Skip to main content

டெல்டா மாவட்டங்களில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்... அள்ளிவிடும் அரசியல் தலைவர்கள்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து விட்டது. அதையும் மிஞ்சி கொண்டிருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார களம். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை மக்கள் முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் விதமும், அவர்கள் அள்ளிவிடும் வாக்குறுதிகளும் தேர்தல்களத்தில் படு சுவாரசியங்களாகவே இருக்கின்றன.

அந்தவகையில் டெல்டா மாவட்டங்களில் உள்ள நாகை, மயிலாடுதுறை, நாடாளுமன்றத்தொகுதிகளிலும், திருவாரூர் இடைத்தேர்தல் தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பேசும் பேச்சு அலப்பறைகள் மக்களின் மண்டையை உடைத்துக்கொள்ளும் படியே உள்ளது. அப்படி அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் பார்ப்போம்.

 

o.s. manian

 

பிரச்சாரத்தில்  பேசிய அதிமுக அமைச்சர் ஒ.எஸ்.மணியன், "மண்ணைக் காக்க மத்திய அரசும், மக்களை காக்க மாநில அரசும், செயல்படுவது அவசியம். அந்த வகையில் பாஜக மண்ணைகாக்கிறது, அதிமுக அரசு மக்களைக்காக்கிறது, ஆக மண்ணை, மக்களை காப்பதற்காக பாஜக அதிமுக கூட்டணிக்கு வெற்றி அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் ஒரு இடத்தில் கூட கலவரம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றார்.  "என்னது மக்களை காக்குறீங்களா, கஜாபுயலில் ஒரு ஆளக்கானும்," என்று நக்கலடித்துவருகிறார்கள் அப்பகுதி மக்கள்.
 

அதிமுக அமைச்சர் காமராஜ் பேசுகையில், "எதிரணியினர் அமைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணி, வேட்பாளர்கள் வெற்றி பெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்." என்று பேசினார்.

 

mutharasan

 

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராஜை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், "இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பிற நாடுகளால் எந்தவிதமான பாதிப்பும் ஆபத்தும் இல்லை. இந்தியாவில் ஆட்சி செய்யும் மோடியால்தான் நாட்டுக்கு ஆபத்து. இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த எழுத்துரிமை பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், படுகொலை செய்யப்படுகிறார்கள் இந்தியாவில் பாசிச கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. இரண்டாவது உலக போருக்கு காரணமான ஹிட்லரின் மறு உருவமாக மோடி செயல்படுகிறார்.
 

நீட் தேர்வு விவகாரம், காவிரி நீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளார் மோடி. இயற்கை சீற்றத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது மோடி கண்டுகொள்ளவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் சேர்த்து விடுதலை பெரும் நாள்" என்றார்.

 

k veeramani

 

மன்னார்குடியில் தஞ்சை தொகுதியின் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கத்தை ஆதரித்து வாக்கு கேட்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகையில், "கால்பந்தாட்டத்தில் விளையாடுபவர்கள் வெற்றி வாய்ப்பு பறிபோகும்போது, தோல்வி பயம் தெரிந்த உடனே பந்தை உதைப்பதை விட்டுவிட்டு எதிர் வீரரின் காலை உதைப்பதுபோல், மக்களவைத் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டது என்பதை உணர்ந்துகொண்ட பாஜக அதிமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தரம் தாழ்ந்து பேசி வருகின்றனர்.
 

கடந்த மக்களவைத் தேர்தலில் செய்வீர்களா செய்வீர்களா என்று மேடைக்கு மேடை பேசி பதவிக்கு வந்தவர்கள், மீண்டும் ஐந்து ஆண்டுகள் கழித்து தேர்தல் மேடைக்கு வருகின்றனர். அவர்களைப் பார்த்து சொன்னதையெல்லாம் செய்தீர்களா செய்தீர்களா என பொதுமக்கள் கேட்க தயாராகிவிட்டனர்." என்று பேசினார்.

 

ops

 

துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார், அப்போது அவர் பேசியது, "நாட்டை வலிமையாக ஆளும் பிரதமராக மோடி இருப்பதால் நம் நாட்டை தொட்டுப் பார்க்கக்கூட பிறநாட்டினர் அஞ்சுகின்றனர். அந்த அளவுக்கு நிர்வாக திறன் கொண்டவர் பிரதமர் மோடி. ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒரே நாளில் சட்டத்திருத்தம் செய்ய மோடிதான் உதவினார். சிறுபான்மை மக்களுக்கு மோடி பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். அதிமுகவில்தான் ஒரு தொண்டன் முதல்வராகவும் வர முடியும் என்கிற அதிசயம் நடக்கும். வேறு எந்த கட்சியிலும் இப்படி நடக்காது. நடக்கவும் முடியாது. ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது. பிரச்சாரத்தில் திமுக தொண்டரையும் முதல்வராக்குவோம் என ஸ்டாலின் வாக்குறுதி அளிக்கட்டும் பார்ப்போம்" என்றார்.
 

திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் பேசுகையில், "பிரதமர் மோடியால் இந்திய தேசத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தின் நிலைமையும் மோசமடைந்துள்ளது. மோடியால் இப்போது எல்லோருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது.  92 வெளிநாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கில் செலவிட்ட மோடி, நாட்டு மக்களுக்காக சாதித்தது எதுவும் இல்லை. சாட்டிலைட்டை விண்வெளி மையம் வீழ்த்தியதில் மோடிக்கு என்ன பங்கு இருக்கிறது என்பது தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும். கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. மக்களை ஏமாற்றிய மோடி இப்போது மக்களின் காவலன் என்கிறார். காவலாளியாக இருப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அது மோடியிடம் கிடையாது, மோடி ஆட்சியில் எல்லைப்பகுதியில் ஆயிரத்து 900 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,000 முறை பாகிஸ்தான் நம் எல்லையில் அத்துமீறி உள்ளது. 448 போர்வீரர்கள் எல்லையில் உயிரிழந்துள்ளனர் இதுதான் மோடி ஆட்சியின் சாதனை. இவருடன்தான் கூட்டணி வைத்துள்ளார் பழனிசாமி" என்றார் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில்.

அடக்கடவுளே இன்னும் என்னென்னவெல்லாம்  தேர்தல் வரைக்கும் கேட்க போறோமோ என மண்டை குழம்பி நிற்கிறார்கள் பொதுமக்கள்.