மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் - சுவாதி மஹாலில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் நக்கீரன் ஆசிரியர், நடிகர் நாசர், பேராசிரியர் அருணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
அதில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “கலைஞர் தனது 14 வயதில் பள்ளி மாணவனாக இருக்கும் போது பேராசிரியர் அன்பழகனையும், நாவலர் நெடுஞ்செழியனையும் வைத்து கூட்டம் போடுவதற்காக திருவாரூரில் ஏற்பாடு செய்கிறார். அப்பொழுது அந்த ஊரில் பெரிய பண்ணையார்களாக ரங்கநாதன் மற்றும் ராமானுஜம் இருக்கிறார்கள். இந்த இருவரும் சகோதரர்களாக இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் யார் பெரிய ஆள் என்ற போட்டி இருக்கும். அந்த ஊரில் யார் கூட்டம் நடத்தினாலும் இவர்களிடம் தான் வந்து நன்கொடை கேட்பார்கள். அந்த சமயம் கூட்டம் நடத்தவிருந்த கலைஞர் ரங்கநாதனிடம் சென்று நன்கொடை கேட்கிறார். ரங்கநாதனும் கலைஞருக்கு 5 ரூபாய் நன்கொடைக்கான ரசீதில் கையெழுத்து இட தன்னுடைய பேனாவை தேடுகிறார். அந்த சமயம் தன்னுடைய சட்டை பையில் இருந்த பேனாவை ரங்கநாதனிடம் கலைஞர் கொடுக்கிறார். ரங்கநாதனும் அந்த பேனாவை வாங்கிக் கொண்டு நன்கொடைக்கான ரசீதில் கையெழுத்து இட்டு கொடுத்திருக்கிறார்.
ரசீதை வாங்கிக் கொண்டு வெளியே வந்த கலைஞரிடம் ஒருவர், ‘அவர் தான் அவருடைய பேனாவை எடுத்து கையெழுத்திடப் போனாரே எதற்காக உன்னுடைய பேனாவை கொடுத்தாய்’ என்று கேட்டார். அதற்கு கலைஞர், ‘இந்த ரசீதில் அவர் எழுதிய 5 ரூபாய்க்கு முன்னால் 1 என்று எழுதினால் 15 ரூபாய் ஆகிவிடும். அதனால் இவருடைய சகோதரரிடம் நன்கொடை கேட்கும் போது ரங்கநாதனின் ரசீதை பார்த்து அதிக தொகையாக கொடுப்பார். அதற்காகத் தான் எனது பேனாவை கொடுத்தால் ஒரே மையால் திருத்த முடியும் என்பதற்காக கொடுத்தேன்’ என்று கூறினார்.
கலைஞர் சொன்னது போலவே ரங்கநாதனின் சகோதரர் ராமானுஜம் வீட்டிற்கு சென்று நன்கொடை கேட்கிறார். அதற்கு ராமானுஜம், தன்னுடைய சகோதரன் ரங்கநாதன் 15 ரூபாய் கொடுத்திருக்கிறார் என்றால் நான் 25 ரூபாய் தருகிறேன் என்று கொடுத்திருக்கிறார். தன்னுடைய 14 வயதில் கட்சியை வளர்ப்பதற்கு இத்தகைய உத்தியை கையாண்டு என்ன மாதிரியான கட்சிப்பணி ஆற்றியிருக்கிறார் என்பதற்கு சிறிய உதாரணம் தான் இது” என்று பேசினார்.