Skip to main content

இனிமேல் இந்த மடத்திற்கு வரவேண்டாம்... காஞ்சி மடத்தில் உச்சகட்ட அதிகார மோதல்... வெளிவந்த தகவல்!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

bjp


சங்கரராமன் கொலைக்குப் பிறகு மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கித் தடுமாறுகிறது என்கிறார்கள் அதன் நீண்டகால பக்தர்கள். அப்படியென்ன சர்ச்சை என காஞ்சி மடத்தின் நிலவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தோம்.
 


ஸ்ரீ உத்ராடம் திருநாள் என்கிற மருத்துவக் கல்லூரியை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சங்கரமடம் நடத்துகிறது. இந்தக் கல்லூரியை நிர்வாகித்து வருபவர் கௌரி காமாட்சி. மறைந்த ஜெயேந்திரருக்கு மிக மிக நெருக்கமான கௌரி காமாட்சியை இந்தக் கல்லூரியை சிஇஓ என்கிற பதவியில் நிர்வகித்து வருகிறார். அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கி அந்தக் கல்லூரியைப் புதிய நீதி கட்சியின் தலைவரும் கல்வி நிறுவனங்களைத் திறம்பட நடத்துபவருமான ஏ.சி.சண்முகத்திற்கு 142 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக வரும் செய்திகள் சங்கரமடத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன.

இதுபற்றி கௌரி காமாட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடம் பேசியது, "கௌரி காமாட்சிக்கு இந்தக் கல்லூரியை மறைந்த ஜெயேந்திரர் ஒரு சொத்தாகவே அளித்தார். அந்தக் கல்லூரியை அவரிடம் இருந்து பிடுங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் சங்கரமடத்தில் நடக்கிறது. அந்தக் கல்லூரியை நிர்வாகம் செய்தவற்கு எனப் புதிதாக ஒரு டிரஸ்ட் உருவாக்கப் பட்டுள்ளது. அதில் தி.மு.க. காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருந்த வி.ஆர்.ராஜகோபாலன், இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மேனான ஜெ.எஸ்.ராகவன், ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

60 வயதைத் தாண்டிய இவர்கள் மூவரையும் வால்வோ ஏ.சி. பஸ்களில் ஏற்றிக்கொண்டு வந்து, இந்தக் கல்லூரியை ஏ.சி.சண்முகத்திற்கு விற்கும் முயற்சிகள் பலமாக நடைபெற்று வருகிறது. அதற்காக இந்தக் கல்லூரி தொடர்பாக கேரள அரசிடம் உள்ள வருவாய்த்துறை ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதையெல்லாம் செய்வது ஆடிட்டர் குருமூர்த்தி.
 

bjp


அவர் ஒரு காலத்தில் சங்கரராமன் பக்கம் இருந்த நியாயத்தை ஏற்று, அவருடன் சேர்ந்து கொண்டு ஜெயேந்திரரை எதிர்த்தவர். ஜெயேந்திரரே, "இனிமேல் இந்த மடத்திற்கு வரவேண்டாம்' என குருமூர்த்தியிடம் கறாராகச் சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு சங்கர மடத்திற்குள் வந்த குருமூர்த்தி, மடத்தின் அனைத்து நிர்வாக பொறுப்புகளையும் ஏற்றார். இன்று ஒரு சிறிய பொருளை சங்கரமடம் வாங்க வேண்டும் என்றால் ஆடிட்டர் குருமூர்த்தியின் கையெழுத்தைப் பெறுவது அவசியம். அதற்காகவே ஆடிட்டர் குருமூர்த்தியின் வீடு அமைந்துள்ள மயிலாப்பூருக்கும், சங்கரமடம் அமைந்துள்ள காஞ்சிபுரத்திற்கும் இடையே சங்கரமடத்திற்கு சொந்தமான கார்கள் அடிக்கடி சென்று வந்து கொண்டிருக்கின்றன.
 


