
தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காதது மட்டுமல்லாது துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டுக்கு எதிராகவும் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பல கட்டமாக தொடர் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பார்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதி விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
வெளியான தீர்ப்பில், 'தமிழக அரசின் பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை” என்று கடிந்துகொண்ட நீதிபதிகள், “பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி தம்ழிநாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்று பதிவு செய்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, “தமிழ்நாடு சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதாக்களை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், நிறுத்தி வைத்திருந்த ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலினின் இந்த வெற்றி தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.