ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தின் மனநிலையை உடைக்க பாலியல் அஸ்திரத்தை சி.பி.ஐ. பயன்படுத்த இருப்பதையறிந்து ராகுல்காந்தி வரை அதிர்ச்சி பரவியுள்ளது.
சிதம்பரத்தை யார் முதலில் கைது செய்வது என சி.பி.ஐ-அமலாக்கத்துறை ஆகிய இரு விசாரணை அமைப்புகளும் முட்டி மோதியதில் சி.பி.ஐ. முந்திக்கொண்டது. நீட்டிக்கப்பட்ட கஸ்டடியிலும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்; இன்னும் பல கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதில் பெற வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என மீண்டும் கோர்ட்டில் முறையிட 29-ந்தேதி ஆலோசித்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.
இது குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் சி.பி.ஐ. இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா. அப்போது அஜித்குமார் தோவல், "அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீதான கோர்ட் உத்தர வுக்குப் பிறகு, ஹோம் மினிஸ்டரின் (அமித் ஷா) ஆலோசனையை கேட்டு, முடிவு செய்து கொள்ளலாம் என ரிஷி குமாரிடம் தெரிவித்திருக்கிறார். அமலாக்கத்துறை வழக்கில் ப.சி.யைக் கைது செய்ய செப்டம் பர் 5-ந் தேதிவரை தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், சி.பி.ஐ. கஸ்டடி குறித்து டெல்லியில் விசாரித்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியாவின் சட்டவிரோத பண பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தவிர சிதம்பரத்துக்கு நேரடி தொடர்புள்ள எந்த குற்றச்சாட்டையும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ.யால் முன்வைக்க முடியவில்லை. குறிப்பாக, இந்த விவகாரத்தில் சிதம்பரம் லஞ்சம் பெற்றதற்கான எந்த ஆதாரமும் சி.பி.ஐ. வசம் இல்லை. அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புள்ள சில பினாமி நிறுவனங்களுக்கான ஆதாரங்களையும், வெளிநாடுகளில் கார்த்தி சிதம்பரம் வாங்கியிருக்கும் சொத்துக்கள் மற்றும் வங்களின் கணக்குகளையும் தான் வைத்திருக்கிறது சி.பி.ஐ. இதை வைத்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன.
குறிப்பாக, "நிதியமைச்சராக இருக்கும் போது விதிகளை மீறி அந்நிய செலாவணி முதலீடுகளுக்கு எதற்காக அனுமதியளித்தீர்கள்? வெர்ஜின் தீவிலிருந்து கார்த்திக்கு பணம் வந்திருக்கிறது. எதற்காக அந்த பணம் தரப்பட்டது? மலேசியா, ஸ்பெயின், பிரிட்டன் நாடுகளில் சொத்துக்களை வாங்க கார்த்திக்கு எங்கிருந்து பணம் வந்தது? செஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனங்களுக்கும் கார்த்திக்கும் என்ன தொடர்பு? அந்த நிறுவனங்கள் மூலமாகவே லஞ்ச பணத்தை பெற்றிருக்கிறீர்கள். 21 நாடுகளில் உங்களது பினாமி பெயர்களில் சொத்துக்கள் இருப்பதாக உங்கள் மீது குற்றம்சாட்டுகிறோம்' என்கிற ரீதியில் சி.பி.ஐ. கேள்விகளை வைக்க, குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை காட்டுங்கள். பதில் சொல்கிறேன். உங்கள் கற்பனைக்கு தோன்றியதையெல்லாம் கேள்விகளாக கேட்டால் என்னிடத்தில் பதில் இல்லை. என் பெயரில் வெளிநாட்டில் சொத்து இருப்பதை நிரூபித்தால், இப்போதே சிறைக்கு செல்லத் தயார் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி தந்துள்ளார் சிதம்பரம். அவருடைய துணிச்சலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.
விசாரணையில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்குத்தான் ரிலாக்ஸ் தேவைப்பட்டிருக்கிறது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியே சென்று போன் பேசிவிட்டு வந்து விசாரணையை நடத்தினர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பானவற்றில் முறைகேடான அனுமதி, லஞ்சம், சொத்துக்கள் குவிப்பு என எப்படி சுற்றி சுற்றி கேள்வி கேட்டாலும் சிதம்பரத்தை மடக்கிட முடியாது என்கிற சூழலுக்கு ஒரு கட்டத்தில் தள்ளப்பட்டனர். அதனால், சிதம்பரத்தின் மன உறுதியை உடைக்க பாலியல் அஸ்திரத்தை வீசியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதில்தான் நொறுங்கிப் போனார் சிதம்பரம்''‘என்கிறார்கள் கஸ்டடி விசாரணையை உன்னிப்பாக கவனித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள்.
