Skip to main content

உலகின் மக்கள்தொகையில் 10% மக்களுக்கு நடக்கும் தேர்தல்!

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாநிலங்களில் இதனுடன் சட்டசபை இடைத்தேர்தல்களும் நடைபெற இருக்கிறது. மே 23ஆம் தேதி தேர்தல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 
 

vote

 

முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
 

130 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ள இந்திய நாட்டின் பொதுத் தேர்தல் பற்றியான சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்...
 

இந்த வருடம் நடைபெறும் தேர்தலில் 90 கோடி பேர் வாக்கு செலுத்த உள்ளனர். ஐரோப்பா மற்றும் பிரேசிலில் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட இந்தியாவின் பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்துவோரின் மக்கள் தொகை உள்ளது. இது 2014 பொதுத் தேர்தலில் வாக்கு செலுத்தியவர்களை விட 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
 

43.2 கோடி பெண்கள் இந்த முறை வாக்கு செலுத்த இருக்கின்றனர். 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி இளைஞர் இந்த முறை தேர்தலில் வாக்கு செலுத்த காத்திருக்கின்றனர்.
 

இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளில் 1,279 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், அதில் 7 சதவீதம்தான் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கடந்த பொதுத் தேர்தலில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் 668 பேர் மட்டும்தான் பெண் வேட்பாளர்கள் என்பது கவலைக்குறியது. இந்த வருடமும் இந்த நிலைதான் பின் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முற்போக்குக் கட்சிகள் என்று சொல்லும் சில கட்சிகளும் கூட அதிகமான பெண் வேட்பாளர்களை நிப்பாட்ட தயங்குகிறது.
 

இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு, தேர்தலை சரிவர நடத்துவதற்காகவே 300 முழுநேர அதிகாரிகள் இந்த அமைப்பில் வேலை பார்க்கிறார்கள். இந்த அமைப்பின் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது. மக்களவையில் உள்ள 545 உறுப்பினர்களில் 543 பேருக்காகதான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களை ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ரிஸர்வ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

india vote

 

கடந்த முறை குஜராத்திலுள்ள வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிட்டு 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். இதுதான் கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆகும்.
 

10 லட்சத்திற்கும் மேலான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலை நடத்த 10 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள்.
 

கடந்த வருடம் தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, 80,000 வாக்குச் சாவடிகள் மொபைல் தொடர்பு அற்றது என்றும், 20,000 வாக்குச் சாவடிகள் காட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
 

ஒரே ஒரு வாக்காளருக்காக கிர் காட்டுக்குள் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 39 நாட்களில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் வாக்குகளை மே 29ஆம் தேதி ஒரே நாளில் எண்ணப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலுக்கான செலவு எவ்வளவு தெரியுமா ரூ 38.7 பில்லியன். அதாவது மூவாயிரம் கோடிகளுக்கு மேல்.
 

கடந்த தேர்தலில் 18 லட்சம் வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த முறை 39 லட்சம் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்துகின்றது தேர்தல் ஆணையம்.
 

கடந்த முறை தேர்தலின்போது ரூ.12 பில்லியன் மதிப்புள்ள பணம், மதுபானங்கள், போதை வஸ்துக்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இந்த முறை ரூ. 14.5 பில்லியன் மதிப்பு பணம், மதுபானங்கள், போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் 6 கட்ட தேர்தல் இருக்கிறது என்பதால் இந்த முறை பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.