Skip to main content

"நைட்டு மழை வந்தா காலையில தண்ணிய காணோம்; நடுராத்திரியில் விழுந்த மரம் காலையில் இருப்பதில்லை; இதை பாஜகவால் தாங்க முடியவில்லை..." - கோவி. லெனின் பேட்டி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

xf

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். முத்தமிழ் அறிஞர் மகனான ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியைத் திராவிட மாடல் என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், அதற்கு வேறு தமிழ்ப் பெயரைக் கொண்டு அழைக்கலாம் அல்லவா என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பான கேள்வியைத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கோவி. லெனின் அவர்களிடம் முன்வைத்தோம். 

 

அதில் பேசிய அவர், " தமிழிசை அவர்கள் தற்போது என்னவாக இருக்கிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர். இதற்கு முன்பு முதலில் என்ன பதவியில் அமர்த்தப்பட்டார். தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக உள்ள தமிழிசை தன் பெயருக்கு முன்னாள் என்ன போடுகிறார். டாக்டர் தமிழிசை என்று போடுகிறாரா? இல்லை மருத்துவர் தமிழிசை என்று போடுகிறாரா என்று பார்க்க வேண்டும். டாக்டர் என்ற வார்த்தை தமிழா? இவர்களுக்குத் திராவிட மாடல் ஆட்சியைக் குறை சொல்ல முடியவில்லை. அதனால் வேறு எந்த வகையில் இதைக் குறை சொல்லலாம் என்று பார்க்கிறார்கள். இதே மாதிரியான உப்பு சப்பில்லாத விஷயங்களை முன்வைத்துப் பேசுகிறார்கள். 

 

திராவிட மாடல் என்று ஏன் சொல்ல வேண்டும், அதுவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் இவ்வாறு சொல்லலாமா என்று தமிழிசை அக்கா கேட்கிறார்கள். இவர்கள் வாயைத் திறந்தால் குஜராத் மாடல் என்கிறார்களே, அதனைக் குஜராத்தி மொழியில் சொல்லலாமே? இதைத் தமிழிசை அக்காவுக்குத் தெரியாது. அவரது கவனத்துக்கு வராமல் போய்விட்டதா? இவர்களுக்கு எதுவும் கவலை இல்லை. புயல் மழை எது வந்தாலும் இந்த திராவிட மாடல் ஆட்சி சமாளித்து ஆட்சி நடத்துகிறது. நைட்டு மழை வந்தா காலையில தண்ணிய காணோம். நடுராத்திரியில் விழுந்த மரம் காலையில் இருப்பதில்லை., இதை பாஜகவால் தாங்க முடியவில்லை. எனவே இவர்கள் அது சரியில்லை இது சரியில்லை என்று அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்" என்றார்.