சாத்தூரில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், ‘காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரை ரப்பர் குண்டுகளால் சுட்டுத் தள்ளுங்கள்..’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசை பாடியதை ‘வில்லங்கப் பேச்சு’ என்னும் தலைப்பில் நக்கீரன் இணையத்தில் இன்று (23/09/2019) வெளியிட்டிருந்தோம். இது சம்பந்தமாக, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சாத்தூர் காவல் நிலையத்தில் விருதுநகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று புகார் தர, சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார் மனு ரசீது அளிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு, அவர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராசனிடம் புகார் அளித்து ஒப்புதல் சீட்டு பெற்றுள்ளனர்.
தன் மீதான விமர்சனம் குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி. “வாய்க்கு வந்தபடி அமைச்சர் போல என்னால் பேச முடியாது. அமைச்சர் மன்னார்குடி சென்று யார் காலிலே விழுந்தார் என்பது எனக்குத் தெரியும். இதையெல்லாம் சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன்.” என்று கூறிவிட்டு, மங்குனி அமைச்சர் என்றும், துடைத்தெறிய வேண்டிய அசிங்கம் என்றும் தன் சக்திக்கு ஏற்ப ராஜேந்திரபாலாஜிக்கு பதிலடி கொடுத்தார்.
“அமெரிக்கா சென்று எதைப் பார்த்தாரோ? எதைச் சாப்பிட்டாரோ? என்ன செய்தாரோ? அதன் விளைவாகத்தான் நிதானம் இழந்து, ராகுல் காந்தியையும், மு.க.ஸ்டாலினையும், அவருடைய குடும்பத்தினரையும், என் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டபடி விமர்சிக்கிறார். அவரை எம்.எல்.ஏ. ஆக்கிய சிவகாசி தொகுதி மக்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறார். யாரைக் காப்பாற்றுவதற்காக, எந்தச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக, திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் வருவதற்கு தடையாக இருக்கிறார் என்று தெரியவில்லை. 9 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும், சிவகாசியை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை கையில் எடுத்துக்கொண்டு, அதை அரசியல் தொழிலாகச் செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்துக்கே அவர் ஒரு களங்கமாக இருக்கிறார். இந்த மாவட்டத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்த ஆர்.பி. உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் போன்றவர்களை நயவஞ்சகமாக இங்கிருந்து விரட்டினார். அதற்காக யார் யார் காலில் விழுந்தார் என்பது எனக்குத் தெரியும்.
பிரதமர் மோடியை டாடி என்கிறார். மோடி இவரைப் பார்த்ததில்லையே! அப்பாவுக்கே தெரியாத பிள்ளையாக இருக்கிறார். தண்ணீர் சேமிப்பு திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஜல்சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான அத்திட்டத்தில், இந்த மாவட்டத்தில் பெரிய அளவில் தவறு நடப்பதாக நமக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனை ஆராய வேண்டும். முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்.
தமிழ்நாட்டை ஆளும் இந்த அரசாங்கத்தின் அவலநிலை என்னவென்றால், மக்களுக்குப் பணம் கொடுத்தால் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பதுதான். இந்த நினைப்பில்தான் தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொள்ளாமல், மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரை ‘செக்-அப்’ பண்ண வேண்டும். அந்த பாதிப்பிலிருந்து அவரைக் காப்பாற்ற வேண்டும். முதலமைச்சர் அதைப் பண்ணவேண்டும்.
சபாநாயாகரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இயங்கும் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு (privilege committee) ரொம்ப பவர் உண்டு. ராஜேந்திரபாலாஜியின் பேச்சுக்களை பாராளுமன்ற சபாநாயகரிடம் புகாராக எடுத்துச் செல்வேன். இங்கு டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுப்போம். அடுத்து கோர்ட் டைரக்ஷன் வாங்குவோம். என்னுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்பதுதான்.” என்றார்.
‘அட, போங்கப்பா..’ என்று மக்கள் சலித்துக்கொள்ளும் லெவலில்தான் இருக்கிறது இவர்களின் குடுமிப்பிடி அரசியல்!