Skip to main content

ஜிஎஸ்டி வாங்க மட்டும் நேரம் இருக்கிறது தமிழில் கோப்புகளை கேட்டால் நேரமில்லை என்பதா..? சீமான் தடாலடி

Published on 17/09/2020 | Edited on 17/09/2020
jkl

 

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடப்பு அரசியல் சூழல் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பேசினார். அவை வருமாறு, "மத்திய அரசின் தற்போதைய செயல்பாடுகள் வேதனை அளிக்கிறது. அனைத்து கோப்புகளையும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அனுப்புகிறார்கள், தமிழில் கேட்டால் அதற்கு எங்களுக்கு நேரமில்லை என்று கூறுகிறார்கள். எங்களிடம் ஜிஎஸ்டி வாங்க மட்டும் நேரம் இருக்கிறது, இதற்கு நேரமில்லை என்றால் அதற்கு அதிகார கொழுப்பு என்றுதானே பெயர். இது இன்னும் கொஞ்ச காலத்தில் கண்டிப்பாக வெடிக்கும்.

 

இப்போது கர்நாடகா, பஞ்சாப்பில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது. எதற்காக கர்நாடகா ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி இந்தி எழுத்துகள் எழுதிய பலகைகளை உடைக்கிறார்கள். பஞ்சாப்பில் இந்தி வாசகங்களை எதற்காக தார் பூசி அழிக்கிறார்கள். நாங்கள் செய்தால் பாசிசம், அவர்கள் செய்தால் நேஷனலிசமா? எனவே அந்த அளவிற்கு எங்களை தள்ளி விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். மத்திய பாஜக ஆட்சி தமிழக நலனில் எப்போதும் அக்கறை காட்ட மாட்டார்கள். அதிமுக கட்சியையும், ஆட்சியையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்களால் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா? இல்லை, இதற்கு முன் எப்போதாவது அவர்கள் குரல் கொடுத்துள்ளார்களா, இல்லவே இல்லையே. 

 

காவிரி விஷயத்தில் கூட மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக இருக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட யார் ஆண்டாலும் அவர்களின் ஆதரவு கர்நாடகத்திற்கே இருக்கும். ஏனென்றால் அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். எனவே வாக்கு வங்கியை மனதில் வைத்து அவர்கள் அவ்வாறு செயல்படுகிறார்கள். எனவே ஆளுகின்ற தகுதியை நாம் இழந்துவிடக்கூடாது என்று கர்நாடக மக்களுக்கு எது நன்மையோ அதை செய்யவே இருவரும் விரும்புவார்கள், அதையே இத்தனை ஆண்டுகாலமாக இருவரும் செய்து வந்துள்ளார்கள். இங்கே தமிழகத்தில் இருக்கின்ற காங்கிரஸ், பாஜகவை என்னோடு சேர்ந்து காவிரி உரிமைக்காக போராட சொல்லுங்களேன். போராட அவர்கள் வருவார்களா என்றால் நிச்சயம் இந்த பக்கம் வர மாட்டார்கள். கேரளாவில் முல்லை பெரியாருக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்னோடு இணைந்து போராடுவார்களா என்றால் அதுவும் கிடையாது. ஆக, அந்தெந்த மாநில மக்களுக்காக அவரவர்கள் பேசுவார்கள், ஆனால் எங்களை மட்டும் இந்தியராக இருக்க சொல்வார்கள். 

 

அதைபோல நீட் தேர்வை 15 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள் என்றால், அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ளக்கூடாது. மாணவர்களால் மட்டுமே போராடி இந்த சிக்கலுக்குள் இருந்து வெளியே வர முடியாது. நாம் எல்லாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மாணவர்கள் வேறு வழியே இல்லாமல்தான் அந்த தேர்வை எழுதுகிறார்கள். இது பெரிய கொடுமையான சூழல்தான். வட இந்திய மாணவர்கள் இங்கே வந்து படித்துவிட்டு நம் தமிழக மக்களுக்கு அவர்கள் எப்படி வைத்தியம் பார்ப்பார்கள். அதற்காக சாத்தியக்கூறுகள் ஏதாவது இருக்கின்றதா? பிரியாணி சாப்பிட ஆசை இருந்தாலும் கூழ் மட்டும்தான் இருந்தால் நாம் என்ன செய்ய முடியும், குடித்துதான் உயிர்வாழ முடியும். அதைத்தான் மாணவர்களின் தேர்விலும் நடைபெறுகிறது. இப்போது கரேனோவை ஒன்றும் செய்ய முடியாது அதனோடு வாழப்பழகிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். அதை போலத்தான இதுவும். பழக்கிகொள்ள அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. அவர்கள் எண்ணம் நிறைவேறாது என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மை.