“சார்... என் மகனைச் சீரழித்துவிட்டார்கள். பித்துப் பிடித்தவன்போல் இருக்கிறான். 12 வயது கூட ஆகலை. அவனைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள். நக்கீரன்தான் விசாரித்து என் மகனைப் பாதுகாக்கணும்” என்ற தாயின் கதறலால் அவர் சொன்ன இடத்திற்கு விரைந்தோம்.
உசிலம்பட்டி அருகிலுள்ள எழுமலையில் வழக்கறிஞர் அருளைச் சந்தித்தோம். “உசிலம்பட்டி, அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் கஞ்சா பொட்டலம் சர்வசாதாரணமாகப் புழங்குகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, 12 வயது மாணவனுக்கு கஞ்சா கொடுத்து குடிக்கவைத்து, அந்த இளம்பிஞ்சை கூட்டாக பாலியல் தொல்லை செய்துள்ளனர். தற்போது அந்த மாணவனுக்கு மனநிலை பாதிப்பாகியிருக்கிறது. இதுகுறித்து அவனது தாய், எழுமலை காவல் நிலையத்தில் புகாரளித்து 10 நாட்களாகியும் ஒரு சி.எஸ்.ஆர்.கூட பதியவில்லை” என்றார்.
சிறுவனின் தாயார் நம்மிடம், “என் ஒரே மகன் முத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எழுமலைக்கு அருகிலுள்ள கோபால்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் படிக்கிறான். எனது கணவர் மருதுபாண்டியுடன் புதுக்கோட்டையில் கூலி வேலைசெய்து வருகிறேன். எனவே என் மகன் பாட்டிவீட்டில் வளர்கிறான். ஐந்தாம் வகுப்பு வரை நல்லாதான் இருந்தான். அருகிலுள்ள கோபால்பட்டி அரசுப் பள்ளியில் சேர்த்தேன். நாங்கள் மாதத்திற்கு ஒருமுறைதான் வருவோம். இந்த பொங்கலுக்கு வரும்போது மிகவும் டல்லாக இருந்தான். ‘ஏண்டா பள்ளிக்கூடத்தில வாத்தியார் அடிக்கிறாரா?’ என்றேன். உம்முனு இருந்தான். ராத்திரி பயந்து எழுந்து, ‘என்னை விட்டுருங்கடா’ என்று ஏதோ உளறினான். நான் எதையோ பார்த்து பயந்துட்டான்போல என்று கோயிலுக்கு போய் மந்திரிச்சுவிட்டு வந்தேன். இந்தமுறை வந்தப்ப ரொம்ப குராவி இருந்தான்.
‘என்னடா நடந்தது.. ஏண்டா இப்படி இருக்க?’ என்றபோது என்னைக் கட்டிப் பிடித்து அழுதவாறே எல்லாத்தையும் சொல்ல ஆரம்பித்தான். எனக்கு குலையே நடுங்கிப்போச்சு. இவனிடம் கடந்த ஒரு வருடமா 11-வது படிக்கும் மூன்று மாணவர்களும், கல்லூரி படிக்கும் ஒரு மாணவனும் சேர்ந்து அசிங்கமா நடந்துக்கிட்டதைச் சொன்னான்.
முதலில் என் மகனுக்கு கஞ்சா, சிகரெட் கொடுத்து குடிக்க வைத்திருக்கிறார்கள். அதை வீடியோ எடுத்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் காண்பித்துவிடுவோம் என்று மிரட்டி டவுசரை கழட்டி ஏதோ செய்திருக்கிறார்கள். பள்ளி விட்டவுடன் அந்த கோபி வண்டியில் அடிக்கடி என் மகனை கூட்டிக் கிட்டு போய் தப்பு, தப்பா செய்யச் சொல்லியிருக்கான். செய்யவில்லையென்றால் சிகரெட் குடிக்கும் வீடியோவை போலீஸ், தலைமை ஆசிரியரிடம் கொடுக்கவா என்று மிரட்டியிருக்கார். வேறுவழியில்லாம அவங்க சொல்றதை பையன் செஞ்சிருக்கான். அவன் சொன்னதெல்லாம் கேட்டு என்னால் தாங்கமுடியவில்லை.
விசயம் தெரிந்தவுடன் நான் என் உறவுக்கார தம்பி வக்கீல் அருளிடம் சொல்லி அழுதேன். அவர் உடனே புகார் எழுதி எழுமலை காவல் நிலையத்தில் ஆய்வாளர் செல்வத்திடம் கொடுத்தார். இப்ப புகார் கொடுத்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்ப எனக்கு என்ன பயம்னா, வருகிற 10-ஆம் தேதி எழுமலையில் கோயில் திருவிழா வருகிறது. கூட்டம் அலைமோதும். அதில் என் பையனை வன்மம் வைத்து கொலை செய்துவிடுவார்களோ என்று பயமா இருக்கு” என்று கதறி அழத் தொடங்கினார் தாய்.
நாம் எழுமலை காவல்நிலையத்திற்கு சென்று அங்கு காவல் ஆய்வாளர் செல்வத்தைப் பார்த்தோம். “பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிற சிறுவனிடம் விசாரித்தோம். அவனை சென்ற வருடம்தான் பாலியல் தொந்தரவு செய்தார்கள். இப்ப இல்லை. சிகரெட் குடிக்க வைத்தார்கள் என்கிறான். மற்றபடி குற்றச்சாட்டுக்கு ஆளான மாணவர்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை. சின்ன விசயத்தை பெரிய விசயமாக்கிவிடாதீர்கள்” என்றார்.
முத்து படித்த பள்ளிக்குச் சென்றோம். அங்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் லெட்சுமிகாந்தனைச் சந்தித்தோம். அவர்கள் நம்மிடம், “நடந்த விசயத்தை மாணவன் முத்துவிடம் விசாரித்தோம். அந்த நான்கு மாணவர்களும் பாலியல் தொல்லைகள் செய்திருப்பதை சொன்னான். அதே போல அவனை கிணற்றில் அமுக்கும் போது அவனோடு படிக்கும் சக மாணவனான சதீஷ் பார்த்துவிட்டு கூச்சல் போடவே அங்கேயே அவனை விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். நாங்கள் தான் அவனது அம்மாவிடம் போன் செய்து உடனே போலீஸில் புகார் கொடுங்க என்று சொன்னோம்” என்றார்கள்.
கடைசியாக அந்தப் பையனை பார்த்தோம். “என்னடா தம்பி இவங்க சொல்றதெல்லாம் உண்மையாடா?” என்றதும், “ஆமாண்ணே, எனக்கு அந்த சிகரெட்டை குடிச்சா ஒன்னுமே தெரியாதுண்ணே. அந்த அண்ணன்மார்கள் என் டவுசரை அவுத்து என்னென்னமோ செய்வாங்க” என்று சொல்லிக்கொண்டிருக் கும்போதே அழத்தொடங்கினான்.