ஜெயேந்திரருக்கு நெருக்கமான கௌரி காமாட்சிக்கும் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் ஆகாது. அவரிடம் இருந்து கல்லூரி நிர்வாகத்தைப் பறிக்க கடந்த இரண்டு வருடமாக ஆடிட்டர் குருமூர்த்தி முயற்சிக்கிறார். இதுபற்றி ஜெயேந்திரருக்குப் பிறகு சங்கரமடத் தலைவரான விஜேயந்திரரிடம் பலமுறை கௌரி காமாட்சி முறையிட்டுள்ளார். அதற்கு விஜேயந்திரர் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என ஆசி கூறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கௌரி காமாட்சி இந்தக் கல்லூரியின் கணக்கு வழக்குகளை முறையாக ஒப்படைக்கவில்லை என்பது ஆடிட்டர் குருமூர்த்தியின் குற்றச்சாட்டு. ஆனால் அந்தக் கணக்கு வழக்குகளை விஜயேந்தரரிடம் ஒப்படைத்துவிட்டேன் என்பது கௌரி காமாட்சியின் வாதம். இந்தக் கல்லூரியை விட்டால் கௌரி காமாட்சிக்கு வேறு எந்தச் சொத்துகளும் கிடையாது. தற்பொழுது இந்தக் கல்லூரியில் விற்க தயாரிக்கப்பட்ட ஆவணங்களில் சிஇஓ என்ற அடிப்படையில் கௌரி காமாட்சிக்கு எந்த அதிகாரமும் பங்கும் வழங்கப்படவில்லை என கௌரி காமாட்சி ஆதரவாளர்கள் பொங்கி எழுகிறார்கள்.

ஏன் இதைப் பற்றி விஜயேந்திரரிடம் கேட்கவில்லை என நாம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு, "விஜயேந்திரரை ஏதோ சொல்லி ஆடிட்டர் குருமூர்த்தி தன் பக்கம் வைத்திருக்கிறார். இன்றைய மத்திய அரசில் அவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, சங்கரமடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார். சங்கரமடத்திற்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் இல்லை. சங்கரா கலைக்கல்லூரியில் வேலை செய்தோருக்குச் சம்பளம் கொடுக்கவில்லை. உத்திராடம் திருநாள் மருத்துவக்கல்லூரியில் நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். மாணவர்கள் சேர்க்கை மூலம் இருபது கோடி ரூபாய் தான் வருமானம் வருகிறது. ஆனால் இந்தக் கல்லூரியைப் பராமரிக்க 28 கோடி ரூபாய் ஓராண்டுக்குச் செலவாகிறது. இப்படிக் கோடிக்கணக்கில் நஷ்டம் வந்தாலும் சங்கரமடத்தின் பெயரைக் காப்பாற்ற கௌரி காமாட்சி பாடுபடுகிறார். அவரை பழிவாங்க ஆடிட்டர் குருமூர்த்தி துடிக்கிறார்'' என்கிறார்கள் கௌரி காமாட்சியின் ஆதரவாளர்கள்.
 

http://onelink.to/nknapp


அவர்களிடம் அடுத்தது என்ன என்று கேட்டோம். விரைவில் குருமூர்த்தியின் அதிகார பலமிக்க செயல்பாடுகள் குறித்து கௌரி காமாட்சி பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்குவார். அத்துடன் உத்திராடம் திருநாள் கல்லூரியை ஏ.சி.சண்முகத்திற்கு விற்பதை எதிர்த்து வழக்குத் தொடர உள்ளார் என்கிறார்கள். நாம் இதுபற்றி, சங்கரமடத்தையும் ஆடிட்டர் குருமூர்த்தியையும் தொடர்பு கொண்டோம். அவர்கள் இருவரும் பதில் அளிக்கவில்லை. அவர்கள் கருத்துத் தெரிவித்தால், அதனை வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது.

சங்கர மட சர்ச்சைகள் சங்கரராமன் என்ற மடத்தின் விசுவாசியின் உயிரைப் பறித்தது. அத்தகைய விபரீதங்கள் இனியும் நிகழக்கூடாது எனக் காமாட்சி அம்மனை வேண்டுகிறார்கள் பக்தர்கள்.