இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு உடனடியாக அரசு வீட்டை ஒதுக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரச்சார செயலாளர் இராஜரத்தினம் அறிக்கை மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செய்தி தமிழக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நல்லகண்ணு இந்த நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகளை அவர் கட்சி சார்ந்த விஷயமாக மட்டுமே ஒதுக்கிவிட முடியாது.
எளிமையின் அடையாளமாக ஒரு கம்யூனிஸ்ட் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடையாளமாக வருங்காலத்தில் பொதுவாழ்க்கைக்கு வருகின்ற இளம் தலைமுறையினர் தூய்மையான பொதுவாழ்க்கைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வந்தவர் நல்லகண்ணு. அரசுக்கு ஏதேனும் ஒரு வகையில் அந்த வீடு தேவைப்படுமாயின் வேறு வீட்டை அவருக்கு ஒதுக்கிவிட்டு, அதற்குப் பிறகு இந்த வீட்டை காலி செய்ய சொல்லியிருக்க வேண்டும்.
அதைவிடுத்து தியாக வாழ்க்கை வாழும் மற்றும் இந்த முதிய வயதிலும் மக்களுக்காக சாலைகளில் வந்து போராடும் மூத்த தலைவரை அவமதிப்பது போல் தபாலில் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வை கட்சி பாகுபாடின்றி வருத்தம் அளிக்க செய்துள்ளது. ஆகையினால் உடனடியாக தமிழக அரசு நல்லகண்ணு அவர்களுக்கு உயர்வகை குடியிருப்பை, வசதியான குடியிருப்பை ஒதுக்கி கௌரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.