சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது முஸ்தபா, இவர் தன் மேல் படிப்பிற்காக தனது நாட்டிலிருந்து தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் மேற்படிப்பை தொடர ஒரு ஆண்டு காலம் விசாவில் கடந்த 2016-ல் இந்தியாவுக்குள் வந்தார். தனது படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரிந்ததால் சில பாடங்களில் தோல்வி அடைந்து அரியர்ஸ் வைத்துள்ளார். இதை சரிசெய்து தனது படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்ல மேலும் 4 மாதம் கடந்து விட்டது. அதேசமயம் அவரது விசா காலம் முடிந்து அதிக நாட்கள் தங்கியதால் அபராத தொகை கட்டிவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் படிப்பு செலவிற்காக, அவர் திரும்பிச் செல்ல வைத்திருந்த விமான டிக்கெட் செலவுக்கான தொகையும் செலவு செய்து விட்டதால் வேறு வழி இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.
பின்னர் டிக்கெட் எடுக்காமல் ரயில் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த முகமது முஸ்தபா பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். சரியான வேலை கிடைக்காததாலும் இவர் இஸ்லாமியர் என்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் உணவருந்தி வந்துள்ளார். சொந்த நாட்டுக்கு செல்ல பணம் இல்லாத காரணத்தால் வழிப்பறி செய்ய முடிவு செய்து, சில சிறு சிறு தவறுகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் சில மாணவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது பொது மக்கள் மடக்கிப்பிடித்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயராஜ் நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த முகமது முஸ்தபா மீண்டும் செய்வதறியாத அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். இதனை கண்காணித்த உளவுத்துறை சென்னை மாநகர கமிஷனருக்கு தகவல் அனுப்ப சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வர மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் உள்பட 4 பேர் கொண்ட தனிப்படை முகமது முஸ்தபாவை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அவர் ஏன் தன் சொந்த நாட்டிற்கு போகவில்லை என்று விசாரணை நடத்தினர் அதில் அவர் சொந்த நாடான சூடானுக்கு செல்ல சில சட்ட சிக்கல் இருந்தது, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடவடிக்கையால் மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோரிடம் முகமது முஸ்தபா சொந்த நாடான சூடானில் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் டெல்லியில் உள்ள சூடான் தூதரகத்தில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் பெற்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள இந்திய குடிமையியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று, பின்னர் அவர் சொந்த நாடு திரும்ப விமான டிக்கெட் உள்பட 60 ஆயிரம் ரூபாய் ஸ்பான்சர் பெற்று சனிக்கிழமை காலை அவன் தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் ஜெயராஜ் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் மூன்று வருடம் கழித்து நான் சொந்த ஊர் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் நான் சொந்த ஊர் செல்வேனா தாய்நாடு அடைவேனா அல்லது இந்தியாவிலேயே இறந்துபோய் இருப்பேனா என்ற குழப்பத்தில் இருந்தேன். என்னை மீட்டு நான் செய்த தவறை மன்னித்து என்னை சென்னை போலீசார் என் தாய் நாட்டுக்கு செல்லவும் எனக்கு உதவி செய்ததை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்து மகிழ்ச்சியுடன் தாய்நாட்டுக்கு விமானத்தில் பறந்தார் முகமது முஸ்தபா. சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.