Skip to main content

என் கனவு இன்று மாறியிருக்கிறது... - கவுசல்யா சங்கர்!

Published on 15/03/2018 | Edited on 15/03/2018

                                            

kowsalya


ஆணவக்கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் பெயரில், அவரது மனைவி கவுசல்யா நேற்று சங்கரின் இரண்டாவது ஆண்டு இறந்தநாளில் (13 மார்ச்)  "சங்கர் சமூகநீதி அறக்கட்டளை" அமைப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திருமுருகன் காந்தி, வளர்மதி, நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், சமுத்திரக்கனி, எவிடென்ஸ் கதிர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கவுசல்யா பேசிய உரை...

 

"அன்று சுமந்திருந்த கனவு இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் எதிர்கால கனவு மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் சமத்துவமும், விடுதலையும்தான் எங்கள் கனவாக இருக்கிறது. அன்று சங்கர் மட்டும்தான் என் உலகமாக இருந்தான், இன்று என் கொள்கைகள்தான் என் உலகம். நான் என்பது என் லட்சியம்தான், சாதி ஒழிக, தமிழ் வாழ்க என்பதுதான் என் முழக்கம். இந்த மேடைக்கு பின் இருக்கும் காவல் நிலையத்தை என்னால் மறக்க முடியாது. என்னையும், சங்கரையும்  நடுசாலையில் கடத்த முயன்றபொழுது இதே காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். 

 

அன்று சங்கரைதான் உள்ளே இருந்த காவலர்கள் குற்றவாளிபோல் நடத்தினார்கள். எங்களை கடத்தியவர்களிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அவர்களை சுதந்திரமாக அனுப்பிவிட்டார்கள். நாங்கள் திருமணம் செய்துகொண்டதை குற்றமாகவும், அவர்கள் எங்களை  கடத்தியதை கடமையாகவும் பார்த்தது இந்த காவல்துறை. அன்று மட்டும் அவர்கள் மீதுசட்டப்படி எங்கள்  பக்கம் நின்று உருப்படியாக  நடவடிக்கை எடுத்திருந்தால்,சங்கர் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். இப்படி ஒரு மேடை அமைத்தும், நினைவேந்தலையும், அவன் பெயரில் அறக்கட்டளை அறிமுக விழாவும் நடந்திருக்காது. சங்கருக்கு நினைவேந்தல் விழாவிற்கு பொதுவெளியில் அனுமதிகேட்டால் அனுமதி தர மறுக்கின்றது அதே காவல்துறை. அனுமதி அளித்தால் சட்டஒழுங்கு பிரச்சனை வருமாம், பாதுகாப்பு அளிக்க முடியாதாம். பாதுகாக்கதானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களை பாதுகாக்கதானே நீங்கள் இருக்கிறீர்கள் அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் போட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இப்படி கேட்டிருக்கிறது. 

 

மற்றவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குதான் நான் இதுவரை சென்றுள்ளேன். இது நான் முன்னின்று நடத்தும் முதல் நிகழ்ச்சி. மக்கள் முன்னேற்ற முன்னணி, சங்கர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சுவரொட்டி ஓட்டுவதை தடுக்கிறது காவல்துறை. இனிமேல் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும். தோழர்களே, இனி நீங்கள் சங்கரின் நினைவேந்தலை பொதுவெளியில் நடத்தலாம், போஸ்டர் ஒட்டலாம், யாரும் தடுக்கமுடியாது. அதற்கான நீதிமன்ற ஆணை என்னிடம் உள்ளது வேண்டுமென்றால் கேட்டுபெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நிகழ்விற்கு அனுமதி மறுத்தவுடன் விலகி நிற்பதற்கு "நான் கோழை அல்ல பெரியாரின் பேத்தி". இங்கு கூடியிருக்கும் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், இலக்கு வேறுபாடு இருக்காது என்று நம்புகிறேன். சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை ஆரம்பித்ததற்கு காரணத்தை இங்கு வெளியிட்டுள்ள சிறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் ஒரு சில கருத்துக்களை, ஆதங்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன் இது குறித்து இழுத்துரைக்க இங்குள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.

