முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வெ.பொன்ராஜுக்கு உலகளாவிய பார்வை உண்டு. அவர், மாமல்லபுரத்தில் நடந்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்து நம்மிடம் நிறைய பேசினார். நம் நாட்டின் மீதான பற்றினால் அவர் கொட்டித் தீர்த்த ஆதங்கம் இது -
வணிக நோக்கமே பிரதானம்!
சீன அதிபர் மாமல்லபுரத்துக்கு வருவது இது 2- வது முறை. ஏற்கனவே 60 ஆண்டுகளுக்கு முன்னால் சீன அதிபர் மாமல்லபுரம் வந்தார். இப்போது இவரும் வந்திருக்கிறார். ஏனென்றால், பல்லவ மன்னர்களது சைனத் தொடர்பு, அந்த வரலாற்று சிறப்புமிக்க தொடர்பு.. வாணிபத் தொடர்பு.. அந்த அரசியல் வர்த்தக தொடர்பு இருப்பதன் காரணமாக.. அதுவும் ஒரு சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் சந்தித்தது, ஒரு பேச்சுவார்த்தைக்கான ஒரு நல்ல சூழலைத் தந்திருக்கிறது.
அமெரிக்காவை எடுத்துக்கொண்டாலும் சரி, சைனாவை எடுத்துக்கொண்டாலும் சரி, இந்தியாவை ஒரு வாங்கும் சந்தையாகத்தான் அந்த இரு நாடுகளும் பார்க்கின்றன. நாம் வளர்ந்து வரக்கூடிய ஒரு பொருளாதார நாடாக இருந்தாலும் கூட, ஒரு வாங்கும் நாடாகத்தான் இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவைப் பார்க்கின்றன. மோடி அமெரிக்கா போனாலும் சரி, சீன அதிபர் இந்தியா வந்தாலும் சரி, இந்தியாவில் நாம் எவ்வளவு வணிகம் பண்ணலாம்? என்றுதான் பார்ப்பார்கள். அந்தச் சந்தைக்கு ஏற்ப இந்தியாவை அவர்கள் மதிப்பார்கள். ஏனென்றால் உலகத்திலேயே சைனாவும் இந்தியாவும் மிகப்பெரிய சந்தைகளாக இருக்கின்றன.
அந்த ஒரே வார்த்தை!
சைனாவைப் பொறுத்தவரையில், அது மிகப்பெரிய வர்த்தக நாடு. அவர்கள் வாங்கும் நாடு என்ற நிலையைத் தாண்டி உற்பத்தி நாடு என்ற நிலையை எப்பொழுதோ அடைந்து விட்டார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கே எழுப்பப்பட்ட கட்டமைப்பு என்ன தெரியுமா? ஒரே வார்த்தை! சைனாவினுடைய அந்த ஒரே வார்த்தையில், ஒட்டுமொத்த அடுத்த 30 ஆண்டுகளுக்கான இலக்கை நிர்ணயித்து அவர்கள் செயல்பட்டார்கள். அந்த ஒரு வார்த்தை- MANUFACTURE LOCALLY MARKET GLOBALY என்பதே! உற்பத்தியை நாம் சைனாவில் பண்ணுவோம். விற்பனையை உலக அளவில் பண்ணுவோம். அவ்வளவுதான். இதை 30 ஆண்டுகளுக்கு முன்பே டிசைட் பண்ணிட்டாங்க. இன்றைக்கு அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சைனாவுக்குத்தான் முதல் இடம். தற்போது, அமெரிக்காவுக்கும் சைனாவுக்கும் உள்ள வர்த்தக இடைவெளி 430 billion dollars. அமெரிக்கா நிறைய ஏற்றுமதி செய்த நிலை மாறி, இன்றைக்கு சைனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை வந்துவிட்டது. சைனாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள வர்த்தக இடைவெளி வெறும் 430 பில்லியன் டாலர் என்றால், அமெரிக்கா அதிகமாக சைனா பொருள்களை இறக்குமதி பண்ணுகிறதென்று அர்த்தம். இது எப்படி சாத்தியமாயிற்று என்றால், 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே சைனா ஒரு முடிவை எடுத்தது. அந்தத் தொலைநோக்குப் பார்வைதான் இந்த முன்னேற்றத்தை தந்திருக்கிறது.
