Skip to main content

அக்கா கரோனாவிற்கு ரொம்ப பயப்படறா... எனக்கு பயமில்ல... உயிரா? பசியா? கரோனவால் முடங்கிய மக்கள்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

கரோனா ஊரடங்கினால், வீட்டில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்தும், செல்போனில் வாட்ஸ்- ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், யுடியூப்களை பார்த்தும், பொழுது போக்குவதே நாட்டில் பலருக்கும் பெரும் சிரமமாக ஆகிவிட்ட நிலையில், மருத்துவத்துறையில் சேவையாற்றுவோரும், காவல்துறையில் பணியாற்றுவோரும், தூய்மைப் பணியாளர்களும் நெருக்கடியான நிலையை உணர்ந்து, செவ்வனே கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

கரோனா ஒருபக்கம் கொடூரமாக அச்சுறுத்தினாலும், எந்த சலனமுமின்றி, இயங்கிக்கொண்டே இருப்பவர்கள், நம்மிடையே உள்ளனர். அவர்களில் சிலரை சந்தித்தோம்.

 

incident



இரவு நேரத்திலும் பரபரப்பாக துப்புரவு பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள், அந்த தூய்மைப் பணியாளர்கள். அவர்களின் கவனமெல்லாம், அங்கங்கே கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதிலேயே இருந்தது. பிளாட்பார வாசிகளான இரு பெண்கள் அங்கே சாலையோரம் சோகமாக அமர்ந்திருந்தனர். சாலையில் நடமாட்டம் இருந்தால்தானே, யாராவது கருணை கண் கொண்டு பார்த்து உதவுவர் என்ற கவலை அவர்களின் அழுக்கு முகத்தில் பளிச்சென்று வெளிப்பட்டது.

 

incident



பால், அத்தியாவசியமாயிற்றே! தனது மாட்டிலிருந்து பால் கறந்துகொண்டிருந்த சண்முகய்யா, கறக்கிற வேலை பெரிசில்ல.. எல்லா பாலையும் நல்ல படியா வாடிக்கையாளர் வீட்ல கொண்டுபோய் சேர்க்கணும்.. ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. என்றார்.

பாரத் காஸ் சிலிண்டர் கம்பெனியில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள். டூ வீலரில் சிலிண்டர்களுடன் கிளம்பிய ஆசைத்தம்பி, "அத்தியாவசிய சேவை துறை' என, தங்களுக்கு வழங்கியிருந்த சான்றிதழை நம்மிடம் காண்பித்தார். பஸ் இல்ல.. ரயில் இல்ல.. ஆனா. எப்பவும் போல எங்களுக்கு வேலை. பெருமையாத்தான் இருக்கு. என்றார்.

 

incident



ட்ரை சைக்கிளில் வந்த அந்த தேங்காய் வியாபாரி, வீடுகளில் 'டோர் டெலிவரி' செய்து கொண்டிருந்தார் எங்களுக்கு தேங்காய்க் கடை இருக்கு. ஆனாலும், மக்கள் யாரும் தேங்காய் வாங்குறதுக்குன்னு வீட்ல இருந்து கடைக்கு வரவேணாம்னு நாங்களே அவங்கள தேடி வந்திருக்கோம். என்றார்.

அக்கா, தம்பியான வேல்விழியாளும் விக்னேஷ் வரனும் தொடர்ந்து பள்ளி விடுமுறை என்பதால், மாடுகள் இரை எடுப்பதற்காக இழுத்துச் சென்றனர். விக்னேஷ்வரன் சொன்னான். அக்கா கரோனாக்கு ரொம்ப பயப்படறா. எனக்கு பயமில்ல. என்றான் சிறுபிள்ளைத்தனமாக.


அந்த வாழைத் தோப்பில் முனியாண்டி நம்பக்கம் திரும்பாமலே வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மகன் சுரேஷ் செடிகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். இந்தக் களையெல்லாம் பிடுங்கினாத்தான் கன்னு எந்திரிக்கும். கரோனா எங்கள எதுவும் பண்ணாது. கிராமத்து பக்கம் அதுக்கு என்ன வேலை? என்றார், வெள்ளந்தியாக.

கரோனா வீடுகளில் பலரை முடக்கினாலும், அவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் மக்கள் இயங்கிய படியே உள்ளனர். அவர்கள் உழைப் பது அடுத்தவர்களுக்காக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தினரின் வயிற்றுக்கும் சேர்த்துதான். பால் கறந்து விற்பவரோ, காய்கறி வியாபாரம் செய்பவரோ தங்கள் தொழிலை 21 நாட்கள் முடக்கினால் அவர்களின் உணவுக்கு வழி கிடையாது. இதுதான், அன்றாட உழைப்பில் கிடைக்கும் வருமானத்தை நம்பி வாழ்பவர்களின் நிலை. இவர்கள்தான் இந்தியாவில் அதிகம்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு இது. நிதியமைச்சர் நிர்மலா கீதாராமன் அறிவித்த நிவாரண உதவிகளில், 80 கோடி ஏழை மக்களுக்கான உணவு தானியங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அதன்படி பார்த்தால், நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வசதியாக இல்லை என்பது தெரிகிறது. அவர்கள் எப்படி 21 நாட்கள் நிம்மதியாக முடங்கியிருக்க முடியும். தங்களுக்கான உணவையும், தங்கள் குடும்பத்தினருக்கான உணவையும் பெறுவதற்கு வருமானம் வேண்டும். கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகரப் புறங்களிலும் இந்த ஊரடங்கை மீறி மக்கள் நடமாடுவதற்கு அதுதான் காரணம். திடீரென 3 வாரங்கள் முடங்கியிருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பயமும் பதற்றமும் ஏற்பட்டு விடுகிறது.

