பா.ஜ.க.வில் இணைந்த ஜீவஜோதிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு சென்ற வேதரத்தினத்துக்கு போட்டியாக களம் இறக்கவே ஜீவஜோதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ.க.விலிருந்து தி.மு.க.வுக்கே திரும்ப வந்த வேதாரண்யம் தொகுதியின் (மூன்று முறை எம்.எல்.ஏ.) வேத ரத்தினம், தாய்க் கழகப் பணியில் பிஸியாகிவிட்டார். கலைஞர் நினைவுதினத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததால் ஆடிப்போனது பா.ஜ.க. கூடாரம். இந்த நிலையில்தான், வேதரத்தினத்தின் ஊர்க்காரரும், ஒருவகையில் உறவுக்காரப் பெண்ணுமான, ஹோட்டல் சரவணபவன் அண்ணாச்சி விவகாரத்தில் தமிழகம் அறிந்த ஜீவஜோதியை வேதரத்தினத்திற்கு போட்டியாகக் களமிறக்கி, கொடியேற்று விழாவையும் நடத்தியிருக்கிறார் பா.ஜ.க.வின் கருப்பு முருகானந்தம்.
இதற்கிடையே, வேதாரண்யம் எம்.எல்.ஏ. சீட்டை வாங்கிவிட, தி.மு.க.வில் ஏகப்பட்ட போட்டி நிலவுவதால், வேதரத்தினத்திற்கு சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான். ஒருவேளை அவரையே தி.மு.க. தலைமை களமிறக்குமானால், எப்பாடு பட்டாவது அவரைத் தோற்கடிக்கவே ஜீவஜோதியைக் களமிறக்கி இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள்.
இதுபற்றி ஜீவஜோதியிடம் கேட்டபோது, "நான் யாருக்கும் எதிராகவோ, மாற்றாகவோ அரசியலுக்கு வரவில்லை. விரும்பியே பா.ஜ.க.வில் ஓராண்டுக்கு முன்பே இணைந்து, கட்சி வேலைகளிலும் ஈடுபடுகிறேன். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை நிறைவேற்றுவதை கடமையாக நினைக்கிறேன்'' என்றார்.
"வேதரத்தினம் திரும்பி வராமல் போயிருந்தாலும் வேதாரண்யத்தில் தி.மு.க.வை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. பா.ஜ.க. இங்கு மூன்றிலக்கத்தில் வாக்கு பெற்றாலே பெரிய விஷயம். ஜீவஜோதியெல்லாம் எங்களுக்குப் பொருட்டே கிடையாது'' என்கிறார்கள் வேதாரண்யம் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.