லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் குருவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும், குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் புதன்கிழமை பாண்டிச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடைபெறும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்கத் தலைவரும், இவற்றுக்கெல்லாம் மேலாக நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையுமாகிய குருவின் எதிர்பாராத மறைவையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வார துக்கம் கடைபிடித்து வருகிறது.
குரு அவர்களின் இறுதிச் சடங்குகளும், உடல் நல்லடக்கமும் காடுவெட்டியில் நேற்று லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றன. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பெருமளவிலான மக்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். குரு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மரியாதையும், நற்பெயரும் பெற்றிருக்கிறார் என்பதையே இவை காட்டுகின்றன.
மறைந்தும் மக்கள் மனங்களில் வாழும் குரு அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை மறுநாள் (30.05.2018) புதன் கிழமை காலை 10.00 மணிக்கு பாண்டிச்சேரி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும்,பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க. துணை அமைப்புகளின் முன்னணி தலைவர்களும் கலந்து கொள்வர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து குரு அவர்களின் நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியும், திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியும் காடுவெட்டி கிராமத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர்ப் பெரியவர்களால் முடிவு செய்யப்படும் நாளில் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.