உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கரூர் எம்.பி. ஜோதிமணி பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
மக்களை வன்முறைக்குத் தூண்டுவது போல உங்கள் பேச்சு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுகின்றதே?
காங்கிரஸ் கட்சி வன்முறையில் நம்பிக்கை இல்லாத கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதும் அனைவருக்கும் தெரியும். காந்தியைக் கொன்றது யார்? அப்போதிருந்தே வன்முறையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துபவர்கள் அவர்கள். அமைதியின்பால் நம்பிக்கை என்பதே அவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆபாசத்தையும், அசிங்கத்தையும் பரப்புகின்ற வகைகளில் அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். அரசை விமர்சிப்பவர்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவது, பாலியல் ரீதியான துன்புறுத்தல்களைச் செய்வோம் என்று கூறுவதும், அவர்களை பிரதமர் பின்தொடர்வது என்று வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடந்துள்ளதா? கரு நாகராஜனை மட்டும் நான் குறை சொல்ல மாட்டேன். பா.ஜ.க.வில் இருக்கின்ற ஒவ்வொரு தலைவர்களும் அதை வழிநடத்துகிறார்கள். அதற்குப் பிறகு ஹெச்.ராஜா என்ன பேசினார். யாரையாவது கைது செய்ய வேண்டும் என்றால் முதலில் அவரைத்தான் கைது செய்ய வேண்டும்.
அவர்கள் மீது எனக்குக் கோபம் கிடையாது. பரிதாபம், வருத்தம் தான் அதிகம் இருக்கின்றது. ஒரு தேசத்தில் அன்பை அரசியல் ஆக்கலாம், ஆனால் ஆபாசத்தையும், வன்முறையையும் அரசியலாக்க முடியாது. இதை அவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வெறுப்பரசியல் வெற்றியைக் கொடுக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருபோதும் அது வெற்றியைத் தராது. கடுமையான தோல்வியையும், அவமானத்தையும் தான் அது கொடுக்கும். அவர்கள் கட்சியில் இருக்கும் பெண்களை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். அன்பையும், கருணையையும் அரசியல் படுத்த நாம் விரும்புகின்ற போது அசிங்கத்தை மட்டுமே பேசுவேன் என்று கூறும் அவர்களை எப்படி மாற்ற முடியும்.
மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறீர்களா? ரயில்களை ஏற்பாடு செய்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்களே?
"காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும், அதன் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எத்தனை கோடி நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தற்போது காங்கிரஸ் கட்சி விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அப்படி ஆளும் கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஏதேனும் தகவல் வெளியிட்டு இருக்கிறார்களா? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த நடவடிக்கைகளில் மத்திய அரசு காட்டும் சுணக்கத்தைப் போலவே அவர்கள் ஆளும் மாநில அரசுகளும் செய்து வருகிறார்கள்.
பிரதமர் நிவாரண நிதி என்ற பொது நிவாரண நிதி கணக்கு இருக்கும் போது பி.எம். கேர் என்ற ரகசிய வங்கிக் கணக்கை ஆரம்பிக்கிறீர்கள். அதில் இதுவரை எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதையாவது தெரிவித்துள்ளீர்களா? அந்தப் பணத்தை யாருக்காவது நிவாரணம் வழங்க கொடுத்துள்ளீர்களா? குறைந்த பட்சம் பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களுக்காவது அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளீர்களா? ஏன் இந்த அலட்சியம். மக்களை மனிதர்களாகக் கூட நினைக்க மாட்டீர்களா? இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது. அராஜகத்தின் மொத்த உருவமாக தற்போதைய மத்திய அரசு செயல்படுகின்றது" என்றார்.