கரோனா என்பது உலக நாடுகள் அனைத்துக்குமே புதவிதமான பயங்கர அனுபவத்தை தந்துள்ளது. வல்லரசுகளே நிலைகுலைந்துள்ளன. இந்த நேரத்தில் இந்தியா போன்ற வளரும் நாட்டில், மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காத வரை தனித்திருத்தல் சாத்தியமில்லை. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் இருப்பவர்களிடம் வீட்டுக்குள் அருகருகே உட்காரதே.. தனித்தனி அறையில் இருக்கவும் என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றது.

கிராமத்தில் உள்ள சாதாரண வீடுகளில் அறை என்பதே இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரேஒரு சிறு அறைதான். 4 பேர் வாழக்கூடிய குடும்பத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் தனித்திருக்க முடியாது. அக்கம் பக்கத்தாரிடம் பேசாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில், இதுபோன்ற தொற்றுநோய்க் காலத்தில் புதியவர்கள் தங்கள் கிராமத்திற்குள் வராதபடி பார்த்துக் கொள்வார்கள். அவர்களும் புதிய இடங்களுக்கு செல்லாதபடி இருப்பார்கள். இதுதான் நோய்த் தடுப்பு முறை.

முன்னேறிய நகரங்கள் கூடச் செய்ய முடியாத, மறந்த, இந்தக் காரியத்தை , செயல்பாட்டைச் சமூக விலக்கை கடைபிடித்து தங்களின் மக்களைக் காப்பாற்றுவதில் முன் மாதிரியாகியிருக்கிறது தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் அருகயுள்ள தன்னூத்து என்கிற கிராமம்.

சுமார் 700 வீடுகளைக் கொண்ட விவசாய கூலி மக்களையுடைய 3500 எண்ணிக்கையிலான ஜனத்தொகையைக் உள்ளடக்கிய இந்தக் கிராமம், முக்கியப் பகுதிகளிலிருந்து, ரிமோட் ஏரியாவில் உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் கரோனாவின் தீவிரத் தன்மையை ஊருக்குச் சொல்லி தடுப்பு நடவடிக் கையை எடுத்திருக்கிறார்கள். தங்களின் கிராம எல்லையில் தடுப்பு வேலியை அமைத்து அதில் தங்களின் பாதுகாப்பிற்காக ஒரு போர்டையும் வைத்துள்ளனர்

உள்ளூர் நபர்களைத் தவிர வெளியூர்க்காரர்கள் கிராமத்திற்குள் வர கண்டிப்பாக அனுமதியில்லை என்று பார்வையில்படும்படி எழுதியுள்ளனர்.

நமக்கான பாதுகாப்பு நாமேதான் என்பதை உணர்ந்திருக்கிறது தன்னூத்து கிராமம்.

ஒவ்வொரு ஊரும் அதனதன் தன்மைக்கேற்ப தங்களைக் காத்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், அரசின் உத்தரவுகளுக்கும் கட்டுப்பட வேண்டியது பொதுமக்களின் கடமை. அந்தக் கடமையை அவர்களுக்கு ஒரே நாளில் புரிய வைத்துவிடவேண்டும் என்பதற்காக காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

மக்களுக்குப் பொறுப்பில்லை என்று ஒற்றை வரியில் சொல்லி, அப்பாவிகள் பலர் லத்திக் கம்புகளின் வீச்சுக்கு ஆளாவதும், கரோனா போன்ற கொடுமைதான். சுற்றுவதற்காகவே டூவீலர் வாங்கிய இளைஞர்கள் பலருக்கு வீட்டில் முடங்கும் மனநிலை இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. அவர்களின் மனநிலையை லத்தி அடி மூலம் மாற்றிவிடலாம் என்ற கணக்கில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவரை என்ன ஏது என்று விசாரிக்காமலேயே போலீஸ் அடித்த வீடியோ வைரலாகி அதிர வைத்தது. டூவீலர் ஓட்டினாலே அடி விழும் என்றால் மக்கள் பயந்து கொண்டு வரமாட்டார்கள் என்பது தப்புக் கணக்கு என்கிறார் தமிழக பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சுப்ரமணிய பிரசாத்.

அடிப்பது என்பது காவல்துறையின் வேலை அல்ல. நெருக்கடியான இடங்களில் மக்களை ஒழுங்கு படுத்துவதுதான் அவர்களின் பணி. அந்தப் பணியை முறையாக செய்யவில்லை என டி.ஜி.பி. வரை பா.ஜ.க. புகாராக கொண்டு சென்றது. அரசுத் தரப்பிலிருந்தும் உத்தரவுகள் வந்ததால், வெள்ளிக்கிழமையன்று காவல் துறையின் லத்தி வீச்சு சற்று அடங்கி, தோப்புக் கரணம்-சிட்டிங் போன்ற தண்டனைகள் அரங்கேறின.

உயிர் பயம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் பிரதமரும் முதல்வரும் ஊரடங்கு, 144 என்று அறிவித்ததும் அதனை மக்கள் ஏற்றனர். அதே நேரத்தில், எப்போது தாக்கும் என்று தெரியாத கரோனாவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் முடங்கலாம். மூன்று வேளையும் பசிக்கும் வயிற்றைக் காப்பாற்ற இந்திய மக்கள் என்ன செய்ய முடியும்? லத்தி அடிதான் வாங்கியாக வேண்டுமோ!