Skip to main content

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை: வானதி சீனிவாசன் 

Published on 02/03/2018 | Edited on 02/03/2018


 

narendra modi karthi chidambaram

 

ப.சிதம்பரம் 2007-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கான அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கிடைத்த முதலீட்டு தொகையை, குறைத்து காட்டுவதற்கு உதவி செய்ததாகவும், அதற்கு ஆதாயமாக 6 கோடி ரூபாயை, தான் மறைமுகமாக நடத்தி வரும் ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் மூலம் வெளிநாட்டில் இருந்து பெற்றதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், புதன்கிழமை காலை லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
 

இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்தார். அவரிடம் கேள்விகளும், பதில்களும் வருமாறு:-
 

மோடி அரசின் தவறுகளை தொடர்ந்து ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி வருகிறார். இதனால் அவரை பழிவாங்கும் விதமாக கார்த்தி சிதம்பரத்தை மத்திய பாஜக அரசு கைது செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. கார்த்தி சிதம்பரமும் இதனையே தெரிவிக்கிறாரே?
 

கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு அல்லது சந்தேகத்தின் மீதான விசாரணை வருடக்கணக்கில் நடந்துகொண்டிருக்கிறது. ப.சிதம்பரம் ஒருவேளை இந்த அரசின் மீதான குற்றச்சாட்டை முன்வைப்பதில் தீவிரமாக இருந்தாலும் கூட, அதுவும் சமீபகாலமாகத்தான். குற்றச்சாட்டுக்களை மோடி மீது இதைவிட கடுமையாக வைத்தவர்களுக்கு இதுபோன்று நடக்கவில்லையே.

ஆக அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால்தான் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்றால், அவருக்கு முதன் முதலில் சம்மன் அனுப்பியது முதல்கொண்டு கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் எங்கள் கவுரமிக்க, மதிப்புமிக்க வாழ்க்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரை அத்தனையும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தின் பார்வையில் இருந்துகொண்டிருக்கிறது.

ஒருவேளை அரசியல் பழிவாங்கல் என்று நீதிமன்றங்கள் கருதியிருந்தால், அவர்களுக்கு உரிய பரிகாரங்களை அவர்கள் கேட்பதுபோலெல்லாம் நீதிமன்றங்கள் வழங்கியிருக்கலாம். ஆனால் அடிப்படை முகாந்திரம் இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் கருதியதால்தான் அவர் வெளிநாடு செல்ல தடை விதித்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்கள். அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு என்று இதனை சொல்ல முடியாது.

ஒன்று, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கை பொறுத்தவரை ஒவ்வொரு ஆதாரமாக இப்போது வெளிவந்துகொண்டிருக்கிறது. இரண்டாவது, அத்தனை ஆதாரங்களையும் சிபிஐ உடனடியாக மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் அது வழக்கின் தன்மையை பாதிக்கும். தன்னுடைய தகப்பனார் நிதி அமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் வாயிலாக கிரிமினல் கான்ஸ்பைரசி (குற்றவியல் சதி) உருவாக்கப்பட்டு அதன் மூலம் ஆதாயம் அடைந்திருக்கிறார். கிட்டதட்ட 20 நாடுகளுக்கும் மேலாக அவர் சம்மந்தப்பட்டிருக்கக்கூடிய அல்லது அவரால் கைமாற்றப்பட்ட நிறுவனத்திற்கு சொத்துக்கள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த சூழலில் அரசியல் பழிவாங்குதல் என்று கூறுவது தவறுகளை மூடி மறைப்பதற்காக அவர்கள் சொல்லும் பதிலாகும்.

 

Vanathi Srinivasan

வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் ஐகோர்ட் உத்தரவுபடி பிப்.28ஆம் தேதி தமிழகம் திரும்பியுள்ளார். மார்ச் 1ஆம் தேதி ஆஜராக வேண்டியிருந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியிருக்கிறார். அந்த வழக்கு 6ஆம் தேதி வரவுள்ள நிலையில் அவரை வேண்டுமென்றே கைது செய்துள்ளனர் என்கிறார்களே?

அவர் கைது செய்யப்படுவதன் வாயிலாக ஒருசில ஆதாரங்களைப் பெற்று சிபிஐ உண்மை தகவல்களை கொண்டுவர விளையும். கார்த்தி சிதம்பரம் வெளியில் இருப்பதால் மற்ற முக்கியமான ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சிபிஐ நினைத்தால் அவரை கைது செய்யலாம். நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்காத நிலையில் அவரை எப்போது வேண்டுமானாலும் கைது செய்வதற்கு சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது.

அனைத்து விசாரணைகளுக்கும் ஆஜராகியுள்ள கார்த்தி சிதம்பரத்தை பழிவாங்குகின்றனர் என்கிறார்களே?

ஒருவர் விசாரணைக்கு ஆஜராவதாலேயே அவரை கைது செய்யக்கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை.

மிகப்பெரிய மோசடிகளை செய்தவர்களெல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களை இந்தியா கொண்டுவர பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்கிறார்களே?

மோசடி வழக்குகளில் சிக்கியவர்கள் ஒருசிலர் வெளிநாடு சென்றிருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை. அவர்கள் யாருடைய காலத்தில் வங்கி கடன்களை பெற்றிருக்கிறார்கள். முறைகேடு செய்திருக்கிறார்கள்  என்றால், இவர்கள் எல்லோருமே கிட்டதட்ட 15 வருங்களுக்கு மேல் வங்கிகளில் தொடர்பு வைத்து அதன் வாயிலாக ஆதாயம் பெற்றவர்கள். வெளிநாடு சென்றவர்களைக்கூட நம்நாட்டிற்கு கொண்டுவருவதற்கான சட்ட முயற்சியும் கனிசமான முன்னேற்றத்தையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் மல்லையா வழக்காக இருக்கட்டும், லலித் மோடி வழக்காக இருக்கட்டும். அதனால் சர்வதேச அளவில் இருக்கக்கூடிய நபர்களை இந்தியா கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசாங்கம் எந்த பின்னடைவும் இல்லாமல் செய்துகொண்டிருக்கிறது. அவர்களெல்லாம் சென்றுவிட்டார்களே இவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் யாரையுமே இந்த நாட்டில் கைது செய்ய முடியாது. எல்லோருமே விஜய் மல்லையாவையும், நீரவ் மோடியையும் கைகாட்டிவிட்டு எங்களை ஏன் இந்த அரசாங்கம் பண்ணனும் என்று கேட்டால், சட்டத்தின் ஆட்சி எப்படி நடக்கும். விதிவிலக்குகளை வைத்துக்கொண்டு இங்கு நியாயம் பேசுவது என்பது இன்றைக்கு உள்ள இவர்களது வழக்குக்கு பொருந்துமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்