
நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் நடந்த பின்பு பெரும்பான்மை வாக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, வக்ஃப் வாரிய புதிய சட்டம் இந்தியா முழுவதும் இன்று (08-04-25) அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம், இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த மசோதாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் பகுதியில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக இன்று (08-04-25) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக்காரர்கள் அப்பகுதியில் உள்ள முக்கிய சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது.
போலீஸ் வாகனம் உள்பட பல வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டது, கற்கள் வீசப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த மோதல்களுக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்தை, பாஜக தலைவர் அமித் மாளவியா கடுமையாக சாடியுள்ளார்.