Skip to main content

கன்னியாகுமரி மீனவர்களின் பிரச்சனை என்ன...

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
கன்னியாகுமரி  மீனவர்களின் பிரச்சனை என்ன...    

என்ன நடந்தால் இறங்கி வரும் இந்த அரசு?






ஒக்கி புயல் கடந்த 30 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தை உலுக்கியது. இதில் 180க்கும்  மேற்பட்ட படகுகளில் சென்ற 2000க்கும் அதிகமான மீனவர்கள் புயலின் காரணமாக கரை ஒதுங்கவில்லை. அதை தொடர்ந்து மீனவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களின் சொந்தங்கள் பதறினர். தமிழக அரசு ஆரம்பத்தில் கிட்டத்தட்ட  200  மீனவர்களே காணாமல் போயிருக்கின்றனர் என்று கூறியது. கப்பற்படையும், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியில் ஈடுபடும் போது  தான் 2000 மேற்பட்ட மீனவர்கள் புயலின் தாக்கத்தால் கேரளா, கர்நாடகா, குஜராத், கோவா, மஹாராஷ்டிரா, லட்சத்தீவுகள் உள்ளிட்ட இடங்களில்  தஞ்சம் புகுந்துள்ளனர் என்று தெரிந்தது.  இதற்கு பின்னர் அமைச்சர்களும் அதிகாரிகளும் , "அவர்களை எளிதில் மீட்டுவிடலாம். அதில் 97 மீனவர்கள் மட்டுமே மாயம்" என்கின்றனர். 


கேரளா கடற்கரையில் இதுவரை 18 தமிழக மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. திருவனந்தபுரம் மருத்துவமனையில் மேலும் சில உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. நீரில் உடல்களின் தோற்றம் உருக்குலைந்ததால் குமரியில் இருந்து மீனவர்களை அழைத்திருக்கின்றனர். இதுவரை செய்திகளில் தினமும் மீனவர்கள் சுட்டுக்கொலை, இலங்கை இராணுவம் கைது என்று மட்டும்தான் வந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது இயற்கையாலும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தும் அவர்களை கண்டுகொள்ள அரசுகளுக்கு  மனம்வரவில்லை போலும்.



                        


நேற்று (7 டிசம்பர்), கன்னியாகுமரி மக்கள் 5000 பேருக்கு மேல்  இரண்டு பகுதியாக பிரிந்து பேரணியாகச்  சென்று அரசாங்கத்திடம்  முறையிட முடிவு செய்து பின் அது போராட்டமாக மாறியது. பின்னர் அதில் பாதிப்பேர்  குழித்துறை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை எல்லாம்  'காணாமல் போன  மீனவர்களை மீட்க உண்மையாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,  முதல்வர் எங்களை வந்து சந்திக்க வேண்டும்' என்பது தான். ஆனால் முதல்வரோ ஆர்.கே.நகர் வேலைகள், சேகர் ரெட்டி டைரி என பல   வேலைகளில்  இருக்கிறார். 

ஒக்கி புயலால் நேர்ந்த இந்த பெருங்கொடுமை, மீனவர்களின் அலட்சியத்தால் மட்டும் வந்தததல்ல. ஒரு பேரிடர் புயல் வந்தால் அதற்கு அரசாங்கம் முன்னெச்சரிக்கை  தரவேண்டும். ஆனால் இங்கோ முன்னெச்சரிக்கை தராமல்  இது சாதாரணமாக வீசும் புயல் 50 கிமீ வேகம்  வரை தான் வீசும் என்று தெரிவித்ததாக  மீனவர்கள் கூறுகின்றனர்.  புயல் வீசியதோ 130 கிமீ வேகத்தில். கடலுக்குச்  சென்ற மீனவர்களுக்கு திடீர் என தொடர்புகொள்ளும் வசதி கூட இந்த டிஜிட்டல் இந்தியாவில்  இல்லை. இது போன்று தொழில்நுட்ப வசதிகள் இருந்தும்  எதுவும் அவர்களுக்கு அமைத்துத்  தரப்படவில்லை. தமிழகத்தின்  கடல்சார் வர்த்தகம் என்பது பலஆயிரம் கோடி மதிப்புள்ளது. அதில் மீனவர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனாலும், அவர்களுக்கு இந்த நிலை.






200 மீனவர்கள் காணாமல் போய் 2000 பேருக்கு மேல் திரும்பி வந்த கொடுமை இங்கு தான் நடக்கும். அரசு அளித்த தகவல் அது. மீட்பு நடவடிக்கை தான் இப்படியென்றால், நிவாரணங்களும் அவர்களுக்கு வேறு மாதிரிதான்.   கடந்த ஆண்டுகளில்  சென்னை வெள்ளத்திலும், வர்தா புயலிலும்  பாதிக்கப்பட்டோருக்கும், இறந்தோருக்கும் அதிகபட்சமாக   6 மாதங்களில்  நிவாரண உதவிகள் கிடைத்தன.  மீனவர்கள்  இறப்பிற்கு தரப்போவதாக  சொல்லப்படும் நிவாரணம் 2 லட்சம் காப்பீடு, கூடுதல் 10 லட்சம் பணம் எல்லாம் நல்ல நிவாரணம் தான். ஆனால் அது வழங்கப்படுவதில்தான் ஒரு சிக்கல் இருக்கிறது. இறந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் உடல் கிடைக்கும் வரை அவர்கள் மாயம் என்றே செல்லப்படுவார்கள். அதேபோன்று மாயம் ஆனவர்கள் 7 வருடம் வரை வரவில்லை என்றால்தான் அவர்களுக்கு சொல்லப்பட்ட நிவாரணம் தரப்படும். இப்போது கூட 97 பேர் மாயம் என்றுதான் சொல்கிறார்கள். நிவாரணம் கிடைக்கும் வரை அந்த குடும்பத்தின் நிலை என்னாவது?  1992 ல் இருந்து 2016 வரை 180க்கும் மேற்பட்ட  மீனவர்கள் காணாமல் போயிருக்கின்றனர். 

ஒருவர், இருவர் என இலங்கை கடற்படையாலும், இந்திய கடற்படை கைவிட்டதாலும் மீனவர்கள்  உயிரிழந்த போதும்  மாயமான போதும் கண்டுகொள்ளாத அரசு, இன்று ஆயிரக்கணக்கில் காணாமல் போன போதும், அதே போக்கில் இருப்பது, என்ன நடந்தால் இறங்கி வரும் இந்த அரசு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  இந்தப் போக்குதான் அவர்களை இன்று சாலைக்கு இறக்கியுள்ளது. கேரளாவோடு சேர்த்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.    

சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்