Skip to main content

மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 08/04/2025 | Edited on 08/04/2025

 

namakkal dt mohanur andapuram village incident CM MK Stalin condolences

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டத்திற்கு ஆண்டாபுரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், “நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்து வரும் இளஞ்சியம் (வயது 50) என்பவர் தனது மகன்வழிப் பேரன் சுஜித் (வயது 5) மற்றும் மகன்வழிப் பேத்தி ஐவிழி (வயது 3) ஆகிய மூவரும் நேற்று (07.04.2025) பிற்பகல் 03.00 மணியளவில் தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.  அப்போது நேற்று முன்தினம் (06.04.2025) இரவு வீசிய பலத்த மழை மற்றும் காற்றினால் மின் கம்பிகள் சேதமடைந்து விவசாய நிலத்தில் இருந்த இரும்புக் கம்பிவேலி மீது விழுந்தது.

இந்நிலையில், அந்தக் கம்பிவேலியை மேற்படி மூவரும் தொட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்