விஜய் நடித்த "மெர்சல்' பட ஆம்புலன்ஸ் காட்சியையே ஓவர்டேக் செய்கிறது 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடமிருந்து நமக்கு கிடைத்த பகீர் தகவல். உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றாமல் கமிஷனுக்காக தூரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்ப்பது,… மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை திருட, மூளைச்சலவை செய்து பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வது என கமிஷனுக்காக தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களே படுபாதகச் செயல்களில் ஈடுபடுவதாக ஆதாரத்துடன் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் நம் இதயத்தில் அணுகுண்டை வீசியதுபோல் இருந்தது.
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை அட்மிட் செய்து பெற்ற கமிஷன் பட்டியல்
விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் யாராவது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், பெரும்பாக்கத்திலுள்ள பிரபல குளோபல் மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்து அதற்கேற்றாற்போல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏ.ஆர்.எஃப் (ஆம்புலன்ஸ் ரெஃபரல் ஃபீஸ்) என்று பெயர். ஒரு நோயாளியை அட்மிட் செய்து அவர் ஓ.பி. எனப்படும் புற நோயாளியாக மட்டுமே சிகிச்சை பெற்றுச் சென்றால் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் கமிஷன். அதுவே, உள்நோயாளியாக ஐ.சி.யூ.வில் அட்மிட் செய்யப்பட்டால் 30,000 ரூபாய்க்குமேல் கமிஷன். இதைவிட, முக்கியமானது கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட மனித உறுப்புகள் திருட்டு. இதற்கு ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருக்கும் இ.எம்.டி. எனப்படும் எமர்ஜென்சி மெடிசன் டெக்னீஷியனுக்கு கமிஷன் 75,000 ரூபாய்.
குளோபல் மருத்துவமனை ஏற்பாடு செய்த ஈ.சி.ஆர். பார்ட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அண்டு டெக்னீஷியன்கள்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை அட்மிட் செய்து பெற்ற கமிஷன் பட்டியல்
மூளைச்சாவு அடைந்தவரின் உயிரை இனி காப்பாற்ற முடியாது என்பது நன்றாக தெரிந்தும் பொய்யான நம்பிக்கையூட்டி குளோபல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் டாக்டர்களுக்கும் 10 சதவீத கமிஷன் என்று லட்சக்கணக்கில் பணம் ட்ரான்ஸாக்ஷன் ஆகிக்கொண்டிருக்கிறது. காரணம் கல்லீரல், இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. குளோபல், அப்பல்லோ, ஃபோர்ட்டிஸ், மியாட், டாக்டர் ரேலா, செட்டிநாடு உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளில்தான் செய்யப்படுகின்றன. ட்ரான்ஸ்ப்ளண்ட் ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருப்பது பிரபல குளோபல் மருத்துவமனைதான்.
இங்கு ஒரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 30 லட்ச ரூபாய் எனவும் பேக் கேஜ் அடிப்படையில் 40 லட்ச ரூபாய் வரையும் பணம் வாங்குகிறார்கள். ஒரு நோயாளியிடமிருந்து எடுக்கப்படும் உறுப்புகள் மூலம் பல லட்ச ரூபாய் சம்பாதிக்கமுடியும். இதனால், வேறு மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்தவர்களைக்கூட குளோபல் மருத்துவமனைக்கு கொண்டுவந்து "மூளைச்சாவு' என்று அறிவிப்பார்கள். மூளைச்சாவு அடைந்தவர்களின் குடும்பத்தினரை மன உளைச்சலாக்கி, பணம் கட்ட முடியாத இக்கட்டான சூழலை உருவாக்கி, "சிகிச்சை செலவை குறைத்துக்கொள்கிறோம்' என்று கூறி அவர்களை எப்படியாவது மூளைச்சலவை செய்து உறுப்புதானம் செய்ய வைத்துவிடுவார்கள்.
விபத்துக்குள்ளானவர்களையும் மூளைச்சாவு அடைந்தவர்களையும் கொண்டுவந்து சேர்க்க, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சென்னை ஈ.சி.ஆர். சாலையிலுள்ள ரிசார்ட்டுகளில் "பார்ட்டி' ஏற்பாடு செய்பவர் குளோபல் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. பாஸ்கர் ரெட்டி தான். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், நோயாளிகளை பரிந்துரைக்கும் மருத்துவர்கள் என புரோக்கர்களுக்கு ஏ டூ இசட் செலவுகளை செய்வது ஆந்திராவைச் சேர்ந்த இந்த பாஸ்கர் ரெட்டி. இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து அழைத்துவருபவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் வில்லியம்ஸ். இவர்மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன.
இப்படி, தமிழகம் முழுக்க உள்ள 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் டெக்னீஷியன்களுக்கும் வலை விரிக்கிறார்கள். இதற்கு 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்தில் கோ-ஆர்டினேட்டர்களாக இருப்பவர்களும் துணையாக இருக்கிறார்கள். நோயாளிகளின் உயிரில் விளையாடி பணம் சம்பாதித்துக்கொடுக்கும் குளோபல் மருத்துவமனையின் ஹெச்.ஓ.டி. பாஸ்கர் ரெட்டி மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் எதிரொலிக்கின்றன. ஆனாலும், பாஸ்கர் ரெட்டி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தளவுக்கு பாஸ்கர் ரெட்டியால் வருமானம் பார்க்கிறது குளோபல் மருத்துவமனை.
இதுகுறித்து, பாஸ்கர் ரெட்டியிடம் நாம் கேட்டபோது, என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை'' என்று மறுத்தார். தொடர்ந்து, குளோபல் மருத்துவமனையில் நோயாளிகளை அட்மிட் செய்து கமிஷன் வாங்கிக்கொண்டிருப்பவரும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் அசோசியேஷன் தலைவருமான வில்லியம்ஸிடம் நாம் பேசியபோது, ''நான், குளோபல் மருத்துவமனையிலிருந்து எந்த பணமும் வாங்கவில்லை'' என மறுத்தவர், ''எங்களது போராட்டங்களுக்காகத்தான் நிதி வாங்கியிருக்கிறோம். குளோபல் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி உங்களுக்கும் ஏதாவது உதவி செய்கிறேன். எங்களை விட்டுவிடுங்கள்'' என்றார். குற்றச்சாட்டுகள் குறித்து குளோபல் மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டபோது, நம்மிடம் பேசிய ஆபரேஷன் ஹெட் மகாதேவன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
குளோபல் மருத்துவமனையிலிருந்து எந்தெந்த டிரைவர்கள் மற்றும் ஈ.எம்.டி டெக்னீஷியன்கள் எவ்வளவு கமிஷன் வாங்கினார்கள்? எவ்வளவு பணம் இவர்களின் வங்கிக்கணக்கில் ட்ரான்ஸாக்ஷன் ஆகியிருக்கிறது என்ற பட்டியலுடன் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் மாநிலத் தலைவர் செல்வக்குமாரின் கவனத்துக்கு கொண்டுசென்ற போது, "உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் உறுதியாக. காவல்துறையும் சுகாதாரத்துறையும் மிகத்தீவிரமாக விசாரணை செய்தால் பிரபல தனியார் மருத்துவமனைகளின் மனித உறுப்புகள் திருட்டு உள்ளிட்ட மாபெரும் ‘உயிர்க்கொள்ளை அம்பலமாகும்.