திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்தக் கோடை சுற்றுலாத் தளத்திற்கு ரெகுலராக சுற்றுலாப் பயணிகள் வந்தாலும்கூட ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில்தான் கோடை சீசன் என்பதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குட்டிகளுடன் வந்து குளிர் பிரதேசமான கோடை இளவரசியின் இயற்கையை ரசித்து விட்டு போவது வழக்கம். இந்தச் சுற்றுலாப்பயணிகளை நம்பி 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், அதில் வரும் வருமானத்தை வைத்துதான் வயிற்றைக் கழுவியும் வருகிறார்கள்.
அதுபோல்தான் இந்த வருடமும் கோடை சீசனை நம்பி கோடை வாசிகள் இருந்து வந்தனர். ஆனால் உலகளவில் பரவிய கரோனா வைரஸ் இந்தியாவில் உள்ள தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பரவியது. இதனால் கடந்த 24-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போட்டது மட்டுமல்லாமல் ஊரடங்கு உத்தரவும் எடப்பாடி அரசு போட்டு உள்ளதால், மக்கள் வெளியே வராமல் கரோனா வைரசுக்குப் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் கோடையில் சீசன் தொடங்கியும் கூட சுற்றுலாப் பயணிகள் வராததால் லேக் மற்றும் தூண் பாறை, டம்டம்பாறை, குணா குகை, பேரிச்சம் உள்பட கோடையில் உள்ள சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது. அதுபோல் கோடை வாசிகளும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.
இதுபற்றி கோட்டையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது..... நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதாவது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலைக் கண்டுபிடித்தவர்களே ஆங்கிலேயர்கள் தான் அவர்கள்தான் ஆங்காங்கே குடியிருந்து வந்தனர். அதன்பின் ராணுவத்தினர் வந்தனர். அவர்களுக்குப் பொழுது போக்காக தான் தற்பொழுது உள்ள ஏரியில் போட்டிங் போய் வந்தனர். மற்ற நேரங்களில் ஏரி வெறிச் சோடித்தான் கிடக்கும். அதுபோல் ஆங்கிலேயர்களைத் தவிர தமிழர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத் தான் அப்போது இருந்து வந்தனர்.
அதுனால் கொடைக்கானல் நகரம் முதல் ஏரி வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் எப்பொழுதுமே வெறிச்சோடி தான் கிடக்கும். அப்படி ஒரு நிலை தற்பொழுது கரோனா வைரஸ் மூலம் கொடைக்கானலுக்கு வந்துள்ளதால் கோடை ஏரி முதல் நகரம் வரை வெறிச்சோடிக் கிடக்கிறது. மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்தாலும் கூட கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் மேல் மலைப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உள்ள மக்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அவர்களுக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வான ஐ.பி.செந்தில்குமார் அவ்வப்போது போய் தனி மனிதனாக நின்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதுபோல் ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சேர்மன் ஸ்ரீதரும் கூட ஓரளவுக்கு நகர மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.ஆனால், தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் கோடை மக்கள் உள்பட மேல்மலை பகுதி மக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அதுபோல் மேல் மலையில் விளையக்கூடிய விவசாயப் பொருட்களையும் கீழே கொண்டுவர முடியாமல் விளைநிலங்களிலேயே போட்டுவிட்டும் வருகிறார்கள். அந்த அளவுக்கு கரோனா மூலம் கொடைக்கானல் உள்பட மேல்பகுதி முழுவதும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.