 

சாதி ஒழிப்பிற்கும், சமூக நீதிக்கும்  உழைத்தவர்கள் புழுங்குவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இப்படிச்சொல்வதனால் அவருக்கு இதில் அக்கறை இல்லை, இவருக்கு அதில் அக்கறை இல்லை என்று பொருளாகாது. நாம் பல நேரங்களில் பிளந்து நிற்கின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதி ஒழிப்புக்கு தமிழ், தமிழர் உரிமைக்கான போராட்டங்களே அடிப்படை.  தமிழ் சமூக விடுதலைக்கு சாதி ஒழிப்பே அடிப்படை. ஆனால் இதையெல்லாம் செய்துகொண்டுதானே வருகிறோம் என்று சொல்லலாம். ஒரு களத்தில் கூர்மையாக போராடிக்கொண்டிருப்பவர்கள், மற்றோரு களத்தின் வெற்றியை லட்சியமாக கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாதி ஒழிக, தமிழ் வெல்க என்பதே அறக்கட்டளையின் முழக்கமாகும். சாதி ஒழிப்பு, தமிழ் விடுதலை, தமிழ் சமூக விடுதலை அவை நேர்கோட்டில் நிற்கிற உயிர் கொள்கைகளாக மாறவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படியிருந்தால்தான் அது  சாதி ஒழிப்புக்கு பயன்தரும் என்றும் நம்புகிறேன்.

 

இனிவரும் இளைய தலைமுறைக்கு இதனை கற்பிக்க விரும்புகிறேன். இளைய தலைமுறை என்று என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். சாதி ஒழிக, தமிழ் வெல்க என்று கூறி கொள்கைகளுக்காக ஒப்புக்கொடுத்து உழைப்பேன் என்று சங்கர் மீது ஆணை செய்கிறேன். ஒன்று மட்டும் நண்பர்களே பதவிக்கும், சமரசத்திற்கும், அதிகார இணக்கத்திற்கும் இங்கு இடமில்லை. சட்டத்திற்கு உட்பட்டும், ஜனநாயகத்திற்கு உட்பட்டும், அறவழியில் மக்களுக்கு தொண்டுள்ளத்துடனும், பாட்டாளி உணர்வோடும் உழைக்க வேண்டும். இறுதியிலும் இறுதியாக பசியற்ற, சுரண்டலற்ற பாட்டாளி மக்களின் தமிழ் சமூகத்தை தமிழ் மண்ணில் உருவாக்க வேண்டும். அதற்குகூட சாதி ஒழிக,தமிழ் வெல்க என்ற முழக்கமே தொடக்கப்புள்ளி. அப்படி ஒரு பொன்னுலகை உருவாக்க இதற்கு காரணமான சங்கரையும் அழைத்துக்கொண்டு பயணிப்பேன். சங்கர் நினைவேந்தலில் எல்லாவற்றையும் விட நாம் ஒன்று செய்ய கடமைப்பட்டிருக்கிறோம், ஆணவக்கொலைகளுக்கு எதிரான  தனிச்சட்டம். அதற்கு இன்று மட்டுமில்லை, அனைத்து நாட்களிலும் நாம் உழைத்தாக வேண்டும். ஆணவக்கொலைக்கான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி."

Next Story

‘நீங்களெல்லாம் குதிரையில் ஏறவே கூடாது’ - பட்டியலின இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
the incident that happened to the listed groom for ride a horse in gujarat

குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சடாசனா பகுதியைச் சேர்ந்தவர் விகாஸ் சவ்தா. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், நேற்று (14-02-24) மணமகனின் திருமண ஊர்வலம் நடைபெற்றது. 

அந்த திருமண ஊர்வலத்தின் ஒரு பகுதியாக மணமகனான விகாஸ் சவ்தாவை மணமகன் கோலத்தில் குதிரையில் ஏற்றி, அவருடைய உறவினர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், குதிரையில் அமர்ந்திருந்த விகாஸின் சாதிப் பெயரை சொல்லி இழிவுப்படுத்தி அவரை தாக்கியுள்ளார். அங்கு வந்த 4 பேரும் விகாஸ் சவ்தாவை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விகாஸ் சவ்தா படுகாயமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மணமகனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரில், ‘திருமண ஊர்வலம் நடைபெற்ற போது, குதிரையில் அமர்ந்திருந்த மணமகனை, 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள், ‘எங்கள் சாதியினர் மட்டுமே குதிரை ஓட்ட முடியும். நீங்கள் குதிரையில் ஏறவே கூடாது’ என்று சொல்லி அவர்கள் மணமகனை தாக்கி காரில் ஏறிச் செல்ல வற்புறுத்தினார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அவர்கள் அளிந்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சுமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; விசாரணை செய்த காவல் ஆய்வாளர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Action taken against police inspector who investigated for Tanjore incident

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

இந்த நிலையில், ஐஸ்வர்யாவை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா, ஐஸ்வர்யாவை அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக, பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையாவை கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.