வர்த்தகத்தில் முன்னேற்றம்!
சைனா கம்யூனிஸ்ட் நாடாக இருந்தாலும், 30- 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களும் இந்தியா மாதிரிதான் இருந்தார்கள். 1980-90-களில் இந்திய- சைனா வர்த்தக தொடர்பு 2 பில்லியன் டாலர் தான். இன்றோ, 95 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது. 2014- ல் 30 பில்லியன் டாலராக இருந்தது, இன்றைக்கு 60-70 பில்லியன் டாலராக, அதாவது டபுள் ஆகிவிட்டது. சைனாவுக்கும் இந்தியாவுக்கும் இருந்த வர்த்தக இடைவெளி கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்காகப் பெருகிவிட்டது. இதற்கு என்ன அர்த்தம்? சைனாவினுடைய இம்போர்ட் இந்தியாவில் அதிகம். அதாவது, இந்தியா சைனாவிடமிருந்து அதிகமாக இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில், ஏற்றுமதி கம்மியாகப் பண்ணுகிறதென்று அர்த்தம். அப்படியென்றால், கிட்டத்தட்ட 60-லிருந்து 63 பில்லியன் டாலர் வர்த்தக இடைவெளி ஆகிவிட்டது.
எதிரான நிலை!
சைனா, தன்னுடைய பார்வையில் தெளிவாக இருக்கிறது. இதை மூன்று விதமாகப் பார்க்கவேண்டும். Political, geo- political, economical ஆகிய மூன்றுதான். பிறகுதான் cultural. இந்த political sphere-ல்.. geo-political sphere ல், அப்புறம் economical sphere- ல்.. இந்தியாவையும் சைனாவையும் compare பண்ணிப் பார்ப்போம்! political sphere- ல் பார்த்தால், ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கும் சைனாவுக்கும் ஏகப்பட்ட தகராறுகள். கடந்த 1960- லிருந்து இன்று வரையிலும் தீர்க்கப்படவே இல்லை. யாராலும் தீர்க்கப்படவில்லை. அது அப்படியேதான் நிற்கிறது. ஊடுருவல் இருக்கிறது. இந்தியாவிலிருந்து சைனா போகிறவர்களுக்கு ஒரு விசா, அருணாச்சல பிரதேஷிலிருந்து இருந்து போறவங்களுக்கு தனி விசா. இதை நாம் எதிர்த்த பிறகு தனி சார்ட்-அவுட். அந்த அருணாச்சல பிரதேஷை இன்னும் சொந்தம் கொண்டாடிக்கிட்டிருக்காக்க. தற்போது சட்டபிரிவு 370-ஐ நடைமுறைப்படுத்துவதில் ஒரு ஸ்டேண்ட் எடுத்து, பிறகு அதை ரிவர்ஸ் பண்ணுறாங்க. அப்படியென்றால் political sphere- ல் சைனா இந்தியாவுக்கு எதிராகத்தான் இருக்கிறது. நமக்கும் சைனாவுக்கும் இடையிலுள்ள பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இந்த மாமல்லபுரம் சந்திப்பில் அது தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை. பேசுவார்கள்; பேசிக்கொண்டே இருப்பார்கள்; இன்னமும் பேசுவார்கள். இந்தப் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டேதான் இருக்கிறோம். 1960- லிருந்து இதே பேச்சுவார்த்தைதான் நடத்திக்கிட்டிருக்கிறோம். ஆனால்.. இன்றைக்கு சைனா எங்கேயோ போய்விட்டது. பொருளாதார நிலையில்.. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளைக் கேள்விகேட்கக் கூடிய நிலையில்.. வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கக் கூடிய தன்மையைப் பெற்று, அதன் இலக்கை அடைந்திருக்கிறது.