மேலும் விசாரித்தபோது, "சிதம்பரத்தின் கைதுக்கு அடிப்படை ஆதாரமாக சி.பி.ஐ.யை காட்டுவது ஐ.என்.எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்தான். இதுபற்றி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பிய சி.பி.ஐ., "இந்திராணியை நார்த் ப்ளாக்கில் ஒருமுறையும், ஸ்டார் ஹோட்டல்களில் ஒருமுறையும் நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். எதற்காக அந்த சந்திப்பு?' என கேட்க, "அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இந்திராணி யார் என்பதே எனக்கு தெரியாதபோது சந்திப்பு எப்படி நடக்கும்?' என சிதம்பரம் எதிர்கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, "இந்திராணி எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில், எங்களுக்கு தேவையான உதவியை அவர் செய்து கொடுத்ததால் அவருடன் நெருக்கமாக இருந்தேன்' என்றும், சிதம்பரத்தின் மகனோடு பண பேரங்கள் முடிந்த நிலையில், பேர தொகை மட்டுமல்லாது ஹிந்தி நடிகைகள் வேண்டும் என கேட்டதால் 2 நடிகைகளையும் அனுப்பி வைத்தேன் என்றும் வாக்குமூலம் தந்திருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவிழ்த்துவிட, நொறுங்கிப் போயிருக்கிறார் சிதம்பரம்.
மன ரீதியாக அவர் தளர்ந்து போனதை உணர்ந்த அதிகாரிகள், அவரை அந்த சின்ன அறையில் குறைவான வெளிச்சத்தில் தனிமையில் இருக்க வைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சுத் துணையில்லாமல் இருந்தார் சிதம்பரம். இது போன்று அடிக்கடி தனிமையில் இருக்க வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அடிக்கடி சோர்வாகி விடுகிறார் சிதம்பரம். அவரது மன உறுதியை உடைக்க இப்படி திட்டமிட்டு பாலியல் அட்டாக்குகள் சிதம்பரத்தின் மீது ஏவப்படுகிறது.
சிதம்பரத்திடம் நடக்கும் விசாரணை ரகசியங்களை தன்னுடைய சி.பி.ஐ. நண்பர்கள் மூலம் தினமும் இரவு தெரிந்து கொள்ளும் ராகுல்காந்தி, பாலியல் அட்டாக்கை அறிந்து காட்டமாகியிருக்கிறார். உடனே கட்சியின் மூத்த தலைவர்களான சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் கபில்சிபில், அபிசேக்சிங்வி இருவரிடமும் ராகுல் விவாதிக்க, "சிதம்பரத்தை 30-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது அவரிடமே விசாரிப்போம்' என சொல்லியிருக்கிறார் கபில்சிபில். ஆக, சிதம்பரத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆவண ஆதாரங்கள் இல்லாததால் தடுமாறி வருகிறது சி.பி.ஐ. என்கிறார்கள் அழுத்தமாக காங்கிரஸ் தலைவர்கள்.
"ஸ்பெயின், பிரிட்டன், கனடா, சுவிஸ், மொரிசியஸ், மலேசியா நாடுகளில் உள்ள வங்கிகளில் சிதம்பரம் குடும்பத்தினருக்கு கணக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டிவரும் சி.பி.ஐ., அந்த வங்கிக் கணக்குகளின் ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் சொல்லி வருகிறது. இதற்கிடையே, மும்பை சிறையில் உள்ள இந்திராணியிடம் சிதம்பரத்தை நேரில் நிறுத்தி இந்திராணி மூலமாகவே பாலியல் விசயத்தை ஓப்பன் செய்ய வைத்து சிதம்பரத்தின் தூய்மையை கேள்விக்குள்ளாக்கும் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர் சி.பி.ஐ. அதிகாரிகள். அந்த சந்திப்பின் போது பாலிவுட் நடிகைகள் தொடர்பான வில்லங்கத்தையும் சொல்லுமாறு இந்திராணிக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.
இந்நிலையில், முதல் கணவர் மூலம் பிறந்த மகளை, தற்போதைய கணவரின் துணையுடன் கொலை செய்த வழக்கில் சிறைப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, ப.சி. கைது செய்யப்பட்டதை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பதன் பின்னணியையும் காங்கிரஸ் தரப்பு துருவுகிறது.