Skip to main content

அமைச்சரின் அண்ணனிடம் டீலிங்! குடிபோதையில் எகத்தாளம்! -நடவடிக்கை எடுத்த சிறைத்துறை!

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

 

“மதுரை மத்திய சிறைச்சாலை ரொம்பவே ஸ்ட்ரிக்டாம். யாரோ முன்னாள் கைதியாம். பேரு முத்துகிருஷ்ணனாம். அவரு ஜாமீன்ல வெளிய வந்து மதுரைல இருக்கிற ஹெரிடேஜ் ஸ்டார் ஹோட்டல் பார்ல பார்ட்டி வச்சாராம். முத்துகிருஷ்ணன் ஜெயில்ல இருக்கும்போதே உதவி ஜெயிலர் முனியாண்டி எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்தாராம். அந்த நட்புல, முனியாண்டியும், முதுநிலை காவலர்களான மணியும் மூர்த்தியும் அந்தப் பார்ட்டியில் குஷியா கலந்துக்கிட்டாங்களாம். இந்தத் தகவல், மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு தெரிஞ்சு போச்சாம். நேர்மையான அதிகாரியாச்சே! மூணு பேரையும் சும்மா விடுவாங்களா? சஸ்பென்ட் பண்ணிட்டாங்களாம்.”
 

bar



-சிறைத்துறையின் இந்த நடவடிக்கையை கலாய்க்கும் விதத்தில் நம்மிடம் சொன்ன  ‘சிறை பட்சி’  “உண்மையிலேயே நடந்தது என்னன்னா..?” என்று அந்த விவகாரத்தை விவரித்தது. 

 

madurai central jail


தமிழக அமைச்சர் ஒருவரின் அண்ணன் முன்னிலையில்தான், இரண்டு துறைகள் சம்பந்தப்பட்ட ‘டீலிங்’ அனைத்தும் நடந்துவருகிறது. மகன் குறித்த சொந்தக் கவலை ஒருபுறம் இருந்தாலும், தான் குஷியாக இருப்பதற்கு அந்த அண்ணனுக்கு மதுரைதான் வசதியாக இருக்கிறது. அதனால், அடிக்கடி மதுரைக்கு வருவார்.  அப்படி ஒரு விசிட்டாகத்தான், ஸ்டார் ஹோட்டலான ஹெரிடேஜ் மதுரைக்கு அன்று வந்தார். மதுரை மத்திய சிறை,  தனது வழக்கமான கவனிப்பை, முதல்நிலை தலைமைக் காவலரான நாகேந்திரபாண்டியன் மூலம் அவருக்குச் செய்தது. அதற்காகவே ஹெரிடேஜ் ஹோட்டலுக்குப் போனார் நாகேந்திரபாண்டியன். அப்போதுதான், எதிர்பாராதவிதமாக உதவி ஜெயிலர் முனியாண்டியையும், முதுநிலை காவலர்கள் மணியையும் மூர்த்தியையும் ஹெரிடேஜ் பாரில் சந்திக்க நேர்ந்திருக்கிறது.  


 

மத்திய சிறையில் பணி என்றாலும்,  ‘லம்ப்’ ஆக வருவாய் ஈட்டுவதற்கு, வளமான இன்னொரு தொழிலை சிலர் ‘சைடு பிசினஸ்’ ஆகப் பார்த்து வருகிறார்கள்.  அந்த விஷயமாக அமைச்சரின் அண்ணனைச் சந்தித்து ‘டீல்’ நடத்தவே நாங்களும் வந்திருக்கிறோம் என்று அந்தச் சந்திப்பின்போது, நாகேந்திரபாண்டியனிடம், உதவி ஜெயிலர் முனியாண்டி தரப்பு போதையில் தெனாவட்டாகப் பேசியிருக்கிறது.  “நான் மந்திரியின் அண்ணனைப் பார்க்க வந்தேன்..” என்று நாகேந்திரபாண்டியன் அழுத்தமாகச் சொல்ல.. “நாங்க மட்டும் என்னவாம்? அந்த நொண்ணனைப் பார்க்கத்தான் வந்தோம். நாங்களும் மந்திரி வரைக்கும் பணம் கொடுத்துத்தான் எல்லாமும் பண்ணுறோம்.  எங்களுக்கு மந்திரியையும் தெரியும். அவரோட அண்ணனையும் தெரியும்.” என்று உச்சஸ்தாயியில் உளறியிருக்கின்றனர்.  

 

police



ஸ்டார் ஹோட்டல் பாரில், பலர் முன்னிலையில் மந்திரியின் பெயர் நாறிவிட,  இந்த விவகாரம், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆபாஷ்குமார் வரை போனது.  அதன்பிறகுதான், மற்ற விஷயங்களை வசதியாக மறைத்துவிட்டு,  ஜாமினில் வெளிவந்த கைதியுடன் மது அருந்தினார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, மூவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துவிட்டார் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா. 

 

police



இது சம்பந்தமாக அந்தத் தொழில் நடத்தும் ஒருவரிடம் பேசினோம்.  “அமைச்சர் அண்ணனுடன் சந்திப்பா?” என்று கேட்டுவிட்டு,   “முன்பு இந்தத் தொழிலில் கொடி கட்டிப்பறந்த ஒருவர் ஜெயலலிதாவிடமே நேரில் பேசும் அளவுக்கு செல்வாக்காக இருந்தார். அப்புறம் இன்னொருவரிடமிருந்தும்  அந்தத் தொழில் பறிக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் அந்தத் தொழிலில்  உச்சத்தில் இருப்பவர்கள் புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர்தான்.  திண்டுக்கல்காரரின்  அக்கா மகன்கள் இருவரைக்  ‘கம்பெனி’ என்று அழைக்கிறார்கள்.  இவர்களிடம் கப்பம் கட்டிவிட்டால் போதும். அந்தந்த மாவட்டங்களில் வருவாய்த்துறையிலிருந்து காவல்துறை வரை எந்தத் தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.   ஃபைல் க்ளியர் பண்ணுவது போன்ற  தொடக்க வேலைகளை  அமைச்சரின் அண்ணன் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் டீலிங் நடத்துவது இங்கே பலருக்கும் பிடித்தமானது. விரும்பியே அள்ளிக்கொடுப்பார்கள். அவருடைய கைக்குப் பணம் போய்விட்டால் கொடுத்தவர்களின் தேவை பூர்த்தியாகிவிடும். அப்படி ஒரு நல்ல பெயர் அவருக்கு உண்டு.” என்றனர்.  


 

நாம் அமைச்சரின் அண்ணனைத் தொடர்பு கொண்டோம். “சொல்லுங்க..” என்றவர்,  ‘மதுரை மத்திய சிறைச்சாலையில் மூவர் சஸ்பென்ட் ஆனது குறித்து..’ என்று சொல்ல ஆரம்பித்ததுமே வேகமாக லைனைத் துண்டித்தார். அடுத்து நம் லைனுக்கு வரவேயில்லை. 
 

ஆளும் கட்சியினர் ஆசியுடன் தமிழகமே சுரண்டப்படும்போது, மத்திய சிறையில் மூவர் பணியிடை நீக்கம் என்பதை,   வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது.