பேனர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அல்லாமல், பேனர் கலாசாரத்திற்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
இந்நிலையில், தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என்று ஒரு கண்டன வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘’உலகத்துல மிக கொடுமையான விசயம் என்ன தெரியுமா? வாழவேண்டிய பிள்ளைகளோட மரண செய்தியை பெத்தவங்ககிட்ட சொல்றதுதான். சுபஸ்ரீயின் மரண செய்தியும் அப்படிப்பட்டதுதான். தன் பெண்ணோட ரத்தம் சாலையில் சிந்திக்கிடப்பதை பார்க்கும்போது பெத்தவங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருடைய மனதிலும் திகிலும், மரண வலியும் கண்டிப்பாக வரும். பெண்களைப்பெத்தவன் என்கிற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது.
இந்த மாதிரி பல ரகு’க்களும், சுபஸ்ரீ’க்களும் அரசாங்கத்தோட அலட்சியத்தால கொல்லப் பட்டிருக்காங்க. ஏங்க...கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா? எங்க பேனர் வைக்கணும், வைக்கக்கூடாதுன்னு கூடவா தெரியாது. இவங்களைப்போன்ற அலட்சிய அதிகாரிகளாலும் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகப்போகின்றதோ?
எதிர்த்து கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக்கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதுதானே இவுங்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆளுங்க மேல எனக்கு மயிரிழை அளவு கூட பயமும், மரியாதை கிடையாது. உங்களுக்கு பயம் இருந்தால் என் கைகளை பிடித்துக்கொள்ளுங்கள். மக்கள் நீதி மய்யம் உங்களின் சார்பாக அந்த தவறுகளை தட்டிக்கேட்டு தீர்வும் தேடித்தர முற்படும்.
எங்களை ஆள்பவர்களை நாங்கதான் தேர்வு செய்வோம்; ஆனால், காலம் முழுவதும் அடிமையாக இருப்போம் என்பதை விட பைத்தியக்காரத்தனம் வேறு இல்லை. வாருங்கள்...தவறுகளை தட்டிக்கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம்’’என்று பேசியுள்ளார்.