
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காதது மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டுக்கு எதிராகவும் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பல கட்டமாக தொடர் விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பார்திவாலா, ஆர். மஹாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதி விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், “தமிழக அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. சட்டமன்றத்தில் 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை.
10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என த.வெ.க. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார். மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது.
இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது. மாநில உரிமை காக்கும். மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை த.வெ.க மனதார வரவேற்கிறது. தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று. மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் த.வெ.க. சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு. இதை கட்சியின் தலைவர் விஜய்யின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.