Skip to main content

பயத்தால் நான் வீட்டில் முடங்கமுடியாது... யாரும் அப்படி நினைக்கக் கூடாது... அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி பேட்டி !

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

கரோனா தடுப்பில் அரசு என்னென்ன பணிகளை முன்னெடுத்து வருகிறது? 

கரோனா பரவல் மின்னல் வேகத்தில் இருப்பதாக நான் சட்டமன்றத்திலேயே கூறினேன்.கரோனாவின் தாக்கம் அதிகமுள்ள சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் தொடக்கத்தில் இருந்ததைவிட ஐந்தாவது, ஆறாவது பதினைந்து நாள் கால அளவில், பன்மடங்கு அதிகரித்திருந்தது.அப்படியொரு நிலை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே,தமிழக முதல்வர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். பிரதமரும் முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டார்.இதை உணர்ந்து பொதுமக்கள் தனித்திருந்தால் மட்டுமே தீவிரமடைவதைக் கட்டுப்படுத்த முடியும்.இந்த நிலையைக் கடந்தால் மட்டுமே, அடுத்தகட்ட பணிகள் பற்றி சொல்லமுடியும். 

 

admk



21 நாட்களுக்கு ஊரடங்கு என்பது மிகப்பெரிய கால அளவாக இருக்கிறதே? 

இந்த 21 நாட்கள் என்பது மிகமிக முக்கியமானது. வைரஸ் மியூட்டேஷன் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் வைரஸ் பல்கிப் பெருகும். அப்படிப் பெருகும் வேளையில், அதன் தொடர் சங்கிலியைத் துண்டிக்க மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தால்தான் முடியும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இருக்கும் தொற்று, சமூகத் தொற்றாக மாறிவிடக் கூடாது. அதற்காகத்தான் இத்தனை ஆயிரம்பேர் கடுமையாக உழைக்கிறோம். மக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மக்களிடம் அதீத நம்பிக்கையும், அதீத அச்ச உணர்வும் இருப்பதைப் பார்க்க முடிகிறதே? 

கரோனா நம்மைத் தாக்காது என்ற அதீத நம்பிக்கை யாரொருவருக்கும் இருக்கவே கூடாது. அதற்கான நேரம் இது கிடையாது. அதேசமயம், அதீத பயமும் தேவையில்லாதது. கரோனா வந்தாலே செத்துப்போவோம் என்ற நினைக்கத் தேவையில்லை. உடலில் நீண்டகாலமாக நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கரோனாவால் பாதித்தவர்கள் அனைவரும் இறந்துவிடவில்லை. இறப்பு விகிதமும் அதைத்தான் உறுதிசெய்கிறது. தொடர் சிகிச்சையின் மூலம் தொடர்ந்து சிலர் குணமடைந்து வருவதை அறிவித்துள்ளோமே.

கரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா? 
 

முழுமையான ஊரடங்கு. போக்கு வரத்துக்கான வாய்ப்பே கிடையாது. இப்படியான சூழலில் சாமான்யர்களுக்கு காய்கறி வாங்குவதே சவாலான காரியமாக இருக்கும்போது, உலகளவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய வெண்டிலேட்டர்கள், சீனாவில் இருந்து வரக்கூடிய மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் சிரமம் இருக்கத்தான் செய்கிறது.இருந்த போதிலும், இரண்டு மாதத்திற்கு முன்பே தயார்நிலையில் இருந்ததால் போதுமான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. தேவையானவற்றை ஆர்டர் செய்தும் வருகிறோம். சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல பகுதிகளில், பிரத்யேக மருத்துவமனைகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உறுதிப்படுத்தி இருக்கிறோம். இனிவரும் காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானால், சூழலுக்கு ஏற்றாற்போல் தயார் நிலையில்தான் இருக்கிறோம்.

உலகளவில் மிகப்பெரிய தலைவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களைப் போல அயராது உழைப்பவர்களின் நலன்குறித்த கேள்விகளும் எழுகின்றதே? 

அச்சம் ஏற்பட்டாலும் நான் வீட்டில் முடங்கமுடியாது. சமூகப் பொறுப்பிருக்கிறது. இரவு 1 மணியானாலும் களத்திற்குச் சென்று ஊக்கமளித்தால்தான்,மருத்துவப் பணியாளர்களுக்கான தார்மீக ஆதரவு கிடைக்கும். கரோனா மீதான அச்சம் ஒருபுறம் இருந்தாலும், அதைத் தடுப்பதற்கான பணியைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

கோவிட்-19 தடுப்புக்கான சிறப்புப் படையில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர் கிரிதரன், நாம் மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற கேள்வியெழுவதாகக் குறிப்பிட்டிருந்தாரே? 

கரோனாவின் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வளவு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இத்தனையும் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளே.நமக்காக, நாட்டுக்காக, நம் குடும்பத்திற்காக வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வளர்ந்த நாடுகளே இதில் அக்கறையில்லாமல் விட்டதால்தான் மிகப்பெரிய பேரழிவைச் சந்தித்திருக்கின்றன.இதையே உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும், நீங்கள் சொல்லுகிற நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய் அதிகாரிகள்,காவலர்கள் என அனைவரும் மக்களுக்காக உயிரையும் எண்ணாமல் ஓயாது உழைக்கிறார்கள். எனவே, இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் அசவுகரியங்களை நமக்காகப் பொறுத்துக்கொண்டு, கட்டாயமாக வீட்டிலேயே இருக்கவேண்டும்.மக்கள் கையில்தான் எல்லாமே இருக்கிறது. இதனை நக்கீரன் வழியாக நான் வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

தொகுப்பு - ச.ப.மதிவாணன்
படம் : ஸ்டாலின்