Skip to main content

கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரிக்க அதிகாரிகள் சம்மதம்! 

Published on 13/05/2020 | Edited on 13/05/2020


  

koyambedu market



சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு கரோனா பரவியதில் பெரும்பங்கு கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இருக்கிறது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்கிற வகையில், தற்போது கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை மாதவரம் மற்றும் திருமிழிசைக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்திருக்கிறார்கள் இபிஎஸ்சும், ஓபிஎஸ்ஸும்.


கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூன்றாக பிரித்து சென்னை மற்றும் சென்னையை சுற்றி 3 இடங்களில் உருவாக்க வேண்டும்  என சில்லறை வியாபாரிகள் சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்திருந்ததை நக்கீரன் இணைய தளத்தில் பதிவு செய்திருந்தோம். 

கோயம்பேடு, வடசென்னை, வண்டலூர் என 3 இடங்களில் மொத்த வியாபார சந்தைகளை உருவாக்குவதன் மூலம், நோய் தொற்று போன்ற பெரும்நோய் தாக்கத்தின்போது தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக கையாள முடியும் என்பதுடன், கோயம்பேட்டை மையப்படுத்தி உருவாகும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்க முடியும் என்றும் அந்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததையும் நமது செய்தியில் பதிவாகியிருந்தது.

 

 


இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன்பு சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். உட்பட உயரதிகாரிகளுடன்  இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் விவாதித்தனர். அப்போது, கோயம்பேடு சந்தையை மூன்றாக பிரிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அந்த ஆலோசனையில், மூன்றாக பிரிப்பது காலத்தின் கட்டாயம். பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் சொன்னதை இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கோயம்பேடு சந்தை விரைவில் மூன்றாக மாறும் என்கின்றன சி.எம்.டி.ஏ. வட்டாரங்கள். 

இதற்கிடையே, திருமழிசையில் மாற்றப்பட்டிருக்கும் தற்காலிக சந்தையும், கோயம்பேடு மாதிரியான கூட்ட நெரிசலில் சிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது தவிர, கோயம்பேட்டில் இருந்த சில்லரை வியாபாரிகளுக்கு திருமழிசையில் கடைகள் ஒதுக்கப்படாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்களிடமும் அதிருப்திகள் வெளிப்படுகின்றன.