண்டுகளை ஈழ விடுதலைக்காகவும் தமிழ் உரிமைகளுக்காகவும் சுயநலமின்றி எங்கள் வயதைக் கொடுத்திருக்கிறோம், எங்கள் காலம் முடிந்துவிடும். அடுத்து வரும் காலத்தை யோசிக்கிறவன் நான். எங்களுக்குப் பிறகு மே பதினேழு இயக்கம் தான் தமிழ் உரிமைகளுக்காக போராடக்கூடிய இயக்கமாக இருக்கும். எனவேதான் தம்பி திருமுருகன் காந்தியை அனைத்து இடங்களிலும் முன்னிறுத்திப் பேசுகிறேன். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த பின்னர்தான் மே பதினேழு இயக்கம் பற்றி அறிந்தேன். அதன் நேர்காணல்களை கண்டேன், என் மனதைக் கவர்ந்தன.
கொழும்பிலே காமன்வெல்த் மாநாடு நடக்கவிருந்த சூழலிலே, கொலைப்போர் நடந்த சிங்கள நாட்டில் போர்க்குற்றவாளி ராஜபக்சேவின் தலைமையில் அந்த காமன்வெல்த் உலக மாநாடு நடக்கக்கூடாது என சொன்னோம். அண்ணன் நெடுமாறன் அறிக்கை தந்தார், நான் அறிக்கை தந்தேன், போராடினோம். அப்போது நம்மால் செய்யமுடியவில்லை. ஆனால் பேராசிரியர் ராமசாமி (பினாங்கு ராமசாமி) அவர்கள் மொரீசியஸ் பிரதமரிடம் நீங்கள் அந்த மாநாட்டிலே பங்கேற்றக்கூடாது என்று சொன்னார். மொரீசியஸ் காமன்வெல்த் நாடுகளில் ஒன்று. பேராசிரியர் ராமசாமியின் வேண்டுகோளை ஏற்று மொரீசியஸ் பிரதமர் நான் காமன்வெல்த் மாநாட்டில் பங்குகொள்ளமாட்டேன் என தெரிவித்தார்.
2014-ல் ஈழ விடுதலை மாநாடு பினாங்கு மாநகரிலே நடத்தினார் தம்பி வேல்முருகனும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தார் அந்த மாநாட்டில் என்னை சிறப்புரை ஆற்ற சொன்னார் பினாங்கு மாநிலத்தின் ஏழு இடங்களிலே என்னை கொண்டுபோய் உரையாற்ற வைத்தார். இன்று இந்த சென்னை பிரகடனம் பினாங்கு பிரகடனத்தின் தொடர்ச்சி, பினாங்கு பிரகடனம் மூலமாக உலக தமிழர் பாதுகாப்பு மையத்திற்கு தலைராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பேராசிரியர் ராமசாமி. தன்னை முன்னிலை படுத்திக்கொள்ளாமல் விடுதலை புலிகளின் பெயரை சொல்லி பணவசூல் செய்யாமல் நேர்மையாக யோக்கியமான ஒரு இயக்கமாக மே பதினேழு இயக்கம் இருக்கிறது என்பதினால் அதை மதிக்கிறேன்.
நெடுமாறனும் நானும் விடுதலை புலிகளை ஆதரித்தோம் என்ற காரணத்திற்க்காக பத்தொன்பது மாதம் சிறையில் இருந்தோம். ஜாமீன் கேட்டோமா? இல்லை. பத்தொன்பது வருடம் என்றாலும் இருப்போம். வெறும்பேச்சல்ல, ஒழுக்கத்தில் உறுதியில்... எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் காட்டுக்குள்ளே இருந்துகொண்டு விமானப்படையை தயாரித்தவன் இந்த உலக வரலாற்றில் எங்கள் பிரபாகரனை தவிர யார்? காட்டுக்குள் இருந்துகொண்டு நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்த எங்கள் பிரபாகரனுக்கு நிகராக உலக வரலாற்றில் ஒருவன் பெயரைச் சொல். பாவிகளே... அழித்தீர்களே புலிகளை, ஆயுதம் கொடுத்தீர்களே? கொடுக்காதீர்கள் என மன்றாடினேனே... பதினேழு முறை மன்றாடினேனே மன்மோகன்சிங்கிடம். எந்த தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு இங்கே உருவாகும் என்று அச்சப்பட்டுக்கொண்டு சிங்களவனுக்கு ஆதரவாக விடுதலை புலிகளை அழிக்க ஆயுதம் அனுப்புகிறீர்களோ, அதுவே தனித்தமிழ்நாடு அமைவதற்கான பாதையை அமைக்கும் என நேருக்கு நேராகச் சொன்னேன். ஈழப்படுகொலையை நாடு முழுவதும் கொண்டு போனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம். எங்களுக்கு ஓட்டு கிடைக்காமல் இருக்கலாம், ஜெயிக்காமல் இருக்கலாம். ஆனால் தமிழர் உரிமை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கான கடமையை நாங்கள் செய்தோம், அதேபோல் நீங்கள் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றிபெறட்டும்! ஈழ விடுதலை, அது நடக்கும் சுதந்திர தமிழ் ஈழம், அது மலரும் வெல்லும் தமிழ் ஈழம்! வணக்கம்."